நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் துலாக்கடம் என்று சொல்லப்படுகிற காவிரிக்கரையில் அரசு ஏற் பாட்டில் 'மஹா புஷ்கர விழா' நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் கடந்த மூன்று மாதங்களாகவே வெகுஜோராக நடைபெற்று வருகின்றன.
வரும் செப்டம்பர் 12 முதல் 24ஆம் தேதி வரை
நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக முதல மைச்சர் மற்றும்
சங்கராச்சாரிகள் முதல் சவுண்டிகள் வரை கலந்து கொள்ள இருப்பதாகக்
கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரும், மந்திரிமார்களும் தொடர்ந்து பலமுறை
புஷ்கர விழா ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, தனியார்
வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என தாராளமாய் பணம் செலவிடப்படுவதாகத்
தெரிகிறது.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி
மாவட்டம், புதிய பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை
மருத்துவ மனை, சுற்றுவட்டப் பாதை என பல கோரிக்கைகள் பல்லாண்டுகளாய்
கோரிக்கையற்று கிடக்கும் மயிலாடு துறையில் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம்
என்பது போல் வரிந்து கட்டிகொண்டு ஆட்சியாளர்கள் புஷ்கர விழாவிற்கு
வேலைசெய்வதை பார்க்கின்ற எவராலும் இத்தகைய செயலை விமர்சிக்காமல் இருக்க
முடியாது.
இந்த விழா நடந்துவிட்டால் நாட்டில்
பாலாறும், தேனாறும் ஓடும் என்கிற ரேஞ்சுக்கு "தினமலர், தினமணி, இந்து"
போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுரைகளை பிரசுரித்த வண்ணம்
இருக்கின்றன.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு
அதிபதியானவராம் பிரம்மன். அதில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி,
கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, தர்மபத்ரா, சிந்து, பிராணஹிதா
ஆகிய பன்னிரண்டு நதிகள் மட்டும் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவையாம். குருபகவான்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது
அந்த ராசிக்குரிய நதிக்கரையில் இந்த புஷ்கர விழா நடத்தப்படுகிறதாம். 12
ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விழா காவிரி துலாம் ராசியில்
இருப்பதால் இப்போது காவிரிக்கு கொண்டாடப்படுகிறதாம்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மஹா புஷ்கர
விழா என்று அழைக்கப்படுகிறதாம். இந்த புஷ்கரம் நடக்கும் காலத்தில் சிவன்,
பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், மகரிஷிகள் எல்லோரும் வாசம் செய்வதால் இந்த
நேரத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தங் களில் ஸ்னானம் செய்த
பலனும் புண்ணியமும் கிட்டுமாம். இக் காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது
ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்கள் உடனே அகன்று விடும் என தர்மசாஸ்திரம்
சொல்கிறதாம். இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்துகொண்டே செல்கிறது அந்த
பார்ப்பன பத்திரிக்கைகள்.
நட்சத்திரங்களையும், துணைக்கோள்களையும்
கிரகமாக கணக்கிட்டு நவக்கிரஹம் என்று சொல்லி அதன் அடிப்படையில்
மனிதர்களுக்கு ராசிகளை உருவாக்கிய புரோகிதக் கூட்டம் நதிகளுக்கும் ராசி
சொல்கிறது! சூரியனும், சந்திரனும் கிரகங்களா? நீங்கள் சொல்லும்
நவகிரகங்களில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற பிந்தைய
கண்டுபிடிப்புகள் உங்கள் ஜாதகத்தில் உண்டா? என பகுத்தறிவாளர்கள்
காலாகாலமாய் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை எவராலும் பதில் சொல்ல
முடியவில்லையே!.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு
அதிபதியானவராம் பிரம்மன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல் லுங்கப்பா
என்கிற வழக்குசொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மூன்றரை கோடி
தீர்த்தங்களாமே? எவை எவை என பட்டியலிட முடியுமா? இக் காவிரியில் புனித
நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்கள் உடனே அகன்று விடும் என
தர்மசாஸ்திரம் சொல்கிறதாமே? பின் காவல்துறையும், நீதிமன்றங்களும்,
சிறைச்சாலைகளும் எதற்கு? சங்கராச்சாரிகள் இதுவரை செய்த பாவங்கள் போதாதென்று
இனி செய்யத்திட்ட மிட்டிருக்கும் பாவங்களையும் சேர்த்துப் போக்கத்தான்
இங்கு வருகிறார்களோ?
கவேரன் என்கிற ராஜரிஷி புத்திரப்பேறு
வேண்டி பிரம்மாவை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தானாம். இதைக்கண்ட பிரம்மன்
காவிரியை பெண்ணாக்கிட அவளை அகஸ்தியரிஷி மணந்து தனது கமண்டலத்தில்
வைத்துகொண்டானாம். கமண்டலத்திலிருந்த காவிரியை கணபதி காக்கை உருவில் வந்து
உருட்டிவிட அது கவே ரன் ரிஷியின் மகளாக பாய்ந்ததாம். இப்படி பல ரிஷி களின்
தொடர்போடு உருவாகியதாம் காவிரி.
காவிரி வறண்டு பல காலம் ஆகிவிட்டது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து
தினம் ஒரு அவதாரம் எடுத்து டில்லி தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புஷ்கர
காலத்தில் வாசம் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் சிவன் வகைய றாக்களுக்கு இவை
யெல்லாம் தெரியாதா? குறைந்தபட்சம் புஷ்கரவிழாவின் பொழு தாவது காவிரி
கரைபுரளாதா? புண்ணியங்களைப் போக்குவது இருக் கட்டும். புனித நீராடுவதற்கான
தண் ணீரைக் கூட கடவுள் அருள்பாலிக்க மாட்டாரா? அப்படி ஒரு அதிசயம்
நடக்கும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை கூட விழா ஏற்பாட்டாளர் களுக்கோ,
பக்தகோடிகளுக்கோ வராமல் போனதால்தான் புஷ்கரவிழாவை யொட்டி மயிலாடு துறை
காவிரிக்கரை துலாக்கடப் பகுதியில் நீர்த்தேக்க தொட்டிகளை கட்டி பம்பு
செட்டுகளை வைத்து தண்ணீர் நிரப்பும் முயற்சி களில் ஈடுபட்டிருக் கிறார்களோ?
கன்மமகரிஷியை கருமை நிறம் கொண்ட மூன்று
பெண்கள் சந்தித்தார்களாம். அவர்கள் தங்களை கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய
மூன்று நதிகள் என்று அறிமுகப்படுத்திகொண்டு, 'மக்கள் அனைவரும் தங்கள்
பாவங்களை எங்களிடம் வந்து கரைத்துச் செல்வதால் கருமை அடைந்து விட்டோம்!
இதற்கு ஒரு தீர்வு வேண்டும்!'என முறையிட்டனராம். "தென் மண்டலத்தில் மாயூரம்
காவிரி துலாக்கடத்தில் புனித நீராடினால் நலம் பெறுவீர்கள்" என்று ஆசி
கூறினாராம் கன்மமகரிஷி!. இந்த கதையை இந்து தமிழ்நாளேடு
வெளியிட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதை வெளியிட்டு மோடிக்கும்
சொல்லி அனுப்பியிருந்தால் புனித கங்கை எனும் பெயரில் பல கோடிகளை
பாழடித்துவரும் மோடி அரசு புஷ்கர விழாவில் கலந்துகொள்ள இருக்கும்
சங்கராச்சாரிகளிடம் கங்கை, யமுனை, சரஸ்வதிகளை தங்களோடு கூட்டிச் செல்லுமாறு
வேண்டுகோளாவது விடுத் திருக்கும். சங்கராச்சாரிகளும் சந்தோஷ மாக புனித
நீராடியிருப்பார்கள்!
- கி.தளபதிராஜ்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- கவுரி லங்கேஷ் படுகொலை இந்திய ஜனநாயகத்தின் கருப்புநாள்
- விவேகானந்தர் கண்ட பைத்தியக்காரர்களின் புகலிடம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment