Thursday, October 26, 2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (1)




புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ‘நூற்களை விழுங்கிய நுண்ணறிவாளர்’; அவரின் புத்தகக் காதல் என்றும் தணியாத காதல்.

அவரது இல்லத்தில் புத்தகங்கள் ‘ஆக்கிரமிக்காத’ இடங்களே இல்லை; ஆம்! ‘ராஜகிரகா’வின் நூலகம் - தலைசிறந்த எடுத்துக்காட்டான தனியார் நூலகம் (Private Library).

அந்தக் காலகட்டத்திலேயே அந்நூலகத்தில் இடம்பெற்ற நூல்களின் எண்ணிக்கை 69,000 ஆகும்!

பெரும்பாலான அவரது நூல்களை - சேகரிப்புகளை அவர் உருவாக்கிய கல்வி அறக்கட்டளையான மக்கள் கல்விக் கழகத்திற்கே (People’s Educational Society) (நிறுவிய ஆண்டு 8.7.1945) அளித்துள்ளார்! அக்கல்விக் கழகம் என்ற அறக்கட்டளை அமைப்பு - பல கல்லூரிகளை மும்பையில் நடத்துகிறது. இது பாபா சாகேப் அவர்களது இறுதிக்கால ஏற்பாடு.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிடும் பொறுப்பை ‘தாக்கர் அன்ட் கோ’ என்ற வெளியீட்டகம் ஏற்று, அவரது நூல்களைக் கொண்டு வந்தது.

அதில் நூல்களைப் பதிப்பிக்கும் மேலாளராக, நூற்களைப் படித்து, வாசகர்கள் தேவைக்கு ஏற்ப சில பகுதிகளை மாற்றியோ, சுருக்கியோ, பெருக்கியோ, வரிசையை மாற்றியோ வெளிவர ஏற்பாடு செய்யும் பணியில் இருந்தவர் யு.ஆர்.ராவ் என்பவராவார்.

அம்பேத்கரின் புத்தகக் காதல், அளவற்ற ‘மோகம்' பற்றி அவர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் நூற்களை பதிப்பிக்கவும், மேற்பார்வையிட்டு செப்பனிட்டுத் தரும் கடமையும், உரிமையும் உள்ளவராக இந்த யு.ஆர்.ராவ் அக்கம் பெனியாரால் நியமிக்கப்பட்டு, பணியாற்றியவர். அவர் டாக்டர் அம்பேத்கருடன் நெருங்கிப் பழகிடும் வாய்ப்புகளை நிரம்பப் பெற்றவர். இவர் 1945 முதல் 1949 வரை அப்பதிப்பகத்தில் பொறுப்பேற்று பணி யாற்றிய நிலையில், அவர் கூறும் பல்வேறு செய்திகள் மிகவும் ஈர்ப்பானவை.

பழைய பம்பாய் நகரில் டாக்டர் (அம்பேத்கர்) இருக்கிறார் என்றால், அவர் இவர்களது பதிப்பகம் - விற்பனையகத்திற்கு வராமல் இருக்கவேமாட்டாராம். தாக்கர் அன்ட் கோவிற்கு வந்து, அவர்களது பிற வெளியீடுகள், நூல்களையும் பார்த்து, விலை கொடுத்து வாங்கிக் கொண்டே செல்வார் என்கிறார் யு.ஆர்.ராவ்.

புத்தகங்கள்மேல் அவருக்கு எவ்வளவு தீராத ஆசை - ‘மோகம்‘ தணியாத ஒன்றோ அதேபோன்ற இன்னொரு ஆசை - சிறுபிள்ளைகளுக்குப் புதுப்புது பொம்மைகளைக் கண்டால் எப்படியோ, அப்படி - அக்கம்பெனியின் விற்பனைப் பிரிவான ‘ஸ்டேஷனரி’ பிரிவில் பல்வகையாக - நீளம், குட்டை, பல வண்ணங்கள் என்ற பல மாதிரி புத்தம் புதிய பேனாக்கள், எழுதுகோல்களைப் பார்த்து, எழுதி எழுதிப் பார்த்து ஏராளமானவற்றை விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயங்கவே மாட்டார்! ஒரு அரை டஜனுக்குக் குறையாமல் வாங்கி தனது கோட் பாக்கெட்டில் அடைத்துக் கொள்வாராம்.

தந்தை பெரியாருக்கும் சரி, நமது கலைஞருக்கும் சரி - அம்பேத்கருக்கும் இதில் உள்ள ஒற்றுமை - பலவகை பேனாக்களை வாங்கிப் பயன்படுத்துவது (நீளமானது, தடித்தது, பெரிய அளவு), எல்லாவற்றின் மீதும் இந்தத் தலைவர்களுக்கு அப்படி ஒரு தீராத கொள்ளை ஆசையாம்!

இந்த வெளியீட்டகத்தில் அவருக்கு அவரது புத்தக விற்பனையின்மூலம் கிடைக்கும் உரிமத் தொகை - ராயல்டியை ரொக்கமாகவோ, காசோலை மூலமோ எடுத்துச் செல்வதே அரிது; அபூர்வம்; காரணம், அத்தொகை முழுவதற்குமோ அல்லது பெரும் அளவுக்கோ அவர்கள் அக்கம்பெனியில் விற்கப்படும் பல புதிய வெளியீட்டு நூல்களையே விலை கொடுத்து வாங்கிப் போவாராம்! அவரது பொருளாதார நெருக்கடிபற்றி அப்போது அவர் சிந்திப்பதே கிடையாதாம்!

பழைய புத்தகங்கள் விற்பனை நிலையங்களைக் கூட டாக்டர் விட்டு வைப்பதே இல்லை.

அவைபற்றி பல சுவையான தகவல்களை நாளை படிப்போம்!''

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...