மதுரை முருகேசன் இல்லத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர்
மதுரை, ஜூலை 14- மற்ற மதங்களில் எல்லாம் சில்லரை சில்லரையாக பாவங்களைப் போக்கலாம்; ஆனால், அர்த்தமுள்ள ஹிந்து மதத்திலோ ஒட்டுமொத்தமாக ஒரே தடவையில் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றால், மதங்களால் ஒழுக்கம் வளருமா என்று சிந்திக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மதுரையில் 9.7.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை மாவட்ட இணைச் செயலாளர் தொப்பி நா.முரு கேசன் - சு.இளமதி, மு.கவின்மதி ஆகியோரின் ‘பெரியார்’ இல்லத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.
வீடு கட்டும் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய ஒப்பந்தக்காரர், வடிவமைப்பாளர், பணியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். புதிய இல்லம் கட்டிய இணையருக்கு இயக்க நூல்களைத் தமிழர் தலைவர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கவின்மதி வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராசா, சாமி.திராவிடமணி, வழக்குரைஞரணி செயலாளர் நீதியரசர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தொகுப்புரை யாற்றினார்.
பங்கேற்றோர்
மதுரை மண்டலத் தலைவர் முருகானந்தம், மதுரை மண்டல செயலாளர் பவுன்ராசா, மாவட்டத் தலைவர்கள் முனியசாமி, எரிமலை, சிவகுருநாதன், மாவட்டச் செயலா ளர்கள் வேங்கை மாறன், மோதிலால், கணேசன், திண்டுக் கல் மண்டலத் தலைவர் வீரபாண்டி, மாநில ப.க. தலைவர் வா.நேரு. மோகனா அம்மையார், என்னாரெசு பிராட்லா, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பேராசிரியர் நம்.சீனிவாசன் மற்றும் மதுரை மாவட்டத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
பெரியார் இல்லம் திறப்பு
மிகுந்த மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு, நெகிழ்ச்சி யோடு நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் முருகேசன், இளமதி, கவின்மதி ஆகியோரின் இல்லமான ‘பெரியார்’ இல்லத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய அருமைப் பேத்தி கவின்மதி அவர்கள் பேசிய உரையில் மிகத் தெளிவாக ஒரு கருத்தை சொன்னார். பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற ஒரு குடும்பம். நல்லதோர் குடும்பம். நல்ல குடும்பம் - புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லியதைப்போல, ஒரு பல்கலைக் கழகம்.
இந்தக் குடும்பம் ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகம் என்று சொன்னால், அது மிகையாகாது. அதற்கு ஆதார மாகத்தான் தோழர் செல்வம் அவர்கள் வெள்ளை அடித்தப் பிரச்சினையில் மிகத் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.
பல பேர் தங்களுடைய தவறுகளை மறைப்பதற்கு வெள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள் - மற்ற வாழ்க்கை முறையில் இருப்பவர்கள். எங்கள் தோழர்கள் வெள்ளை யடிக்கும்போதுகூட தவறு நடக்கக்கூடாது என்று கவன மாக இருப்பவர்கள் என்பதை அந்த நிகழ்வின்மூலமாக அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
தொப்பி முருகேசன் வந்துவிட்டாரா?
இந்நிகழ்வைப் பொறுத்தவரையில், இது நம் குடும்ப நிகழ்வு. அவர் சொல்லியதைப்போல, இவருடைய மண விழாவினை - முருகேசனை நான் எப்பொழுதும் முழுப் பெயரை சொல்லி அழைப்பதில்லை. அவருடைய அடை யாளத்தை மட்டுமே சொல்லி செல்லமாக அழைப்பேன். அது உங்களுக்கு நன்றாக தெரியும். அடையாளம் என்று விரிவாக சொல்லவேண்டிய அவசியமில்லை. தொப்பி முருகேசன் வந்துவிட்டாரா என்று தான் கேட்பேன். அவ்வளவு அன்பொழுக இருக்கக்கூடிய ஒரு பாச மிகுந்த கொள்கைக் குடும்பம் இது.
பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள்
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய ஒரு அற்புதமான உறவு என்பது இருக்கிறது -அது ரத்த உறவுகளைவிட கடின மானது, இறுக்கமானது, அதுதான் மிக முக்கியம். கண் ணீரைவிட ரத்த உறவு இறுக்கமானது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், ரத்த உறவை விட மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது - அதுதான் கொள்கை உறவு. அதற்கு ஜாதியில்லை, கட்சியில்லை, மதமில்லை. அதுதான் சுயமரியாதை உணர்வு.
நாங்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பழகியவர்கள். ஒரு குடும்பமாக இங்கே இருக்கிறோம். ஆனால், யாருக்கும் யார் என்ன ஜாதி என்று தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் கிடையாது. அப்படி ஒரு நல்ல உறவு.
பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் - அவர் தெளிவாக குழந்தையின் மூலமாக சொன்னதைப்போல, நாணயம், நேர்மை, ஒழுக்கம், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காதது, பிறரை ஏமாற்றாதது என்பதுதான் மிக முக்கியம்.
மூத்திரக் குளத்தில் மூழ்கி எழுந்தால் பாவம் போகுமாம்!
காரணம் என்னவென்றால், அடிப்படை தத்துவ ரீதியாகவே, அவர்களை சங்கடப்படுத்துவதற்காக யாரும் நினைக்கக்கூடாது, உண்மையைச் சொல்கிறோம். அவர் களுக்கெல்லாம் ஒவ்வொரு வழி வைத்திருக்கிறார்கள். நீங்கள் பாவம் செய்திருந்தால், வியாழக்கிழமை அன்று சென்று வழிபட்டால், பாவம் போய்விடும். இன்னொருவர் வெள்ளிக்கிழமை அன்று சென்றால், பாவம் போய்விடும். இன்னொரு மதத்தில் ஞாயிற்றுக்கிழமை போனால், பாவம் போய்விடும். பிறகு திங்கள் கிழமையிலிருந்து புதுக் கணக்கை ஆரம்பிக்கலாம். அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், இப்படி சில்லறை சில்லறையாக பாவத்தையெல்லாம் கழித்தால்கூட, மிச்ச மீதி பாவம் ஒட்டுமொத்தாக இருந்தாலும், 12 ஆண்டுகளாக சேர்த்து வைத்து - மகாமகக் குளத்தில் முக்கி எழுந்து விட்டால் போதும், பாவம் போய்விடுமாம். அது மூத்திர வாடை அடித்துக் கொண்டிருக்கும், அது வேறு விஷயம். ஆனாலும்கூட, அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் ஒழுக்கம் வளருமா?
நாத்திக நன்னெறியாளர்களைப் பொறுத்தவரையில்...
ஆனால், பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், நாத்திக நன்னெறியாளர்களைப் பொறுத்தவரையில் தவறு செய்யக்கூடாது. ஒழுக்கக் கேட்டிற்கு ஆளாகக்கூடாது. ஆனால், தண்டனையிலி ருந்து தப்பக் கூடாது, அதுதான் மிக முக்கியம். இதுதான் வள்ளுவருடைய நெறியும்கூட. அதுதான் திராவிட சமு தாயத்தின், தமிழர் சமுதாயத்தின் நெறி.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றென்ன செய்யாமை நன்று!
என்ற குறளுக்கு என்ன பொருள் என்றால்,
தவறு செய்யாதே! தவறு செய்தால், தண்டனையை அனுபவிப்பதற்குத் தயாராக இரு. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று குறுக்குவழிகளில் ஈடுபடாதே!
மதவாதிகள் என்ன சொல்கிறார்கள்?
ஆனால், மதவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்துகொள்ள லாம். அதற்காக தலைமுடியை நீக்கிக் கொண்டால் போதும், உண்டியலில் காசு போட்டால் போதும், வேண்டுதலை நிறைவேற்றினால் போதும் - அதிலும் கெட்டிக்காரனாக இருப்பவன், வெல்லத்திலேயே பிள்ளையாரை செய்து வைத்து, அதிலேயே கொஞ்சம் கிள்ளி காணிக்கையாக வைத்து உள்ளே எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். இப்படிப்பட்ட சூழல்கள் இன்றைக்கு இருக்கின்றன.
தொப்பி முருகேசன் அவர்கள் எளிய ஒரு தொழில் செய்கிறார். அந்தத் தொழிலை நாணயமாக நடத்தி, அதில் வருவாய்க்கு உட்பட்ட செலவு - அதில் இப்படிப்பட்ட அற்புதமான ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்.
வீட்டைக் கட்டிப் பார் - கல்யாணத்தை செய்து பார்
இங்கே பேசிய பேத்தி, தாத்தாதான் எங்களுடைய அப்பாவிற்கும், அம்மாவிற்கும் நடைபெற்ற திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தாத்தாதான் இந்த வீட்டையும் திறந்து வைக்கிறார் என்று சொல்லியது.
பெரியார் தாத்தா பெயரில்தான் வீடு இருக்கிறது - பெரிய தாத்தா பெயரில் என்பதுதான் மிக முக்கியம்.
இந்தக் குடும்பம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நம்மூரில் ஒன்றைச் சொல்லி மிரட்டி வைத்திருக்கிறார்கள் - வீட்டைக் கட்டிப் பார் - கல்யாணத்தை செய்து பார் என்று.
இந்த இரண்டையும் சுலபமாகச் செய்யக்கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள் என்பதை இந்தப் பெரியார் இல்லத் திறப்பு நிகழ்ச்சி தெளிவாக உணர்த்தும்.
இந்த வீட்டை நன்றாக சுற்றிப் பார்த்தாலும், பூசணிக்காய் எங்கேயும் இருக்காது. ஆனால், நம் நாட்டில் பூசணிக்காயை உபயோகிக்காமல் இருக்கமாட்டார்கள். கிரகப் பிரவேசம் என்பார்கள் - இது தமிழ்ச்சொல் அல்ல.
பெரியார் இல்லத் திறப்பு விழா என்று அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள் - தனித்தமிழில்.
பஞ்சகவ்யம் என்பது என்ன?
நுழையக்கூடாதது நுழைந்தது - நடக்கக்கூடாதது நடந்தது.
முருகேசன் அவர்களும், நம்முடைய இளமதி அவர் களும் வைதீகக் கருத்துகளுக்கு ஆளாகியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? வீடு திறப்பிற்கு என்னை அழைத் திருக்க மாட்டார்கள். மாட்டை அழைத்து வந்து, ரிவர்ஸ் கியரில் விடுவார்கள். அதற்குப் பின்னால் ஒரு சொம்பை வைத்துக்கொண்டு, அதனுடைய மூத்திரத்தைப் பிடிப் பார்கள். பிறகு அய்யர் வந்தவுடன், எந்த அய்யர்மீதும் நமக்குத் தனிப்பட்ட முறையில் கோபம் கிடையாது.
அவர் வந்தவுடன் என்ன செய்வார் என்றால், அதில் பால், தயிர், மோர் அத்தனையும் போட்டு அதனை பஞ்சகவ்யம் என்று சொல்வார். பஞ்சகவ்யம் என்பது என்ன செவ்வாய்க் கோளில் இருந்து கொண்டு வந்த ஸ்பெஷல் மிக்சரா அது.
மூத்திரத்தைக் குடிக்கிறாயா? என்றால்...
பஞ்சகவ்யத்தை அவர் கொடுத்தால், இவர் குடித்து, இவர் குடும்பத்தினரையும் குடிக்க வைத்து, இது போதா தென்று, தலையில் ஒன்றும் இல்லை என்று காட்டுவதற்காக தலையிலும் தடவிக்கொண்டு, கொடுத்தவரிடம் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘நீங்கள் அடுத்த முறையும் வந்து இதுபோன்று கொடுக்கவேண்டும் என்று சொல்லி, 50 ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள், 100 ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள்’’ என்பார்கள்.
பகுத்தறிவிற்கும், பகுத்தறிவு இல்லாதவர்களுக்கும் இதுதான் வித்தியாசம்.
அண்மையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில்கூட சொன்னேன், சாதாரணமாக ஒருவரிடம் மூத்திரத்தைக் குடிக்கிறாயா? என்றால், என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்துவிட்டாயா என்று கன்னத்தில் ஓங்கி அறைவான்.
ஆனால், பஞ்சகவ்யம் குடிக்கிறாயா என்றால், கொடுங் கள், கொடுங்கள் என்று வாங்கிக் குடித்துவிட்டு, கொடுத்த வருக்கு பணம் கொடுக்கிறான்.
ஆக, அந்த அடிப்படை எவ்வளவு நாசமாகப் போய் விட்டது பாருங்கள். பகுத்தறிவு சிந்தனை வந்ததினால், இன்றைக்கு இவருடைய வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
பகுத்தறிவு என்பது வெறும் வறட்டுத் தத்துவமல்ல. அது வாழ்வியல். அந்த வாழ்வியலினால் இவருக்கு என்ன தேவையோ, அந்த அளவிற்கு வீடு கட்டியிருக்கிறார். அவர்களுடைய தேவைக்கேற்ப.
வாஸ்து என்பது தமிழ்ச்சொல்லா?
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இப்பொழுது திடீரென்று முளைத்திருக்கிறது. 50 ஆண்டு களுக்கு முன்பு இது கிடையாது. அது என்னவென்றால், வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். வாஸ்து என்பது தமிழ்ச்சொல்லா? என் பதை நினைத்துப் பாருங்கள்.
தேர்தலில் நின்று பல லட்ச ரூபாய் செலவு செய்துவிட்டு, தோல்வியுற்ற ஒருவர் மனம் நொந்து போய் உட்கார்ந் திருக்கிறார்.
அவரைப் பார்த்து ஒருவர் சொல்கிறார், ‘‘நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் என்பதற்கு இப்பொழுதுதான் சரி யான காரணத்தைக் கண்டுபிடித்தேன்’’ என்கிறார்.
தோற்றுப் போனவர் ஆர்வமுடன், ‘‘என்னங்க, அதைச் சொல்லுங்கள்’’ என்று கேட்கிறார்.
‘‘வேறு ஒன்றும் இல்லீங்க, இந்த வாசற்படியை இடித்து விட்டு, அந்தப் பக்கமாக வாசற்படியை வைக்கவேண்டும்’’ என்கிறார்.
வாசல்படிக்கு என்னமோ வாக்குரிமை இருப்பது போன்றும், அது இவருக்கு வாக்களிக்காமல் போனது போலவும் இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டிற்குள் கழிப்பறைக்கு இடமில்லை!
இப்பொழுது வீடு கட்டி முடித்தவர்கள் வீட்டை சுற்றிக் காட்டும்பொழுது, இதுதான் மாஸ்டர் பெட்ரூம், இது வரவேற்புரை, இது சமையலறை என்று சொல்வார்கள் மாஸ்டர் பெட்ரூமில் கழிவறை, குளியலறை இருக்கிறது - குளித்து மற்ற காரியங்களைச் செய்துவிட்டு வரலாம். இதுபோன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று அறைகள் இருக்கிறது என்றால், அது பெருமைதான். வாஸ்து சாஸ் திரத்தில் கழிப்பறைக்கே வீட்டிற்குள் இடம் கிடையாது.
தன்னம்பிக்கையோடு வளர்ந்த காரணத்தினால்....
ஆகவே, மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல், தன்னம்பிக்கையோடு அவர்கள் வாழ்ந்த காரணத்தினால், இன்றைக்கு முருகேசன் - இளமதி அவர்களுடைய இல்லம் இருக்கிறதே அது மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து, ஒரு சிறப்பான, தேவையான இல்லமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.
அப்படிப்பட்ட அவர்களுடைய வாழ்க்கை சிக்கனம் மிக முக்கியம். தந்தை பெரியார் அவர்கள் சிக்கனமாக வாழுங்கள் என்று சொன்னார்.
பல பேருக்கு சிக்கனத்திற்கும், கருமித்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாது. சிக்கனத்திற்கும், ஆடம்பரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.
ஆடம்பரம் என்பது தேவைக்குமேல் செலவழிப்பது - தேவையற்ற செலவு.
சிக்கனம் என்பது - தேவைக்கு செலவழிப்பது.
கருமித்தனம் என்பது தேவைக்கே செலவழிக்காமல் இருப்பது.
சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு
ஆகவே, கருமிகளாக இருக்கவேண்டிய அவசிய மில்லை. சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. அந்த வகையில், முருகேசன் அவர்கள் சிக்கனவாதி. இயக்கத் திற்காக தன்னுடைய குறிப்பிட்ட நேரத்தை அவர் செல விடுபவர். எங்களை சந்திக்கும்பொழுதுகூட, தன்னுடைய தொழிலை நடத்திவிட்டுத்தான் வந்து சந்திப்பார்.
அப்படிப்பட்ட அற்புதமான ஒரு தோழர் முருகேசன் அவர்கள். எங்களுடைய இயக்கத் தோழர், எங்களுடைய குடும்பத் தோழர். எங்களுக்குக் கொள்கை உறவுதான் மிக முக்கியம்.
சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழலாம்
ஆகவே, அவர்கள் எல்லா துறைகளிலும் இதுபோல் அவர் வளரவேண்டும். இந்நிகழ்ச்சியை கூட எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால், ஒரு பிரச்சாரத்திற்காகத்தான். நாங்கள் இந்தக் கொள்கையைப் பின்பற்றியதினால், தாழ்ந்துவிடவில்லை, வீழ்ந்துவிடவில்லை. நாங்கள் வளர்ந் திருக்கிறோம். நீங்களும் இந்தக் கொள்கையைப் பின் பற்றினால், சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழலாம் என்று காட்டியிருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் சிறப்பாக வாழவேண்டும். அது போலவே, அந்தப் பெண் குழந்தை - பேத்தி சிறப்பாக பேசினார். அவர்களையும், கவின்மதி அவர்களையும் பாராட்டி, காலத்தின் நெருக்கடியினால் உங்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விடைபெறுகிறேன்.
வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment