அகமதாபாத் செப். 8 ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம், மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ்தான் தேர்வு வேண்டும் என்று கூறி பிஜேபி ஆளும் - குஜராத்தில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.
அரியலூரில் அனிதா என்னும் ஏழை மாணவி
மருத்துவம் படிக்க முழுத்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தனது கனவு சிதைந்து
போனதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தமிழகம் எங்கும்
மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்போது குஜராத்திலும்
ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வில் ஆங்கில வழிக்கும் குஜராத்தி வழிக்கும்
தனித்தனி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதில் ஆங்கில வழியில் கேட்கப்பட்ட
கேள்விகள் சுலபமாகவும், குஜராத்தி வழியில் கேட்கப்பட்ட கேள்விகள்
கடினமாகவும் இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்களால் சொல்லப் படுகிறது.
நுழைவுத் தேர்வு என்பது எந்த மொழி வழியில்
படித்தாலும் ஒரே கேள்வியாக இருக்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி
உயர்த்தி உள்ளனர். அனிதாவைப் போன்றே பல மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 90%
க்கு மேல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு மதிப்பெண்கள் குறைந்ததால்
மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
குஜராத்தின் அரோல்லி பகுதியைச் சேர்ந்த
17 வயது மாணவர் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவக்
கல்லூரியில் சேரும் ஆசையுடன் இரவும் பகலும் படித்து 92% மதிப்பெண் 12ஆம்
வகுப்பில் வாங்கிய அவரால் நீட் தேர்வில் 292/700 மதிப்பெண் தான் வாங்க
முடிந்தது.
அவருடைய தகுதி (ரேங்க்) 3881 ஆனதால் அவர்
மருத்துவக் கனவு நிராசை ஆனது. அவருக்கு புஜ் நகரில் உள்ள மருத்துவக்
கல்லூரியில் ரூ. 17 லட்சங்கள் கொடுத்தால் இடம் தர நிர்வாகம் தயாராக
இருந்தது. ஒரு ஏழை விவசாயியின் மகனால் அவ்வளவுப் பணம் புரட்ட முடியாததால்
அந்த இடமும் பறி போனது.
குஜராத்தி வழியில் தனியாகவும், ஆங்கில
வழியில் தனியாகவும் தகுதிப் பட்டியல் போடும்படி மாணவர்கள் கோரிக்கை
விடுத்தனர். அவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் ஒரே தர வரிசைப் பட்டியலை
அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
இவரைப் போல வேறு பல மாணவர்களும் உள்ளனர்.
கிராமப்புற மாணவர்களான அவர்கள் அகமதாபாத் நகருக்குச் சென்று நீட்
தனிப்பயிற்சி நிறுவனங்களில் படிக்கப் போவதாக சொல்கிறார்கள். அதே
நேரத்தில், நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்த ஹனி படேல் என்னும் மாணவி,
"குஜராத் அரசுப் பள்ளியில் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. கிராமப் புற
குஜராத்தி வழி மாணவர்களுக்கு தனிப் பயிற்சியகங்களில் படிக்கச் செலவு செய்ய
வேண்டியுள்ளது. தவிர தரமான தனிப் பயிற்சியகங்கள் என்பதும் இந்த
மாநிலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. தனி தரவரிசை பட்டியல் போடாமல்
அரசு எங்களை ஏமாற்றி விட்டது. நான் இப்போது என் டாக்டர் கனவுக்காக
ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்துள்ளேன்" எனக் கூறினார்.
மேலும் பல மாணவர்களும், குஜராத்தி வழி தனி
தேர்வுத்தாள் தந்ததற்குத் தங்கள் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பலர் சரியான பயிற்சியகங்கள் இல்லாததால் ஒரு வருடம் காத்திருந்தாலும் நீட்
தேர்வில் வெற்றி பெற முடியாது என்னும் எண்ணத்தில் உள்ளனர். அவர்களின்
ஒட்டு மொத்த கருத்து, மருத்துவக் கல்லூரிக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை
மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும். நீட் தேர்வே வேண்டாம் என்பதே!.
குஜராத் மாநில கல்வி அமைச்சர்
பூபேந்திரசிங், "இந்த அரசு நீட் தேர்வுக்கும், அரசு தேர்வுக்கும் இடையில்
வித்தியாசம் இருப்பதைக் களைய முயன்று வருகிறது. குஜராத் மாநிலக் கல்வி
திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடப் புத்தகங்களை
அரசே அளிக்கும். நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகையிலேயே இனி அரசுத்
தேர்வுகளும் அமையும். வரும் 2018 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சி பி எஸ்
சி பாடத் திட்டத்தில் கல்வி மாற்றப்படும்" என தெரிவித்துள்ளார். அதாவது
"குல்லாய்க்காக தலையை வெட்ட வேண்டும்" என்கிறார்.
No comments:
Post a Comment