‘துக்ளக்‘ ஆசிரியர் சோ.ராமசாமி மரணம் அடைந்துவிட்டார்; அடுத்து அந்த இதழின் ஆசிரியராக திருவாளர் எஸ்.குருமூர்த்தி வந்துள்ளார். இதுகுறித்து இந்த வார ‘துக்ளக்‘ இதழ் (21.12.2014) எப்படி அறிவித்துள்ளது தெரியுமா?
எச்சரிக்கை!
‘‘திரு.சோ அவர்களின் நீண்ட கால நண்பரும், ஆடிட்டருமான திரு.எஸ். குருமூர்த்தி ‘துக்ளக்‘கின் புதிய ஆசிரி யராகப் பொறுப்பேற்றுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் அறிவிப்பு என்று வெளியிட்டு இருக் கலாம்; அது என்ன ‘‘எச்சரிக்கை?’’ யாருக்கு எச்சரிக்கையாம்?
‘துக்ளக்‘ இதழின் போக்கை அறிந்த வர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும். அந்த இதழ் பார்ப்பனர்களுக்கானது. பார்ப்பனர் அல்லாதார் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும் என்பதுதான் பரவலான நிலைமை.
திருவாளர் குருமூர்த்தி அய்யரும் பார்ப்பன உணர்வு என்பதைவிட வெறியானவர் என்பது தெரிந்த ஒன்றுதான்.
சங்கராச்சாரியார் விடயத்தில் (கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக) அநீதி இழைக்கப்பட்டது என்று எழுதியவர் சோ.
‘காஞ்சி சங்கராச்சாரியார் அழைப்பை ஏற்றுச் சென்ற என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்’ என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும் கம்பலையுமாக சொல்லியதை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் உண்டு.
ஆனால், இந்தக் குருமூர்த்தி என்ன செய்தார் தெரியுமா?
சங்கராச்சாரியார் நல்லவர். இந்த அம்மாதான் மோசம் என்று அபாண்டமாகச் சொன்னவராயிற்றே! இவ்வளவுக்கும் அந்த அம்மையாரும் பார்ப்பனர்தான்.
‘சோ’ எழுதுவதோடு சரி... திருவாளர் குரு மூர்த்தியோ ஹிந்து ஆன்மிகக் கண்காட்சியைத் தானே தலைமை தாங்கி நடத்தக்கூடியவர்.
மதுரையிலே இரண்டு தாழ்த்தப்பட்ட சகோதரர்களைப் பிடித்து (தேவேந்திர குலவேளாளர்) ஒரு மாநாடு நடத்தச் சொல்லி ‘எங்களுக்கு இட ஒதுக்கீடு எல்லாம் வேண்டாம் - அது எங்கள் தன்மானத்துக்கு இழுக்கு’ என்று அவர்களை விட்டே சொல்ல வைத்த சூழ்ச்சி சாதாரணமானதா? அந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய பி.ஜே.பி. தலைவர் அமித்ஷாவையே வரவழைத்து, ‘இட ஒதுக்கீடே வேண்டாம் என்று சொல்லுவது நல்ல விஷயம் - இதனை நான் பிரதமரிடம் சொல்லி ஆவன செய்வேன்’ என்று பேசினார் என்றால் இவர்களின் சூழ்ச்சியை - கரவைப் புரிந்து கொள்ளலாமே!
எப்படிப்பட்ட நாடகம்! அந்த நிகழ்ச்சியில் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசையை மேடையில்கூட ஏற்றவில்லை என்பது வேறு விஷயம்.
‘சோ’ அய்யர் ‘துக்ளக்‘ ஆசிரியர் இல்லை என்றால், அந்த இடத்திற்கு ஒரு குருமூர்த்தி அய்யர்தான் வர முடியும்.
‘சோ’ ஆர்.எஸ்.எஸை ஆதரிப்பவர் அவ்வளவுதான் - இவரோ பச்சை ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல - அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆலோசகரும்கூட!
சுதேசி விழிப்புணர்வு இயக்கம் அல்லது சுதேசி ஜாக்ரன் மன்ஞ் ( Swadeshi Jagaran Manch - SJM)
என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொருளாதாரப் பிரிவாகும். இவ்வமைப்பின் துணைத் தலைவராக உள்ளவர்தான் இந்த சுவாமிநாதன் குருமூர்த்தி.
என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொருளாதாரப் பிரிவாகும். இவ்வமைப்பின் துணைத் தலைவராக உள்ளவர்தான் இந்த சுவாமிநாதன் குருமூர்த்தி.
‘விவசாயம் செய்யாமல் ஒரு நாடு இருக்க முடியாது; அதேபோல, வேதம் இல்லாமல் நாடு இருக்க முடியாது’ என்று சொன்னவர் இவர்.
(‘தினமலர்’, 25.7.2016, பக்கம் 7)
இது உண்மைதானா? விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியாது என்பது உண்மை. ஆனால், வேதம் இல்லாமல் நாடு இருக்க முடியாதா? உண்மையைச் சொல்லப்போனால், வேதம் என்பதே பேதம்தான். மக்களைப் பிளவுபடுத்திக் குட்டிச் சுவராக்கக் கூடியதே!
இதில் ‘வேடிக்கை’ என்ன தெரியுமா? விவசாயம் பாவத் தொழில் என்பது இவர்களின் மனுதர்மம். (அத்தியாயம் 10, சுலோகம் 84).
அப்படி இருக்கும்போது வேதத்தையும், விவசாயத்தையும் ஒப்பிடுவது ஏமாற்று வேலையல்லவா - திருவாளர் குருமூர்த்தி அய்யர் எப்படிப்பட்டவர் என்பதற்கு இது ஒன்றே போதாதா?
இவர் ‘துக்ளக்‘கின் ஆசிரியர் என்பதை ‘எச்சரிக்கை’ என்ற தலைப்பின்கீழ் சொன்னது ‘நல்லதாக’ப் போய்விட்டது.
‘‘எச்சரிக்கையாக இருங்கள் - பார்ப்பனர் அல்லாத மக்களே!’’
இது நமது அவசியமான வேண்டுகோள்!
நடுநிலை வேடம் என்பதையெல்லாம் நாட்டு மக்களை ஏமாற்றுவதுதான். ‘துக்ளக்‘ ஆசிரியராக யார் வந்தாலும் அதற்குள் ஆரியம் படம் எடுத்தாடும்.
ஆகவே, நாமும் கூறுகிறோம் - நம் மக்களுக்கு; எச்சரிக்கை! எச்சரிக்கை!!
- கருஞ்சட்டை
No comments:
Post a Comment