பெண்ணுரிமை - வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்று பவரான ரிச்சா மிஸ்ரா என்பவர் காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில் அவருக்கு வயது அதிகமாகிவிட்டது என்கிற காரணத்தைக்கூறி, அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வில் அவரின் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வழக்கில், மூத்த அலுவலர் நியமனங்களில் பெண் களுக்கு 10 ஆண்டுகள்வரை வயது தளர்வு செய்து நிய மிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாகவே அரசுத்திட்டங்களை நேரடியாக பெறுபவர்களாக பெண்கள் இருப்பதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு முக்கியமான காரணியாக இருப்பவர்கள் பெண்களே ஆவர். பொருளாதாரம் மற்றும் அதிகாரங்களில் பெண்களுடைய பங்களிப்பு இருந் தால்தான் உண்மையான வளர்ச்சியை அடையமுடியும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
8.2.2016 அன்று வெளியான 38பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிடும்போது, “சமூக மாற்றங்களின் முக்கிய காரணிகளாக இருப்பதுடன், பெண்கள் மட்டுமன்றி ஆண்களின் வாழ்விலும் மாற்றங்களை பெண்கள் ஏற்படுத்துகிறார்கள். அரசே பெண்களைக் காப்பாற்றுங்கள், பெண்களைப் படிக்கவையுங்கள் என்கிற (பெண்களுக்கு கல்வி) திட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில், பெண்களுக்கு அதிகாரங்கள் அளிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். பன்னாட்டளவில் பெண்கள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் தடைகளையும், பாகுபாடுகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அரசமைப்புச் சட்டம் கூறும் ஆண், பெண் சமத்துவ நிலை என்பதில் உண்மைநிலை வேறாகவே உள்ளது. அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற சமத்துவத்தை எட்டுவதற்கு நீண்டகாலம் ஆகிவருகிறது என்பதுதான் உண்மைநிலை’’ என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரங்கள் அளிக்கப்படுவதில் பெண்கள் நடத்தப்படுகின்ற விதம் என்பதில் மெதுவாகவே முன் னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. பொருளாதார சுதந்திரம் மற்றும் தற்சார்பு, பொதுமரியாதை ஆகிய வற்றின்மூலமாகவே எந்த ஒரு சூழ்நிலையையும் பெண்கள் எதிர்கொள்ளவும், வளர்ச்சிக்கான செயல் பாடுகளில் ஈடுபடவும் முடியும்.
நோபல் பரிசு பெற்றவரான பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், கூற்றை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது இனிய உறவுக்கு வழிவகுப்பதாகும். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.
பெண்களுக்கான அதிகாரம் மூலமாகவே திறமையாக தடைகளைக்கடந்து வளர்ச்சியை எட்ட முடியும். குறிப்பாக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள், உரிமைகள், அரசியல் பங்களிப்புகள் அனைத்திலும் பெண்களால் சாதிக்க முடியும்.
ஆண், பெண் சமத்துவமின்மை காரணமாக வாய்ப் பின்மை, வறுமை உள்ளதாகவும், பெண்களுக்கான அதி காரமளித்தல் எனும் கொள்கை செயலாக்கம் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருக்கும் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் சமத்துவத்தை எட்டுவதற்கு பெண்களுக்கான அதிகாரம் அளிக்கின்ற கொள்கையை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். குழப்பத்துக்கு இடமில்லாமல் பெண்களுக்கான அதிகாரம் என்பது மேலும் ஊக்கத் துடன் வளர்ச்சியை முழுமையாக்கும்’’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே வரவேற்கத்தகுந்த தீர்ப் பாகும். மனித சமூகத்திலே கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை, பிள்ளைப் பெறும் இயந்திரமாகவும், வீட்டு வேலை பார்க்கும் சம்பளமே இல்லாத வேலைக்காரியாகவும் நடத்தினால், பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்ல, அது சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, கல்வி, வேலைகளில் வாய்ப்புக் கதவு திறக்கப்பட்ட நிலையில், மளமளவென்று முன்னேறி வருகிறார்கள்.
இன்னும் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். ஆண்களுக்கு 50 விழுக் காடு, பெண்களுக்கு 50 விழுக்காடு என்ற சம வாய்ப்பு அளிக்கப்பட்டால்தான் உண்மையிலேயே ஜன நாயகத்தையும், சமூகநீதியையும் நாம் மதிக்கிறோம், பின்பற்றுகிறோம் என்று பொருள்.
வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராகத் துரும்புக் கிடைத்தாலும் தூணாக்கிக் காட்டுவார்கள் - அதனை எல்லாம் புரிந்துகொண்ட நிலையிலேதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரியானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பெண்கள் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் எந்த மதம் தடையாக இருந்தாலும் அதையும் தகர்த்தெறிய வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன் தெரிவித்த கருத்துகளை காலந்தாழ்ந்தாவது நீதிமன்றங்கள் நிலை நாட்டுவது வரவேற்கத்தக்கதாகும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment