தந்தை பெரியாரின் தன்னலமற்ற பணி, கடல் கடந்தும் பரவியுள்ளது!
‘‘சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார்’’ நூல் வெளியீட்டு விழாவில்
சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் புகழாரம்!
‘‘சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார்’’ நூல் வெளியீட்டு விழாவில்
சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் புகழாரம்!
‘‘சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார்’’, ‘‘தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி’’ ஆகிய இரு நூல்களையும் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் அவர்கள் வெளியிட சிங்கப்பூர் கவிஞர்களின் சார்பாக கவிஞர் க.து.மு.இக்பால், எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் காப்பாளர் தங்காத்தாள் பெற்றுக் கொள்கிறார்கள். உடன் பேராசிரியர் முனைவர். சுப.திண்ணப்பன், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி, பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம்.
சிங்கப்பூர், நவ.12_ சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிங்கப்பூர் தேசிய நூலக வாரி யத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், பெரியாரின் சிங்கப்பூர் வருகையையும் அதன் பின்பு சிங்கப்பூர் தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களைப் போற்றிடும் வகையில் சிங்கப்பூர் கவிஞர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘‘சிங்கப்பூர் கவிதையில் பெரியார்’’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
மற்றும் சிங்கப்பூர் தமிழ் முன்னோடிகள் அறிஞர் அ.சி. சுப்பையா_- ச.சா.சின்னப்பனார் ஆகியோரின் பணி களைப் பாராட்டிடும் கருத்தரங்கமும் கடந்த 7.11.2015 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜூரோங் கிழக்கு வட்டார நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற் றினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவுக்கு தலைமையேற்று வரவேற்ற மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் கவிதை நூல் வெளிவரக் காரணமாக இருந்த பேராசிரியர் முனைவர்.சுப.திண்ணப்பன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
அடுத்ததாக பாராட்டுரை வழங்கிய முனைவர் சுப.திண்ணப்பன் முதலில் இந்நிகழ்ச்சியை நடத்து கின்ற பெரியார் சமூக சேவை மன்றத்திற்கும், கவிதை நூலுக்கு கவிதைகளை வழங்கிய கவிஞர்களுக்கும், நூலின் துணை ஆசிரியராக இருந்து தகவல்களைச் சேகரித்த பூபாலனுக்கும்,
அ.சி.சுப்பையாவின் ‘‘சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் வரி வடிவ ஆராய்ச்சி’’ என்ற இரு நூல்களையும் இரண்டாவது பதிப்பாக வெளியிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் பாராட்டுகளை தெரி வித்தார்.
அ.சி.சுப்பையா ஒரு தொழில் முனைவர். தமிழகம் சென்றிருந்தபோது சதானந்தர் என்ற துறவியிடம் மருத்துவத்தைப்பற்றி நன்றாக தெரிந்துகொண்டார். சித்த மருத்துவம் ஆயுர் வேத மருத்துவம் போன்ற எல்லா இந்திய மருத்துவத்தைப்பற்றி அறிந்தார். பின்பு சிங்கப்பூருக்கு வந்த பிறகு காந்தரசம் கம்பெனி என்று ஒன்றை ஆரம்பித்தார்.
எனவே, காந்தரசம் சுப்பையா என்றுதான் பெயர் இருந்தது. தமிழர்களின் பல்வேறு வகையான உடல் நோயைக் குணப்படுத்தக் கூடிய காந்தரசம் என்ற மருந்து அவரே உருவாக்கியது. அது அவரை மலேயா முழுவதும் பிரபலப்படுத்தியது.
அடுத்ததாக உள்ளநலம் அதாவது உள்ளத்தில் மண்டி கிடக்கின்ற அறியாமையை அகற்ற வேண்டும். அந்த வகையில் பெரியாருடைய அருமையான சீடராக மாறினார். பெரியார் அவர்கள் 1929, 1954- இல் சிங்கப் பூர் வருகின்றபோது அவருடைய வருகைக்கு முன் னோடியாக இருந்த தமிழவேள் அவர்களுடன் பணியாற்றியவர்.
சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார் மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம். தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார், மன்றத்தின் துணைத் தலைவர் சு.தெ.மதியரசன். பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார் மன்றத்தின் பொருளாளர் ந.மாறன்.
முதலில் 1929- இல் வருகின்றபோது பெரியாருக்கு அளவு கடந்த எதிர்ப்புகள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி பெரியார் சிங்கப்பூர் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கு செயலாற்றியவர்.
பெரியாரின் வருகையின் விளைவாக இந்த நாட் டில் முன்னேற்றங்களை உருவாக்கவேண்டும் என்ற சிந்தனை பரவியது. அதனால், 1932- இல் தமிழர் சீர் திருத்த சங்கம் உருவாக்கப்பட்டது. அதற்கு இவர் முன்னோடியாக இருந்துள்ளார். 1933 ஆம் ஆண்டி லிருந்து 22 ஆண்டுகள் அதாவது 1955 ஆம் ஆண்டு அவர் இறக்கின்றவரை தலைவராக பணியாற்றி இருக்கிறார்.
அப்போது முதலில் தமிழர்களுக்கு ஒரு கட்டடம் வேண்டும் என்று அதற்காக உ.இராமசாமி நாடார் அவர்களிடம் கேட்டு ஒரு கட்டடத்தையும் பெற்றார். அந்தக் கட்டடத்தை பழுதுபார்ப்பதற்கு நிதி வசூலித்துள்ளார் அவரே 19 ஆயிரம் வெள்ளி அந்த காலத்திலேயே நன்கொடையாக கொடுத்து நிதிஉதவி செய்துள்ளார் அது அவரின் வள்ளல் தன்மையை காட்டுகிறது.
சீர்திருத்தவாதி என்று சொல்கிறபோது அந்த காலத்தில் தீபாவளியின் கதையை வானொலியில் கூறும்போது, இவர் சீர்திருத்த சங்கத்தின் மூலமாக நரகாசுரன் கதை பொருத்தமானதாக இல்லை என் பதை விளக்கி தீர்மானம் போட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
கோயில்களில் ஏற்படுகின்ற உயிர்ப்பலியை தடுப் பதற்கு முயற்சியை செய்துள்ளார். இறந்தவர்களின் இறுதி நிகழ்விற்காக அந்தக் காலத்திலேயே 25 வெள்ளி கொடுத்து உதவி இருக்கிறார். இறந்த வர்களை அடக்கம் செய்வதற்கு ஜாதி அடிப்படையில் வெவ்வேறு இடங்கள் வைத்து இருந்துள்ளார்கள் அதனை மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சுயமரியாதைத் திருமணங்கள் மற்றும் கலப்பு திருமணங்களை நடத்தி வழிகாட்டியுள்ளார். ஜாதி வேறுபாட்டை களைவதற்கு, திருமணச் சடங்குகளில் நடைபெறும் அர்த்தமற்ற சடங்குகளை விளக்கி எளி மையான முறையில் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணி அவர் முயன்று இருக்கிறார். அதோடு மட்டுமல்ல இவர் ஓர் இதழாசிரியர். தமிழ் முரசு என்ற பெயர் கொடுத்ததே அ.சி.சுப்பையாதான்.
சீர்திருத்த சங்கத்தினுடைய ஒரு செய்தி கடிதம் மாதிரி தொடங்கியுள்ளார். முதல் மூன்று மாதங்கள் நடத்தி யுள்ளார். அதன் பின்பு தமிழவேள் அவர்களிடம் தமிழ்முரசுவை ஒப்படைத்து நடத்த சொன்னார். தொடர்ந்து தமிழ்முரசுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதேபோன்று சீர்திருத்தம் என்ற இதழையும் நடத்தியுள்ளார்.
இவர் ஒரு மொழியியல் ஆசிரியர் அதுதான் இன் றையதினம் வெளியிடுகின்ற நூல் எழுத்து சீர்திருத்தம் பற்றி ‘‘தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி’’ என்று 1930 இ-ல் முன்னேற்றம் இதழில் கட்டுரைகளாக எழுதினார். இந்த கட்டுரைகளை பெரியார் அவர்களிடத்தில் காண்பித்தார்.
அய்யா பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’-வில் வெளியிட்டார்கள். அதனை நூலாகவும் 1935 இல் வெளியிட்டார்கள் மற்றும் இவரை மதித்து அறிஞர் சுப்பையா என்று பெயர் கொடுத்தார். பெரியார் அந்த எழுத்துகளை ‘விடுதலை’ ஏட்டில் பயன்படுத்தினார். அதன் பின்பு எம்.ஜி.ஆர். அரசாங்கம் எழுத்து சீர்திருத்ததை ஏற்று செயல்படுத்தினார்கள்.
அதன்படி இன்று நாம் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற 13 எழுத்துக்களின் சீர்த்திருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அ.சி.சுப்பையாதான். வெளி நாடுகளில் நம்முடைய சிங்கப்பூர் அரசுதான் முதன் முதலில் ஏற்றுக்கொண்டது.
நம்முடைய சிங்கப்பூர் அரசாங்கம் 1989- இல் “Heritage Hunt” மரபுடைமை தேடல் என்ற ஒரு அமைப்பு தொடங்கி நடத்தியது அதில் இந்த நூலுக்கு முதல் பரிசு வழங்கினார்கள்., அப்போது இந்த நூலை கொடுத்து பரிசு பெற்றவர் முருகு.சீனிவாசன். காரணம் அப்போது இந்த நூல் இவரைத் தவிர வேறு யாரிடமும் இல்லை.
அந்த நூலை அய்யா (ஆசிரியர் கி.வீரமணி) இப்போது நல்லதொரு முன்னுரையுடன் மீண்டும் அச்சிட்டு கொண்டு வந்துள்ளார்கள். அத னால் அவர்களுக்கு என்னுடைய நன்றி. அடுத்ததாக ‘‘சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்’’ என்று ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த காலத்தில் தடை செய் யப்பட்ட புத்தகம் அதை நான் மறைமுகமாக வாங்கி படித்துள்ளேன். இந்த நூலுக்கு தந்தை பெரியாரும், தமிழவேள் அவர்களும் முன்னுரை கொடுத்துள் ளார்கள்.
