Tuesday, December 20, 2016

தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து டிச.30 அன்று ஒன்பது நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து
டிச.30 அன்று ஒன்பது நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருச்சியில் தமிழர் தலைவர் கொட்டினார் போர் முரசு!
திருச்சி, டிச.19- தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினைக்  கண்டித்தும், கைவிடக் கோரியும்  டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் ஒன்பது முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
திருச்சியில் நேற்று (18.12.2016) மாலை நடைபெற்ற தேசிய புதிய கல்விக் கொள்கை மற்றும் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து - ஆசிரியர், மாணவர், பெற்றோர் முத்தரப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:
திருச்சி என்றால் திருப்பு முனைதான்!
திருச்சியில் எப்பொழுதும் மாநாடுகள் திருப்பு முனை மாநாடாகவே அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் இந்த மாநாடும் திருப்புமுனை மாநாடாகவே அமையும் என்பதில் அய்யமில்லை.
இப்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய புதிய கல்விக் கொள்கை, ‘நீட்’ நுழைவுத் தேர்வுபற்றிய தகவல் வெளிவந்துள்ள நாள் முதல் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறது.
இது ஒரு கட்சியைச் சேர்ந்த மாநாடல்ல; ஒட்டு மொத்தமான ஒடுக்கப்பட்டோர்களுக்காக நடத்தப்படும் பொது மாநாடாகும். இம்மாநாட்டுக்கு வராதவர்கள் எல்லாம் இதற்கு எதிரானவர்கள் என்று கருதவேண்டிய தேவையில்லை. வர வாய்ப்பில்லாதவர்கள் என்று வேண்டுமானால் நினைக்கலாம்.
பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இங்கே ஏராளமான செய்தியாளர்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கூட தலைக்குமேல் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்பதை மனதிற்கொண்டு இம்மாநாட்டுத் தீர்மானங்களையும், அறிவிப்புகளையும், நாட்டு மக்களுக்குத் தெரியும் வண்ணமும், அரசுகளின் காதுகளுக்கும் எட்டும் - பார்வைக்கும் செல்லும் வண்ணம் தாராளமாகவே செய்திகளை வெளியிடவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் - கடமையாற்றவேண்டும் என் பதே எங்களின் முக்கிய வேண்டுகோள்.
அனைவரையும் வரவேற்கிறோம்!
எங்களுடைய அழைப்பினை ஏற்று பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இங்கே திரண்டு இருப்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. அவர்களுக்கெல்லாம் எங்களின் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பந்து இப்பொழுது ஆசிரியர்ப் பெருமக்களின் கைகளில்தான் இருக்கிறது. அந்தப் பந்தை எந்த அளவுக்கு ஆசிரியர்கள் வேகமாக உதைக்கிறார்களோ, அந்த அள வுக்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்படும் என்பதில் அய்யமில்லை. எல்லோரும் வீதிக்கு வந்து போராடத் தயாராக வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த மைதானத்தில் கவலையுடன் கூடியிருக்கிறீர்கள்.
உங்கள் கவலை எங்களுக்குப் புரிகிறது. நிச்சயமாக இந்தக் கவலையை அறவே நீக்கிட நாம் அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து போராடுவோம் - வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! (பலத்த கைதட் டல்!).
அவர்கள் தீயை மூட்டுகிறார்கள்!
அவர்கள் தீயை மூட்டியுள்ளார்கள். நாம் அந்தத் தீயை அணைக்கின்ற இடத்தில் இருக்கிறோம்.
நம் கைகளில் இருக்கும் ஆயு தங்களை நம் எதிரிகள் தான் தீர்மா னிக்கிறார்கள். மாவோ சொன்னதுபோல மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடுவதில்லை.
புதிய கல்வியை எதிர்க்க 20 காரணங்கள் அடங்கிய  தீர்மானம்!
தேசிய புதிய கல்விக் கொள் கையை ஏன் எதிர்க்கிறோம் என்ப தற்கான 20 காரணங்கள் இங்கே நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் ஒன்றே ஒன்றையாவது மறுக்க முடியுமா? தவறு என்றுதான் கூற முடியுமா?
