அறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தான் கண்டதும்- கொண்டதும்
ஒரே தலைவர் தந்தை பெரியார்
இன்று (3.2.2017) அறிஞர் அண்ணாவின் 48 ஆவது ஆண்டு நினைவு நாள்!
அறிஞர் அண்ணா - தந்தை பெரியாரின் தலைமாணாக்கர்! சீரிய பகுத்தறிவாளர்!!
தனது வாழ்நாளில் தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்று கூறியவர்.
‘தனது (தி.மு.க.) அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்தித் தனித்த வரலாறு படைத்தவர்!
தி.மு.க., பிரிவினைக் கொள்கையைக் கைவிட் டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதைத் தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தவர் அறிஞர் அண்ணா.
மதச் சார்பற்ற அரசில் கடவுள், கடவுளச்சிகள் படங்களை அரசு அலுவலகங்களிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்று அரசின் சுற்றறிக்கையை அனுப்பியவர் முதல்வர் அண்ணா!
தனது ஓராண்டு கால ஆட்சியில் அண்ணாவின் முப்பெரும் வரலாற்றுச் சாதனைகளான -
(1) சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டம்
(2) ‘சென்னை ராஜ்யம்‘ தமிழ்நாடாக மாற்றப்பட்ட சட்டம்
(3) தமிழ், ஆங்கிலம் மட்டுமே தமிழ்நாட்டில் - இந்திக்கு இடமில்லை;
தனது (தி.மு.க.) ஆட்சி என்பது வெறும் காட்சி அல்ல; திராவிட இனத்தின் மீட்சிக்கானது என்பதை வரலாற்றில் அண்ணா பதிய வைத்தது - தனிப்பெரும் வரலாறு படைத்தவர்.
மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும்!
‘‘மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட் கிறபோது, இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும்; நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல; மாநில அரசுதான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள்; மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின்மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவை சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.’’
‘‘நாட்டுப் பாதுகாப்பைத் தவிர, மற்ற அதி காரங்கள் அனைத்தையும்பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும்; பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்.’’
- முதலமைச்சராக இருந்தபோதே இப்படி முழங்கியவர் அறிஞர் அண்ணா.
முதல்வர் பதவி அவரை முடங்கிவிடச் செய்ய வில்லை; மாறாக, முழக்கமிடவே செய்தது!
அ.தி.மு.க. இதனைப் பாடமாகக் கொள்ளவேண்டும்!
அத்தகைய அண்ணா வழிச் செல்லும் அரசு என்று சொல்லும் ஆளும் அ.தி.மு.க. இதனைப் பாடமாகக் கொள்ளவேண்டும்.
கலைஞர் தலைமையில் தி.மு.க.வின் அய்ம் பெரும் முழக்கங்களில் ஒன்று, ‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்‘’ என்ற முழக்கம்!
இன்றைய காலகட்டத்தில் அண்ணாவின் இந்தப் பாடங்களை திராவிட இயக்கத்தவர்களும், தன்னாட்சி - தனியாட்சி அல்ல - கோருவோரும் படித்து, பயன்பெற்று, நடைமுறைப்படுத்த முன் வருதலே அறிஞர் அண்ணா நினைவு நாளில் தக்க சூளுரையாக அமையவேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
தலைவர், திராவிடர் கழகம்.
3.2.2017
சென்னை
சென்னை
No comments:
Post a Comment