- மின்சாரம்
இந்து
ஆன்மிகக் கண்காட்சி என்ற ஒன்றைத் தூக்கிப் பிடித்து நாட்டில் தார்மிக
ஒழுக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தி நாட்டையே தலைகீழாகப்
புரட்டிப் போடுவதுபோல தொலைக்காட்சி வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் சண்ட
பிரசண்டம் செய்கிறார்கள் - தேவையில்லாமல் திராவிடர் கழகத் தலைவரையும்,
திமுக தலைவரையும் சீண்டுகிறார்கள்.
இந்து
ஆன்மிகக் கண்காட்சியை உங்கள் எல்லைக்குள் நடத்துங்கள் - அதோடு
தொடர்புப்படுத்தி விவேகானந்தர் ரதம் என்ற பெயரால் அரசுப் பள்ளிகளுக்குச்
செல்லும் பொழுதுதான் பிரச்சினையே வெடிக்கிறது.
இதனைத்தான்
திராவிடர் கழகத் தலைவர் விமர்சித்தார். அவர் எழுப்பிய கேள்விக்கு
விடையளிக்க வக்கு இல்லாமல் பந்தை அடிக்க முடியாத ஆட்டக்காரன் எதிர் அணி
வீரரின் காலை அடிக்கும் கெட்ட விளையாட்டை (Foul Game) ஆடிக் காட்டுகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை கேள்வியாக்கி விடை அளிப்பது சரியாக இருக்கும்.
(1)
கேள்வி: இந்து மதம் வெறும் மதமல்ல - அது ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்று
சொல்லுகிறாரே, அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே. எஸ்.
வர்மாவை சாட்சிக்கு அழைக்கிறாரே?
விடை: அதே
ஜே.எஸ். வர்மா தானளித்த தீர்ப்புத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
என்று கூறியதை வசதியாக மறந்து விடலாமா? அல்லது மறைக்க முயற்சிக் கலாமா?
Hindutva Proponents Misusing Verdict: Varma என்ற தலைப்பில் 'தி இந்து' ஏடு வெளியிட்டதே (6.2.2003 , பக்கம் - 3).
பாபர்
மசூதி பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள
முடியாது. இது மக்களின் உணர்வு கலந்த பிரச்சினை என்று கூறும் இதே
வகையறாக்கள்தான் தங்கள் இந்து மதத்தை ஒரு நீதிபதியின் வாயிலிருந்து
வெளிவரும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு கரையேற்றலாம் என்பது எத்தகைய
பரிதாபம்.
இதில்
வேடிக்கை என்னவென்றால், பெருமாள் முருகன் நாவல் பற்றி தினத்தந்தி
தொலைக்காட்சியில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'அது குறித்து நீதிபதி சொன்னது
சரியல்ல - தர்மமல்ல' என்று சொன்னதும் இதே குரு மூர்த்திதான்.
தனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் அது சரி, பாதகமாக தீர்ப்பு வந்தால் தர்மமல்ல என்பது தர்ப்பைப்புல் நியாயம் போலும்!
முரளிமனோகர்
ஜோஷி தேர்தலை எதிர்த்து நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதி ஜே.எஸ். வர்மா
கூறியதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்கள் மகாராட்டிர மாநிலத்தில் தானே
தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் ராம்கப்சே - இந்து மதவாதத்தை
முன் வைத்துப் பிரச்சாரம் செய்ததால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று
அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி. அகர்வால் தீர்ப்பை வசதியாக
மறைப்பானேன்?
(2) கேள்வி: இந்து மதம் இந்து மதம் என்கிறார்களே அது குறித்து திட்டவட்டமான முறையில் வரையறுத்துக் கூற முடியாமல் திணறுவது ஏன்?
விடை:
யார் யார் எல்லாம் - கிறித்தவர்கள் இல்லையோ, முஸ்லிம்கள் இல்லையோ,
யூதர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்து மதம் என்று சொல்லுவது அறிவுப்
பூர்வமானது தானா?
மேசை
என்னவென்றால், எது நாற்காலி அல்லவோ, எது ஜன்னல் அல்லவோ, எது காலணி அல்லவோ.
அது தான் மேசை என்று சொன்னால் வயிறு குலுங்கச் சிரிக்க மாட்டார்களா?
முசுலிமிடமோ, கிறித்தவரிடமோ, இப்படி ஒரு கேள் வியைக் கேட்டால் பளிச்சென்று பட்டுத்தெறித்தது போல பதில் சொல்லுவார்களே!
எங்கள்
மதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எங்கள் மத நூல் என்ன? என்பதை விளக்கிக்
கூறுவார்களே! அப்படிக் கூற முடியாததற்கு வெட்கப்பட வேண்டுமே தவிர - எது
குறையோ அதையே நிறையானதாக நெஞ்சு நிமிர்த்திச் சொல்லுவது அவாளுக்கே உள்ளே
குயுக்தி.
இன்னும்
சொல்லப் போனால் இவர்கள் கூறும் இந்து மதம் என்ற பெயரே இவர்கள் வைத்துக்
கொண்டதல்ல. இவர்கள் அன்றாடம் வெறுத்துப் பேசும் வெள்ளைக்கார கிறிஸ்தவன்
வைத்த பெயர்தான் இந்து மதம் என்பது. இதனை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரே ஒத்துக் கொண்டுள்ளாரே!
வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம் என்று எழுதியுள்ளாரே!
(தெய்வத்தின் குரல், பாகம் - 1, பக்கம் - 267).
அப்பன் பெயர் தெரியாதவன் என்று ஒருவனைச் சொன்னால் அது அவமானகரமானதாகக் கருதப்படும் நாட்டில் இப்படியொரு மதம்!
நீதிபதி
ஜே.எஸ். வர்மா இந்துமதம் பற்றிச் சொன்னதாகச் சொல்லி துள்ளிக்
குதிக்கிறார்களே - நாமும் நீதிபதி ராஜமன்னார் இந்து மதம் குறித்துக்
கணித்ததை எடுத்துக் காட்ட முடியுமே!
இந்து மதம் பற்றி நீதிபதி ராஜமன்னார்
"இந்து
மதம்பற்றி நான் பேசுகையில், அந்தச் சொல்லினுடைய தெளிவில்லாத -
கட்டுப்பாடற்ற - பொருள் விளக்கம் பற்றிய உணர்வோடுதான் இருக்கிறேன்" என
ஒளிவு - மறைவு இல்லாமல் வெளிப்படுத்தித் தீர வேண்டியிருந்தது.
("When I
Speak of Hindu religion I am actually conscious of the vague
connotation of that word" Michael vs Venkateswaran Case; MLJ
239/1952-1).
தம்முடைய
நிலைக்குப் பக்கத் துணையாக நீதிபதி ராஜமன்னார் அவர்கள் 'இந்தியப்
பண்பாட்டு மரபு' என்னும் நூலிலிருந்து கீழ்வருவதைச் சான்று காட்டினார்.
"மதம்
என்ற சொல்லை இப்போது நாம் புரிந்து கொள்ளும் பொருளின்படி இந்துவியல் என்பது
ஒரு மதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று. அல்லது இந்துக்கள்
என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒரு போதும்
பயன்படுத்தப் பெற்றதே கிடையாது."
("Hinduism
is not a religion in the sense in which we now understand the word. The
word is not Indian in origin; nor was it never used by the Hindus as
the name of their religion" The Cultural Heritage of India; Haridass
Battacharia; ILR 1953 (Madras) - 106).
இதில்
என்ன கொடுமை என்றால் கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்களும்கூட இந்து
தானாம். அந்த வகையில் பெரியார், வீரமணி கலைஞர் எல்லாம் இந்துக்கள் தானாம்.
இப்படிச் சொல்லுவதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? இந்து என்று சொல்லாதே
- இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொல்லுகிற தந்தை பெரியார். அவர்தம்
இயக்கத்தவர்களும் இந்துக்கள் என்றால் இந்துமதம் என்பது முரண்பாடுகளின்
மொத்த உருவம் என்று தானே சொல்ல வேண்டும்; இன்னும் ஒரு படி மேலே சென்று
சொல்ல வேண்டுமானால் இது அறிவு நாணயமற்ற தன்மை இல்லாமல் வேறு என்னவாம்?
சரி,
வாதத்துக்காகவே ஒப்புக் கொள்வோம் - நாத்திகம் பேசுகின்ற கருப்புச்
சட்டைக்காரர்களும் இந்து மதக்காரர்கள் என்றால் நாங்கள் இந்து மதத்தைப்பற்றி
எடுத்து வைக்கும் விவாதங்களையும், எழுப்பிடும் வினாக்கணைகளையும்,
குற்றச்சாட்டுகளையும் அங்கீகரிக்க வேண்டியதுதானே! அப்பொழுது ஏன் ஆத்திரப்பட
வேண்டும்?
நாத்திகர்களும்
இந்து மதக்காரர்கள் என்றால், நாத்தி கனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று
சங்கராச்சாரியார் கூறுவது (தெய்வத்தின் குரல், மூன்றாம் பாகம், பக்கம் -
734) எந்த அடிப்படையில்? இதில் மனிதநேயம் இல்லை என்பதால் இந்து மதத்தில்
மனிதநேயம் என்ற பண்புக்கு இடமே கிடையாது என்பதை இந்து ஆன்மிகக் கண்காட்சி
யினர் மரியாதையாக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?
(3) கேள்வி: இந்துமதம் என்பது ஒரு கட்டமைப்புக்குள் அடங்கக் கூடியதா?
விடை:
ஆயிரம் ஆயிரம் பிளவுகள் - சச்சரவுகள் குவிந்து கிடப்பதற்குப் பெயர்தான்
இந்துமதம் - சைவ, வைணவப் பிரிவுகள் வைணவத்திலும் வடகலை, தென்கலை சண்டைகள்
சாதாரணமானதுதானா?
காஞ்சிபுரம்
யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற சண்டை லண்டன்
பிரிவி கவுன்சில் வரை சென்று இந்து மதத்தின் முடைநாற்றம் கப்பலேறியதே! இந்த
வழக்கு முடிவதற்குள் எத்தனையோ யானைகள் செத்ததுதான் பரிதாபம்!
மதம் பிடிக்காமல் ஓடிய யானை
1918-1919ல்
யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென் கலை நாமம் போடுவதா என்ற
பிரச்சினை வைணவர்களுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதிமன்றங் களை கடந்து,
பிரிவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு
உத்தரவு போட் டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை
நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படியே
சிறீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு
மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள். பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு
மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள்.
மூன்று
மாதங்கள் நடந்த இந்த அல்லோகலத்தில் யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு
ஓடிவிட்டதாம். மறுநாள் பத்திரிகைக்கைகளில் சிறீரங்கத்து யானைக்கு மதம்
பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது.
(நாத்திகர்களும், ஆலய நிர்வாகமும் (இணையத்திலிருந்து)
கட்டுரையாளர்: 'தீபம்' ந. பார்த்தசாரதி)
கட்டுரையாளர்: 'தீபம்' ந. பார்த்தசாரதி)
சிறீரங்கத்தில்
பெருமாள் கோயில் மொட்டைக் கோபுரம் 226 அடி உயரத்தில் கட்டுவதற்கு காஞ்சி
மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி நிதி உதவி செய்தார். இதன்
அடிப்படையில் சிவன் கோயில் கட்டுபவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்களா
என்று அகோபிலமடத்து ஜீயர் அழகிய சிங்கரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்
என்ன?
"நான்
சிவன் கோயில்களுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா சிறீமத் நாராயணன்
தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்
என்றாரே!
('கல்கி' 11.4.1982)
('கல்கி' 11.4.1982)
கடலூர்
அருகே திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோயில் இருக்கிறது. ஆண்டுதோறும்
அய்ப்பசி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் கோயில் உற்சவம்
நடைபெறும். மணவாள மா முனிகள் வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயிலைச்
சுற்றி வருவது வழக்கம். அப்படி வரும்போது என்ன செய்கிறார்கள்? தேவநாதசாமி
கோயில் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாளும் போட்டு
விடுகின்றனர்.
மணவாளசாமியும்,
அதனோடு வரும் பக்தர்களும் தேவநாத சாமியைப் பார்த்து விடக் கூடாதாம்.
பார்த்தால் தீட்டுப்பட்டு விடுமாம். இந்த ஊர்வலம் முடிந்ததும் ஊர்வலம்
வந்த பாதையில் சாணியைத் தெளித்து தீட்டும் கழிக்கின்றனர். மாவட்ட
ஆட்சியரிடமும், இந்து அறநிலையத்துறையிடமும் மனு கொடுத்தும் அதே நிலைதான்.
இந்து மதக் கடவுள்களுக்குள்ளேயே பேதாபேதம் தீண்டாமை இருக்கிறதே இதற்கு என்ன
செய்யப் போவதாக உத்தேசம்?
இந்து
மதத்தில் மனிதர்களுக்குள்தான் பிறப்பின் அடிப்படையில் பேதம் என்றால்
கடவுள்களுக்குள்கூட பூணூல் போட்ட ஜாதி, பூணூல் போடாத ஜாதி இருக்கிறதே!
கொலைக் குற்றத்தில் 61 நாட்கள் சிறையில் கம்பி எண்ணிய காஞ்சி ஜெயேந்திர
சங்கராச்சாரியார் திருப்பதி ஏழுமலை யானுக்கு மூன்றரைக்கிலோ தங்கத்தில்
பூணூல் சாத்தினாரே! (மாலைமலர் - 16.3.2002).
திருப்பெருங்குன்றம் கடவுளுக்கும் ரூ.15 லட்சத்தில் பூணூல் போட்டவர், இதே ஜெயேந்திரர்தான்! ('தினமணி', பக்கம் - 2, 27.2.2014)
கடவுளையே
தங்கள் ஜாதிக்குள் அடைத்துக் கொண்ட வர்கள், சொல்லுகிறார்கள் "இந்துமதம்
தான் எல்லா மக் களையும் சமமாக நோக்குகின்றதாம்!" - இப்படி சொல்லுவதற்கு
வெட்கப்பட வேண்டாமா?
(4)
கேள்வி: ஹிந்து மதம் எல்லா மதங்களையும் ஏற்கின்ற வாழ்க்கை முறை. அதை நாம்
வெறுமனே மதம் என்பதற்குள் சுருக்கி விடக் கூடாது என்று திருவாளர்
குருமூர்த்தி கூறியுள்ளதுபற்றி?
விடை:
இது உண்மையா? இந்த நாடே இந்து நாடு தான்; மாற்றுப் பேச்சுக்கே இடமில்லை
என்கிற மமதையில் மிதக்கும் மதம் பிடித்தவர்களாயிற்றே இவர்கள்.
பிஜேபியை
ஆட்டிப் படைக்கும் ஆர்.எஸ்.எஸ். குழு மத்தின் கொள்கைக் கோட்பாடு என்ன -
ஆர்.எஸ்.எஸின் ஆலோசகராக இருக்கும் திருவாளர் குருமூர்த்தி அய்யருக்குத்
தெரியாத இரகசியமா!
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
யூதர்களும், பார்சிகளும் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மதக்காரர்களும் இந்துக்கள்.
- ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பாகவத்
"பூர்விகத்தில்
நாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற
மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும்,
கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
ஸ்ரீராமபிரான்,
ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக்
கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' - 16.10.2000).
இப்படிச் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்சன்.
"இந்துஸ்தானில்
உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள
வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத்
தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும்; எதையும் கேட்காமல் எந்த
சலுகைகளையும் பெறாமல் எதற்கும் தன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும்
இன்றி இருத்தல் வேண்டும்"
- எம்.எஸ்.கோல்வாக்கர் (நூல்: வரையறுக்கப்பட்ட தேசியம்)
இதுதான் பிற மதத்தை நேசிக்கும் யோக்கியதையா?
இங்கு
இருக்கிற முசுலிம்களோ, கிறித்தவர்களோ வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்
அல்லர். இந்து மதத் தின் கொடூரமான தீண்டாமை காரணமாகத்தானே வெளி யேறி
னார்கள். இதனை நாங்கள் சொல்லுவது இருக்கட்டும். இந்து முன்னணியின் நிறுவனர்
திருவாளர் இராம. கோபாலன் வாயால் கேட்டால்தான் பொருத்தமானதாகவும்
இருக்கும்.
1.2.1982
அன்று திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின்
சார்பில் இந்து விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட
அதன் தலைவர் ராமகோபாலன் என்ன கூறினார்?
"நம்முடைய
கடந்தகால செயல்களின்மூலம் இப்பொழுது நடைபெறும் மதமாற்றங்களுக்கு
வழிவகுத்து விட்டோம். மதத்திற்குள்ளேயே ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை
விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டி விட்டோம்" ("தினமலர்" 2.2.1982,
பக்கம் - 6) என்று பேசி இருக்கிறாரே -குருமூர்த்தி என்ன கூறுகிறார்?
ஜாதியை
மட்டுமல்ல; தீண்டாமையைக் கூடக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு
அழுபவர்கள்தான் இந்து மதத்தில் குரு பீடங்களான சங்கராச்சாரியார்கள்.
தீண்டாமை
க்ஷேமகரமானது என்ற சொன்னவர் காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார்
சந்திரசேகேந்திர சரஸ்வதி ("ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங்கள்).
பாலக்காட்டில்
இந்த சங்கராச்சாரியாரை சந்திக்க காந்தியார் சென்றார். காந்தியாரை மாட்டுக்
கொட்டகையில் வைத்துப் பேசினார் சங்கராச்சாரியார். காந்தியார் எவ்வளவோ
கேட்டுக் கொண்டும் தீண்டாமையின்மீதுதான் கொண்டிருந்த முரட்டுப்
பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லையே! (ஆதாரம்: "தமிழ்நாட்டில்
காந்தியார்" பக்கம் - 575-576)
தீண்டத்தகாதவரான
அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றியதால்தான் அதில் 540 குறைபாடுகள்
உள்ளன என்று இன்னொரு லோகக் குருவான (இந்து மதத்தில் பல லோகக் குருக்கள்
உண்டு - ஆனாலும் ஒருவரை இன்னொருவர் ஒத்துக் கொள்ள மாட்டார்)
பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவகிருத்தா சொல்ல வில்லையா? (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 23.6.1988).
இந்துவாகப்
பிறந்தேன். ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என்று பத்து லட்சம் தாழ்த்தப்பட்ட
மக்களுடன் புத்த மார்க்கம் தழுவினாரே அண்ணல் அம்பேத்கர் இதை விட இந்து
மதத்துக்கு வேறு ஒரு மொத்தும் அவமானமும் வேண்டுமோ?
வருண
தருமம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல - குணம், தொழில் அடிப்படையில்
தான் என்று சிலர் இப்பொழுது சமாளிக்கப் பார்க்கிறார்களே, அவர்களின் மூக்கை
உடைக்கும் வகையில் காஞ்சி சந்திரசேகேந்திர சரஸ்வதியும், பூரி
சங்கராச்சாரியாரும் என்ன கூறினர்?
ஆனந்த விகடன் சார்பில் மணியன் பேட்டி கண்டார்: பூரிசங்கராச்சாரியாரை.
மணியன்: குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) மக்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தானே கீதா கிரியன் கூறுகிறார்?
பூரி
சங்கராச்சாரியார்: இக்காலத்து குண கர்மங்களின் அடிப்படையில் அல்ல.
முற்பிறவியில் அவர்கள் செய்த குண கர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள்
என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் - என்று
கூறியபிறகு "சேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமைகள்" கதறி என்ன பலன்? இந்து
மதத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி நடமாட முடியாது
என்கிற கோழைத்தனத்துக்கு விரட்டப்பட்டுள்ளது இந்துத்துவா கும்பல்.
(5) கேள்வி: ஜாதியை ஒழிக்க முடியாது என்றும், சுய ஜாதி அபிமானம் நல்லது - பயனுள்ளது என்றும் குருமூர்த்தி கூறியுள்ளதுபற்றி...
விடை:
இது அவர்களின் குருநாதர் கோல்வாக்கரின் கோட்பாடுதான்! ஜாதி என்பது
இல்லையாயின் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாதே! இந்த ஜாதியை வைத்துக் கொண்டு
எந்தத் "தைரியத்தில்" இந்து மதம் எல்லோரையும் சமமாகப் பாவிக்கிறது என்று
சொல்லுகிறார்கள்?
பிர்மா
என்ற ஆண் கடவுளின் முகத்திலும், தோளிலும் இடுப்பிலும், காலிலும் மனிதன்
பிறந்தான் என்ற வேதக் கூற்றை, மனுதர்மக் கூற்றை ஓர் ஓவியனை விட்டுப் படம்
வரையச் செய்தால் அந்தப் பிர்மாவின் உருவம் எவ்வளவு ஆபாசமாக இருக்கும்!
ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் இந்தக் கூட்டம் அசூயைபடவே படாது -
ஆபாசத்துக்காகவென்றே கிருஷ்ண பரமாத்மா என்ற ஒரு கடவுளையே இந்த மனுஷாத்
மாக்கள் உருவாக்கி வைத்து சுவைத்துக் கொண்டு திரிகிறார்களே!
அமெரிக்காவில்
கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடுகள்பற்றி
விமர்சிக்கும் பாடங்களை அகற்றிட அவருடைய இந்துத்துவாவாதிகள் எவ்வளவோ
முயன்றும் ஜம்பம் பலிக்கவில்லையே. உங்கள் இந்து மதம் கப்பலேறியல்லவா சந்தி
சிரிக்கிறது.
(6) கேள்வி: மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை மக்களிடத்தில் போதிப்பதே இந்து ஆன்மிகக் கண்காட்சியின் நோக்கமாமே?
விடை: அப்படியா? மாதா என்ற பெண் குலத்தைப் பற்றி இந்து மதத்தின் மதிப்பீடு என்ன என்பது உலகம் சிரித்த கதையாயிற்றே!
அப்படியானால் முதலில் இந்து ஆன்மிகக் கண்காட்சிக் காரர்கள் முதலில் ஒரு "திருப்பணியை"ச் செய்யக் கடமைப் பட்டுள்ளார்கள்.
கீதையையும்,
மனுதர்மத்தையும், வேதங்களையும் இதிகாசங்களையும் தீ வைத்துக் கொளுத்தி,
அந்தச் சாம்பலின்மீது மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற கோட்பாட்டுச்
சித்திரத்தைச் செதுக்கட்டுமே பார்க்கலாம்.
"பெண்களும்
வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனி யிலிருந்து பிறந்தவர்கள்" என்று
பகவான் கிருஷ்ணன் கீதையிலே பகர்ந்துள்ளானே! (அத்தியாயம் 9, சுலோகம் - 32)
என்ன தேதி குறிக்கத் தயார்தானா?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் - 17)
(மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் - 17)
இந்த
மனுதர்மத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அலங்கரித்து எடுத்துச் செல்லும்
குருமூர்த்தி வகையறாக்கள் இந்நூலை அவர்களின் "அக்னிப் பகவானுக்கு"க்
குளிப்பாட்டி யல்லவா மாதா, பிதா, குரு தெய்வத்தைப் பற்றி உதட்டை அசைக்க
வேண்டும்.
மாதா (பெண்பற்றி) ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ன சொல்கிறார்?
மனைவி
என்பவள் கணவனின் தேவைகளை நிறை வேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொள்ள
வேண்டும்; வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய
வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும், இது பெண்ணின் கடமை, இந்தக்
கடமையிலிருந்து ஒரு பெண் விலகி விட்டால், அவள் தேவையில்லை. அவர்களுக்கான
ஒப்பந்தம் முடிந்துவிட்டது. விலக்கிவிட வேண்டும்; கணவனின் தேவைகளை நிறை
வேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால்
திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விட வேண்டும்.
(Aajtak ஹிந்தி நேரலை 1.7.2014)
குருமூர்த்தி
வைத்தியரே! முதலில் உங்கள் முதுகைப் பாருங்கள். ஆயிரம் வண்டி அழுக்கு
குவிந்து கிடக்கிறது. நோய் இருக்கிறது அதைக் குணப்படுத்தி
'மாதா'வைப்பற்றி பேசுங்கள்.
(7) கேள்வி: செத்துப் போன கட்சியின் தலைவர் வீரமணி என்று கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்தி கூறியுள்ளாரே!
விடை: செத்துப் போன கட்சி என்று தெரிந்திருந்தால் குருமூர்த்திகள் இப்படியெல்லாம் குமுற மாட்டார்கள், அவரின் செயல்பாட்டுத்
தீ எதிரிகளை அன்றாடம் அணுஅணுவாகப் பொசுக்கிக் கொண்டு இருக்கிறதே!
அய்யப்பன் கோயிலுக்கு கருப்புச் சட்டை அணிந்து இலட்சக் கணக்கானவர்கள்
செல்லுகிறார்கள் என்று அதற்குக் காரணம் சொல்லுகிறார்.
நோய் அதிகம் பரவுவதால் மருத்துவம் தோற்றுவிட்டது என்று கூறும் "அறிவாளிகளின்" வரிசையிலே நிற்க வேண்டியவர்கள் இவர்கள்.
பன்றிகளுக்கு
நல்ல வேட்டைக்காடாக இருக்கும் சபரிமலை அய்யப்பனின் பம்பை நதியில்
குருமூர்த்திகள் மூக்கு முட்ட நன்னா ஸ்நானம் பண்ணட்டும். மூடத்தனம் எளிதில்
பரவும். பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு வெறும் அறிவு மட்டுமல்ல,
துணிவும் வேண்டுமே.
கோயிலுக்குப்
போய் தட்சணை கொடுத்து செருப்படி படுகின்றவர்கள் உண்டு. எச்சில் இலையில்
உருண்டு புரள்பவர்கள் உண்டு. இவையெல்லாம் எங்களின் வெற்றிப் பதாகைகள் என்று
குருமூர்த்திகள் கருதுகிறார்களா?
அப்படியானால் அது அவர்களின் பிரத்தியோக உரிமை!
"மக்களிடையே
கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான
அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயிலுக்குப் போவதையும், மதச் சடங்குகளில்
கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் கருதுகின்றனர். பக்தர்கள்
பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது." (1976 மே -
காஞ்சிபுரம் அகில இந்து மாநாட்டில் ஜெயேந்திர
சரஸ்வதி).
***
பத்து,
பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய
தென்படுகின்றது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய
இருக்கின்றன. இவைகள் நிறைய வரவரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது.
இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக
வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும்
பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப்
பிடித்துக் கொண்டன" (தினமணி 7.9.1976).
இவற்றைச்
சொன்னதும் குருமூர்த்திகளுக்குக் குருநாதராக இருக்கும் - அவர் கொலை
குற்றத்திற்கு ஆளானபோது ஊண் உறக்கமின்றி அலை பாய்ந்த குருமூர்த்திகளின்
குருநாதரான ஜெயேந்திர சரஸ்வதிதான்.
பக்தி
வளர்ந்தது அதோடு ஒழுக்கக் கேடும் வளர்ந்துள்ளது என்கிறார்
சங்கராச்சாரியார். திராவிடர் கழகத் தலைவரை மட்டந் தட்டுவதாகக் கருதி இந்த
ஒழுக்கக் கேடுகளுக்கு வக்காலத்து வாங்குகிறார் குருமூர்த்தி.
கோயிலுக்குச்
செல்லுவதுபற்றி குருமூர்த்தியின் ஆப்த நண்பர் 'சோ'வின் 'துக்ளக்' என்ன
சொல்லுகிறது? 'பக்தியாவது ஒண்ணாவது கோயிலுக்கு வருபவன் சாமி தரிசனத்துக்கா
வர்றான். 'சைட்' அடிக்கன்ன வர்றான். பொம்மனாட்டி மட்டும் என்ன யோக்கியம்?
அவளும் புடவை, நகை நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி, அம்பாளைத்
தரிசிக்கிறார்?
('துக்ளக்' 1.6.1981 பக்கம் 32)
இதுதான் பக்தி வளரும் யோக்கியதையா? இதில்தான் வீரமணி தோற்று விட்டார் என்கிறாரா குருமூர்த்தி?
கடவுள்
மறுப்பும் மட்டுமல்ல திராவிடர் கழகப் பணி - அதனை குருமூர்த்திகள்
மறந்துவிடக் கூடாது. இந்த நாட்டிலே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தந்தை
பெரியாரும், திராவிடர்கழகச் சிந்தனைகளும் நிறைந்திருக்கின்றனவே! அது
சமூகநீதி வடிவத்திலும், பெண்ணுரிமைத் தன்மையிலும், இனவுணர்வின்
அடிப்படையிலும் நீக்கமற நிறைந்துள்ளதா இல்லையா?
இந்தியாவிலேயே
69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி தமிழ்நாட்டில்தானே. மத்தியிலே மண்டல் குழு
பரிந்துரைப்படி இடஒதுக்கீட்டை நிலை பெறச் செய்தது யார்?
இவ்வாண்டு
மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் நிலை என்ன? மூன்று சதவீதம்கூட
பார்ப்பனர்கள் பெற முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள்
நிமிர்ந்திருப்பதன் பின்னணியில் கழகத் தத்துவம், வெற்றி இருக்கிறது என்பதை
மறக்க வேண்டாம். பிஜேபியைத் தவிர தந்தை பெரியார் படத்தைப் போட்டுதான்
விளம்பரங்கள் என்பது எதைக் காட்டுகிறது?
பிஜேபி,.
அதிமுக இரண்டு கட்சிகள்தானே பார்ப்பனர் களை வேட்பாளர்களாக நிறுத்தின.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் 234 இடங்களில் இரண்டே இரண்டு இடங்கள் தான்
பார்ப்பனர்களுக்கு என்பது எதைக் காட்டுகிறது? தந்தைபெரியார், திராவிடர்
கழகம் என்ற உணர்வு பேரலை கட்சிகளைக் கடந்து பேரரணாக வலு கொண்டு நிற்பதை
மறுத்தால் எங்களுக்கு நல்லதுதான் - உங்களுக்கு சோதனை தான் .
இந்துமதம்
என்பது ஒரு தத்துவம், ஒரு நெறி என்பது அசல் பொய் மூட்டை! இந்துமதம் என்பது
பல முரண்பாடுக் கலவைகளின் உள்ளடக்கம். உண்மை என்னவென்றால் தந்தை
பெரியாரியல் என்பதுதான் இங்கு ஒரு வாழ்க்கை நெறி - பகுத்தறிவுப் பாதை -
மனிதநேய அணுகுமுறை - தொண்டறம், சமத்துவம் என்பது அதன் நடை!
தமிழ்நாட்டில்
மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த நெறியாளர்கள் நிறைந்துள்ளனர். பெரியார் -
அம்பேத்கர் பேரவை தமிழ்நாட்டைக் கடந்து அய்.அய்.டி.களிலும், பல்கலைக்
கழகங்களிலும் பரவி வருவதை மறக்க வேண்டாம்!
ஆட்சியில்
அமர்வோரும் இது பெரியார் மண் என்ற நினைப்பும் - ஏன் அச்சமும் கொண்டு
ஒழுகித்தான் தீர வேண்டும். இயக்கம் செத்து விட்டது என்பதற்கு இவைதான்
அடையாளமா?
இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்று ஒரு முதலமைச்சர் சட்டசபையில் சொன்னது பெரியாருக்கன்றி வேறு யாருக்கு?
குருமூர்த்திகளே, உங்கள் நிலை என்ன? 234 இடங்களிலும் நின்று 'டெபாசிட் காலியானதுதானே மிச்சம்!'
1971இல்
சேலத்தில் ராமனை செருப்பாலடித்தார்கள் தி.க.வினர் என்று பிரச்சாரம்
செய்தீர்களே - அதன் விளைவு என்ன? 138 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக
184 இடங்களில் அல்லவா பெரு வெற்றிப் பெற்று இந்துத்துவா கும்பலின் மூக்கை
வெட்டியது - அவை எல்லாம் மறந்தே போய் விட்டதா!
அந்தத்
தேர்தலின் முடிவைக் கண்டு குருமூர்த்தி வகையறாக்களின் அரசியல் சாணக்கியர்
தலைவர் ராஜகோபாலாச்சாரியார் கையெழுத்திட்டு 'கல்கி'யில் (4.4.1971) என்ன
எழுதினார் தெரியுமா?
"தேசம்
முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த
துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது.
மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று
தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும்
"அணுக்கிரகமும்" பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக
மந்திரி சபை.
"தர்மத்தின்
வாழ்வதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்" என்று பாடி வைத்ததை
நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி
பெறுவோம். நம்முடைய பண்டைய பாவங்களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற
உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து
வந்தால் இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத்
தீட்டு நீங்கி இங்கு தெய்விகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள்
வாழத் தகுதியிழந்துவிட்டது இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும்
என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்."
(கல்கி 4.4.1971)
உங்கள்
குல குருநாதரே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகு யாருக்கு
வெற்றி? யாருக்குச் சாவு? என்பதற்கு ஆராய்ச்சியா தேவை? கணக்குப் போட்டுப்
பாருங்கள் புரியும்.
பிரபல
வரி ஏய்ப்புக் கார்ப்பரேட் சாமியார்தானே உங்கள் இந்து ஆன்மிகக்
கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினர். உங்கள் யோக்கியதை வெளுத்துப் போய்
விட்டதே! வீண் பேச்சும் சாடலும் வேண்டாம் - வண்டி வண்டியாக எதிர் முனையி
லிருந்து வரும் - எச்சரிக்கை!
இந்து என்றால் யார்?
இதோ ஆதாரங்கள்!
இதோ ஆதாரங்கள்!
In
Persian, says our author, the word means slave, and according to Islam,
all those who did not embrace Islam were termed as slaves. (Dayanand
Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore,
1898, in the Introduction)
பாரசீகத்திலிருந்து
வந்த அரபு, மற்றும் பார்ஸி மக்கள் தங்கள் பகுதியான மத்திய ஆசியாவில்
இருந்து இந்திய தீபகற்பத்திற்குள் நுழைந்த மக்களை (ஆரியர்களை) அடிமைகள்,
நாடோடிகள் என்று குறிக்கும் சொல்லாக ஹிந்த் என்றவார்த்தையைப்
பயன்படுத்தினர். அவர்களது மதநூல்களிலும் இந்த வார்த்தையை அதிகம்
பயன்படுத்தியுள்ளனர். (லாலா லஜ்பத் ராய் எழுதிய தயானந்த் சரஸ்வதி அவரது
பணிகள் என்ற நூலின் முன்னுரையில் எழுதியது).
Furthermore,
a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in
1964, gives the meaning of the word Hindu as “chore [thief], dakoo
[dacoit], raahzan [waylayer], and ghulam [slave].” In another
dictionary,
இதன்
பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழமையான பார்ஸி டிக்ஸ்னரி நீண்ட
இடைவெளிக்குப் பிறகு 1964-ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்ஸி பதிப்பகம்
ஒன்றில் மறுபதிப்பானது. அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட
விளக்கமானது திருடன்(வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி
ஓடுபவன்),
கொள்ளைக்காரன்(இருவர்
அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை
கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும் போது பிடிபட்டு
தண்டனைக்குள்ளாக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அடிமைச்சேவகம் புரிபவர்கள்)
என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத்துள்ளனர்.