என்னையும் ஆசிரியர் என்றுதான் அழைக்கிறார்கள். எனவே, ஆசிரியர் களோடு சேர்ந்து நின்று போராட எனக்குப்பொருத்தமிருக்கிறது.இந்த வகையில் நம்முடைய உறவு சிறப் பாகவே இருக்கிறது.
யாரும் இல்லாத வீட்டில் திருடன் உள்ளே புகுந்து களவாடுவதுபோல ஓர் அரசு நடந்துகொள்ளலாமா? பொது மக்களின் கருத்தைக் கேட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள். இது உண்மையா? இங்கே கூடியி ருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் யாருடன் கலந்து ஆலோசித்தார்கள்? குறைந்தபட்சம் மாநில அரசுடனாவது கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதா?
கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றதே காரணம்!
மத்திய அரசின் அத்துமீறலுக்கெல் லாம் காரணம்  கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் கொண்டு சென்றதுதான்.
இதற்காகவேகூட சென்னையில் திராவிடர் கழகம் மாநாடு ஒன்றினை பெரியார் திடலில் நடத்தியதுண்டு. நீதிபதிகள், கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் என்று பலதரப்பட்ட பெரு மக்களும் அந்த மாநாட்டில் பங்கேற்று கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அந்த மாநாட்டின் தீர்மானங் களை அனைத்து மாநில முதலமைச் சர்களுக்கும் அனுப்பி வைத்தோம் என்றாலும், அதுகுறித்த கவலையை எவரும் எடுத்துக்கொள்ளாதது வருந் தத்தக்கது.
நம் எதிர்கால சந்ததி நாசமாகிவிடும் -
எச்சரிக்கை!
இந்தப் பிரச்சினையில் நாம் அலட் சியமாக இருந்துவிட்டால் நம்முடைய எதிர்கால சந்ததிகளின், பிள்ளைகளின் வாழ்வு என்புது நாசமாகப் போய்விடும்.
70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் இன்னும் ஆறரைக் கோடி மக்கள் பள்ளிக் கூடங்களை எட்டிகூடப் பார்க் காதவர்களாக இருக்கிறார்கள் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?
மனுதர்மம் என்ன கூறுகிறது?
ஏன் நம் மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது? நமது அரசர்களே கூட மனுதர்மப்படிதானே ஆட்சி செய் துள்ளனர். மனுதர்ம சாத்திரம் என்ன கூறுகிறது?
நான்கு வருணங்களை பிரம்மாவே படைத்ததாகவும், அந்த நான்கு வரு ணத்தார்களுக்கும் தனித்தனியாகக் கருமங்களைப் படைத்ததாகவும் கூறப் பட்டுள்ளதே!
பிராமணனின் தர்மம் என்ன? ஓதல், ஓதுவித்தல். இதன் பொருள் என்ன? படிப்பு என்பது பிரம்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணனுக்கு என்று ஆகிவிடவில்லையா?
சத்திரியன் பிரஜைக் காப்பாற்றுப வன், வைசியன் வியாபாரம் செய்தல், சூத்திரர்களாக்கப்பட்ட நான்காம் வருணத்தவராகிய நமக்குப் பிரம்மா வகுத்துக் கொடுப்பது என்ன?
சூத்திரன் பொறாமையின்றிப்
பணிவிடை செய்யவேண்டுமாம்!
பிராமணன், சத்திரியர், வைசிய னுக்குப் பொறாமையின்றிப் பணிவிடை செய்து கிடப்பதே என்றுதானே மனு தர்மம் கூறுகிறது.
நம் மக்களுக்குக் காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டிருப்பது என்பது சாஸ்திர ரீதியாகவே மறுக்கப்பட்டுள்ளதே!
பொறுத்துக் கொள்ள முடியவில்லை எதிரிகளால்!
தந்தை பெரியார் போராடி, திராவிடர் இயக்கம் போராடி, ஒரு காமராசர் முயற்சி செய்து, ஒரு தலைமுறையாகத்தானே படித்து வருகிறோம். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ஒரு கூட்டத்துக்கு. அதன் வடிவம்தான் சூழ்ச்சித் திட்டம்தான் இந்தப் புதிய கல்வித் திட்டமும், அகில இந்திய நுழைவுத் தேர்வும்.
மனிதன் பிறக்கும்போதே அவன் தலையில் ஜாதி முத்திரை - அவன் செத்தாலும் சுடுகாட்டிலும் ஜாதி - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமாம்.
48 ஆண்டுகளாக
வெறும் 6 சதவிகிதம்தானா?
கோத்தாரி கல்விக் குழு கல்விக்கு மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதம் ஒதுக்கவேண்டும் என்று கூறிய 48 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே ஆறு சதவிகிதத்தை புதிய கல்விக்கான குழு பரிந்துரைக்கிறதே - இதுதான் வளர்ச்சியா?
அன்று ஜனாதிபதி சம்பளம் எவ்வளவு? அமைச்சர்களின் சம்பளம் எவ்வளவு? எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் சம்பளம் எவ்வளவு? இப்பொழுது எவ்வளவு? கடுகளவு பொருளாதார அறிவு உள்ளவர்களுக்கும் இந்த நிலை புரியவேண்டுமே!
இதில் வெட்கக்கேடு என்ன தெரியுமா? இப்பொழுது கல்விக்கு ஒதுக்கப்படுவது வெறும் 3 புள்ளி 6 சதவிகிதமே!
2014-2015 ஆம் ஆண்டில் கல்விக்கு மத்திய அரசு 17.6 சதவிகிதம் ஒதுக்கியது. மீதி 82.4 சதவிகித நிதியை மாநில அரசுகளே சுமக்கவேண்டும்.
அதேநேரத்தில்மாநிலஅரசுகளின் உரிமைகளின் இறக்கைகளையல்லவா மத்திய அரசு வெட்டுகிறது. கல்விக் கொள்கை என்கிறார்களே - மாநில அரசின் கருத்தினைக் கேட்டதுண்டா?
இவ்வளவுக்கும் முழு அறிக்கையும் வெளிவரவில்லையாம் - இப்பொழுது வந்துள்ளது ஒரு சிறு குறிப்புதானாம். சிறு குறிப்பே இவ்வளவுப் பெரிய ஆபத்துக்கு வழிவகுக்குமேயமானால், முழு அறிக்கையும் வெளிவந்தால் நாடு தாங்குமா? ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்குவார்களா?
முதற்கட்ட வெற்றி!
நமது தொடர் முயற்சி ஒன்றும் தோற்றுப் போய்விடவில்லை - நமது குரலை அவர்களால் அலட்சியப்படுத்த முடியவில்லை என்பதற்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்தியமனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சொல்லியிருக்கிறார் - இது நமக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி (பலத்த கரவொலி).
போராட்ட அறிவிப்பு
ஏற்கெனவே புதிய கல்வி, ‘நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்த்து சென் னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
அனைத்துக்கட்சியினரும்,ஆசி ரியர் பெருமக்களும், கல்வியாளர்களும் கலந்துகொண்டனர். எனது தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அதில் பங்குகொண்டார்.
இடையிலே பல கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியுள்ளோம். தீர் மானங்களையும் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் உள்ளோம்.
இந்த முத்தரப்பு மாநாட்டின் சார்பாக ஒரு போராட்டத் திட்டத்தை அறிவிக்க விரும்புகிறோம்.
தமிழ்நாட்டின் முக்கிய ஒன்பது நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 30 ஆம் தேதி வெள்ளியன்று காலை நடைபெறும்.
நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது இடங்களில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். (உற்சாகமான கைதட்டல் - நீண்ட நேரம்).
ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர் கள் இணைந்து நின்று கட்சிகளை மறந்து ஒட்டுமொத்தமான சமூகப் பாதிப்பிலிருந்து விடுதலை பெற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பெரியார் இல்லை - அவர் கைத்தடி இருக்கிறது - எச்சரிக்கை!
இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், நமது அடுத்த கட்டப் போராட்டம் தொடரும்; வெற்றி கிட்டும்வரை நமது போராட்டமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
பெரியார் உயிருடன் இல்லை; ஆனால், அவர்களின் கைத்தடி எங்களிடம் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம் - எச்சரிக்கை! (பலத்த கரவொலி).
அன்று ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினோம்; ஆச்சாரியாரையும் ஆட்சியைவிட்டே விலகும்படிச் செய்தோம்.
மத்திய அரசின் இந்த நவீனக் குலக் கல்வித் திட்டத்தையும் விரட்டி யடிப்போம். ஒன்றுபடுவோம் - வென்றிடுவோம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...