இந்து மதத்தில் ஏதாவது ஒரு விசேஷம் என்று ஏற்பாட செய்து பார்ப்பனீய சுரண்டலுக்கு வாசல் திறந்து வைப்பார்கள். பக்திப் போதையில் சிக்கி மக்களோ ஏன் எதற்கு என்று கேட்காமல் கண்களை மூடிக் கொண்டு ஆட்டு மந்தையாய் அவற்றையெல்லாம் நம்பி பாடுபட்டு உழைத்த பொருளை எல்லாம் புரோகிதத் தொப்பைக்குள் அறுத்துக் கட்டுவார்கள்.
வரும் ஜூன் 28ஆம் தேதி சிறீ மாணிக்கவாசகர் குரு வழிபாடாம். அதுபற்றிய புராண அளப்புகள் இதோ:
மாணிக்கவாசகரின் குருவழிபாடு
இந்துமத பண்டிகைகள் தகவல்கள் என்கிற பெயரில் கையேடுகளில் மத, புராணக் குப்பைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதத்திலும் சில நாள்களைக் குறிப்பிட்டு அதற்குரிய பண்டிகை, மத புராண கதைகளையொட்டி அந்த நாள்கள் இடம்பெற்றுள்ளன.
28.6.2017 அன்று சிறீ மாணிக்க வாசகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்தவரான மாணிக்கவாசகர் முதல் முதலில் சிவ பெருமானை குரு வடிவாக குருந்த மர நிழலில் கண்ட தாக பாடுகின்றார்.
‘குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்து
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்’
மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் பாட அதை தன்னுடைய கரங்களி னாலேயே தமிழில் எழுதி கொடுத்தான் சிவன்! அது தான் திருவாசகமாம்.
பரி, நரி- கதை
மதுரையை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் அவையில் அமைச்சராக இருந்ததாகவும், (காலம் 863 -911) 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற் றினார் என வரலாறாக காலத்தையும் குறிப்பிட்டுவிட்டு,
மாணிக்கவாசகர் - சிவன் குரு சிஷ்யக் கட்டுக்கதை களையும் அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். பொறுப்புள்ள அமைச்சரான(-?) மாணிக்கவாசகர் அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்ததைக் கண்டு, சிவன்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்து, குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.
'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித் தால் நான் உமது அடிமையாவேன்' என்ற மாணிக்க வாசகருக்கு சிவஞானத்தை போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தாராம் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவன். தன் அமைச்சர் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தும், அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாராம் பொறுப்புள்ள அமைச்சரான(-?) மாணிக்கவாசகர்.
பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.
'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்து விட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாதம் மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப் பினார்.
சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்ன னுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதி ரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச் சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசைய வில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக் கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார்.
உடனே சிவனின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் காரணப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூ ராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
வைகை வெள்ளமும் வந்தியும்
சிவனுக்கு அவன் அடியவரின் துன்பம் பொறுக்க வில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்தார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவனே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறான். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறு கிறாள். அதற்கு உடன்பட்ட சிவன் தனது 'வேலையைத்' தொடங்குகிறான்.
அன்றைய நாளில் வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
பிரம்படி
கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப் பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
அப்போது சிவனின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளை யாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்றாம்.
மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு அமைச்சராக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தாராம்.
பார்ப்பனராக சிவன்
சிதம்பரத்திலும் சிவன் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வர வேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று பார்ப்பனர் கூறினார்.
'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட பார்ப்பனர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்க வாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப் பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து விட்டு மறைந்தார்.
அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது.
மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாத வூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.
இந்தப் புராண அளப்புகளை கடுகு மூக்கு அறிவுள் ளவர்களால்கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியுமா?
அரசன் குதிரை வாங்கப் பொன் கொடுத்து அனுப் பினால், அமைச்சர் அந்தக் கடமையைச் செய்யாதது எந்த வகையில் யோக்கியமானது?
தன் பக்தனுக்காக நரியைக் குதிரையாக்கி அனுப் பியவன் கடவுளாம் - சிவனாம் இது அசல் ஒழுக்கக் கேடு அல்லவா?
அப்படிதான் நரிகளை குதிரையாக்கி அனுப்பி னானே அதிலாவது ஒரு நாணயம் இருக்க வேண்டாமா! அவை இரவோடு இரவாக ஊளையிட்டு நரிகளாக ஓடின என்றால். இந்தப் பித்தலாட்டத்தை என்னென்று சொல்ல!
இந்தக் கதைகளையும், புராணப் புளுகுகளையும், பக்தியையும் ஏற்றுக் கொள்பவன் ஒழுக்கம் உள்ளவ னாக நாணயம் உள்ளவனாக நடக்கத்தான் முடியுமா?
சுடு மணலில் நின்ற பக்தனைக் காப்பாற்ற வைகையில் வெள்ளத்தை ஏற்படுத்தினானாம்.
சிவன் என்ன அடி முட்டாளா? சுடு மண்ணில் தன் பக்தனை நிறுத்தினாலும் அந்தச் சுடுமணல் அவனை சுடாதவாறு அருள்பாலிக்க வேண்டியதுதானா?
கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் படுத்துத் தூங்குவதுதான் பண்பாடா? அதனால் அரசர் அவனை அடித்தபோது, உலகில் உள்ள ஒவ்வொரு உயரின்மீதும் அந்த அதிர்வு ஏற்பட்டதாம். (அப்படி அதிர்வு ஏற்பட்டதாக எந்த அமெரிக்கக்காரனும் ஆஸ் திரேலியக்காரனும் புராணம் எழுதி வைக்கவில்லையே!
ஆமாம். இந்த மதக் கடவுள்கள் இப்பொழுது எல்லாம் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதது ஏன்? கோயில்களில் சிலைகளாக, பொம்மைகளாக அடித்து வைப்பதைத்தவிர வேறு எந்த நடவடிக்கையை யும் காண முடியவில்லையே ஏன்? ஓ, பெரியார் என்ற ஒரு 'மாமனிதர் தோன்றியதால் ஓடி ஒளிந்து விட்டாரா?
அட வெட்கக் கேடே!
ஒழுங்கீனமும், மோசடியும், பித்தலாட்டமும்தான் இந்து மதமா?
கடைசியாக ஒரே ஒரு கேள்வி சிவனின் பேரருள் பெற்ற அந்த மாணிக்கவாசகர் முப்பத்திரெண்டே வயதில் மண்டையை போட்டது ஏனாம்?
- கருஞ்சட்டை -
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மகா பெரியவாளும் - மகா ஒழுக்கக் கேடும்!
- பார்ப்பனர்களின் கட்டுப்பாடான கோயபல்சு பிரச்சாரம்
- மூடநம்பிக்கைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
- ஓடாதீர் குருமூர்த்திகளே!
- ‘‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!’’
No comments:
Post a Comment