Saturday, December 10, 2016

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக! மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வற்புறுத்தல்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!
மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வற்புறுத்தல்
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை இன்று அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
அதற்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பதிலளித்தார்.
இதையடுத்து, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், அதற்கு முன்னதாக மேலாண்மை வாரியத்திற்கான ஒருங்கிணைப்பாளரை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவிரி பாசனப் பகுதி மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள், அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் தங்கள் மாநிலப் பிரதிநிதிகளின் பட்டியலை நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் உறுப்பினர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலும், 5 ஆம் தேதி தமிழகத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணைகளின் நிலவரங்களை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கைகளை அக்டோபர் 6 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
செப்டம்பர் 30 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட மத்திய அரசின் வழக்குரைஞர், மூன்று நாள்களுக்குள் அக்டோபர் 3 ஆம் தேதி - இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று மத்திய அரசு முந்தைய நிலையிலிருந்து முரண்பாடான முடிவை எடுத்து, அதனை உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்தது. அது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் - காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு மேலான மேல்முறையீட்டினை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு என்று தெளிவாக திட்டவட்டமாக இன்று கூறிவிட்டது. இதனை திராவிடர் கழகம் வரவேற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது என்பதையும் நினைவூட்டுகிறோம்.
மேலும், காலத்தை வீணடிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி    
தலைவர்,     திராவிடர் கழகம்..

சென்னை
9.12.2016

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...