வெள்ளைக்காரன் இந்து என்று இப்படி சரியாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறான் - அதனை காஞ்சி சங்கராச்சாரியாரும் ஏற்றுக் கொண்டு விட்டாரே!
-------------------------------------------------------------------------------
விவேகானந்தரின் ரதம் நடத்துவோரே இதோ விவேகானந்தர் பேசுவதைக் கேண்மின்!
மத மாற்றத்துக்கும்
கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி?
கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி?
இந்தியாவிலுள்ள
ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்கு காரணம்
என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக
மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.
நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.
வங்காளத்தில்
விவசாயிகளுக்கிடையில் இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பத்தைக்
காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில்
விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார் களுடைய கொடுமையிலிருந்து விலகிக்
கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறி யுள்ளார்கள்.
தோட்டிகளையும்,
பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள்
யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி
எழுமாயின் அதற்கு விடை வருமாறு: அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள்
பொறுப் பாளிகள் அல்லர்.
அவர்கள்
கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப் பாளிகளாவோம் நம்முடைய துன்பத்
துக்கும், நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள். மதத்தில்
போலிகளும், அவ நம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.
அத்தகைய
நயவஞ்சகர்கள் மதத்தின் உட் கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங் களைப்
பிரமாதப்படுத்திச் சுயநலத்தை வளர்ப் பவர்களாயிருக்கிறார்கள். அவர்கள்
பராமார்த் திகம், விவகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான
செயல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும்.
ஏழைகள்
என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக்காக ஏதாவது
செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்
கான ஏழைகளுடைய துன்பத்திலும், துக்கத் திலும் பங்கு கொண்டு உண்மையாகவே
உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்?
மக்கள்
இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப்
பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று
சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன
செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன
செய்கின்றோம்? இவ் வுலக வாழ்வை கடந்து அப்பால் செல்லு வதற்கும் இந்துமதம்
சிறந்த வழிகாட்டியாக விருக்கின்றது.
இந்தமதத்தைச்
சரியாக அறிந்து அதை மக்களுக்குப் புரியும்படி செய்வது இந்துவி னுடைய
பொறுப்பாகும். இதைச் செய்யாததால் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு
மக்கள் போகின்றார்கள். பொதுவாக நம்மவர் களிடையே பேச்சு அதிகம். செயல்
குறைவு. கிளிப்பிள்ளை போன்று புத்தகத்தில் படித்த வற்றையும்,
பிறரிடமிருந்து கேட்டவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.
நமக்குப்
பேசத்தான் தெரியும். நமக்கு எதையும் செயல்படுத்தத் தெரியாது. அதற்குக்
காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் போதுமான உடல் பலம் இல்லை. நம்முடைய
துன்பத்துக்கு நம்மிடமுள்ள உடல் பலகீனமே காரணமாகும்.
மேலும்
நாம் சோம்பேறிகளாகவிருக் கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற் சாகம்
நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும்
தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையிலுள்ள
மக்களை புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரண மாகும்.
(தர்மசக்கரம் துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11)
அட, அயோக்கிய புரோகிதர்களே!
மைசூர்
ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு
சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்த புரத்துக்குப் போனார். வழிநெடுகிலும்
வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே
திருவனந்தபுரத்தை அடைந் தார். அப்போது டிசம்பர் மாதம்.
பேராசிரியர்
சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர்,
திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.
சுந்தரராம
அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு
கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை
சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர்
கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம்
இந்தியாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது. இப்பொழுதும் மகத்தான
காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று
சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார். பிராம ணர்களைப்
பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும்
முரண் படுகிறது.
வேதங்களை இயற்றியவர்கள்?
வேதாந்தத்துக்கு
ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள்
க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிரா
மணர்கள் மகத்தான காரியங்களை இந்தியா வுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு
மாறு படுகிறது.
வேதவியாசர்,
வசிஷ்டர், நாரதர் போன்ற வர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர்.
பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு
இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.
அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக் கிறோம்.
"உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல் லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும் பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்க வில்லை" (3.280)
"முன்
காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர்
மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப்
பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள்" (6.433).
"நெடுங்காலமாகத்
தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது
ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால்
முகம்மதியப் படையெடுப் புகள் சாத்தியமாயின." (6.234)
பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!
"குமரிலர்,
சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும்
நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச் சக்தி இராசபுத்திர அரசரது வாளின்
ஆதர வையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது
அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது
ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப் பட்டது." (1.172)
"பிராமணரல்லாத
வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய
சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர் களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது."
"மேலை
நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக்
காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன!"
(5.180)
இந்த
அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு
தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப்
பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை,
இறைவா! காத்து இரட்சிப்பாயாக!" (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு
(பக்கம் 162 முதல் 164 வரை)
இவற்றிற்கு என்ன பதில்? இந்த விவே கானந்தரை மறைப்பது ஏன்? ஏன்?
No comments:
Post a Comment