இந்நூல் புராணத்தில் உள்ள இடர்பாடு களையும், பழைய மூட நம்பிக்கைகளையும் விளக்குகிற ஒரு நூல், புராண பாத்திரங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி ஆய்வு செய்துள்ள ஓர் அரிய நூல் என்றும் தமிழர் தலைவர் வீரமணி அய்யா புதிய பதிப்பில் முன்னுரை கொடுத்துள்ளார்கள்.
இந் நூலை படித்தீர்கள் என்றால் இந்து சமயத்தில் உள்ள புராணங்கள், வேத சாஸ்திரங்கள், கதைகள், மனுநீதி சாஸ்திரங்கள் அனைத்தையும் நாம் ஓரளவுக்கு தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறி மனித நேய நோக்கத்தில் பகுத்தறிவு நோக்கத்தில் என்னென்ன சிக்கல் உள்ளது என்பதை விளக்கி இந் நூலில் அ.சி.சுப்பையா எழுதியுள்ளார் என்று கூறினார்.
அதே போன்று ச.சா.சின்னப்பனார் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றினார். அவரை சிங்கப்பூரின் ‘‘தமிழ்தாத்தா’’ என்று அழைத்தனர். இவர் ஒரு கல்வியாளர், புலவர், பெரியார் தொண்டர். அந்த காலத்தில் இவர் பங்கு பெறாத தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளே இல்லை. 45_க் கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளை ஒருங்கிணைத்தவர்.
தமிழ்க் கல்விக் குழு அமைத்து எல்லோரையும் ஒன்று திரட்டியவர். பொதுவான பாடத்திட்டத்தை அறி முகப்படுத்தியவர். உமறுப்புலவர் தமிழ் பள்ளி என்ற பெயர் வைக்க காரணமாக இருந்தவர். தமிழர்கள் பிழையின்றி பேசவேண்டும் எழுத வேண்டும் என்று அதற்கு சொற்பயிற்சி மன்றங்களை நடத்தியவர். அதில் பயின்றவர்கள்தான் திரு.பெ.கிருஷ்ணன், தி.சு. மோகனம் போன்றவர்கள் என்று கூறினார்.
முக்கியமாக மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை அமைவதற்கு ஏற்பட்ட சிக்கலை தீர்க்க தமிழ வேள் கோ.சாவுடன் சேர்ந்து முன்னின்று செயல் பட்டவர். திருக்குறள் சிங்கப்பூரில் பரவுதற்கு பாடு பட்டவர் என்று பட்டியலிட்டு பாராட்டினார்.
மேலும், இவர் சிங்கப்பூர் திராவிடர் கழகத்துக்கு தலை வராகவும் இருந்துள்ளார். பெரியாருக்கு ‘‘செய்யாற்றன்’’ என்று புது பெயரே வைத்து கவிதை எழுதியுள்ளார். அதாவது ‘‘செய்யாற்றன்’’ பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை எழுதியுள்ளார். செயல் ஆற்றல் மிக்கவர் என்று பொருள்பட பெரியாரை ‘‘செய்யாற்றன்’’ என்று அழைக்கிறார் என்று கூறி பெரியார்மீது கொண்ட அவரின் பற்றை விளக்கினார்.
முக்கியமாக இவரும் அ.சி.சுப்பையாவும் சமகாலத்தவர்கள். ஆகையில் இந்த இரு தமிழ் முன்னோடிகளும் தமிழுக்கும், தமிழருக்கும், சீர்திருத்தத்துக்கும் மிகவும் பாடுபட்டிருகின்ற பெரிய முன்னோடிகள் என்று நாம் பாராட்டவேண்டும். அவர்களை பற்றி அனைவரும் அறிந்திடும் வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்கள் வெளியிடுவதற்கு ஆவனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உரையை நிறைவுசெய்தார்.
விழாவில் சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு உரையாற்றும் போது, பெரியார் சமூக சேவை மன்றம் நடத்தும் ‘‘சிங்கப்பூர்க் கவிதையில் பெரியார்’’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தமைக்கு என் முதற்கண் வணக் கத்தை தெரிவித்துகொள்கிறேன்.
இந்த உரையை எழு துவதற்கு முன் தமிழ்முன்னோடிகள் என்று சொல் கிறார்களே சரி அவர்களை பற்றி தெரிந்து கொள் வோம் என்று நான் இணையத்தில் தேடிப்பார்த்தேன் ஆனால், அவர் (சுப.திண்ணப்பன்) சொன்னதுபோல் என்னால் பல விசயங்களை கண்டுபிடிக்க முடிய வில்லை ஆனால் அத்தனை விசயங்களையும் இங்கு 10 நிமிடத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு அவருக்குத்தான் (சுப.திண்ணப்பன்) நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ் முன்னோடிகளான அ.சி.சுப்பையா -_ச.சா.சின்னப்பனார் அவர்கள் சிங்கப்பூருக்கு செய்த பணிகளை நாம் மறக்காமல் இருக்க ஒரு பாராட்டு கருத்தரங்கத்தை நடத்தி வரலாற்றில் முக்கிய அத்தி யாயத்தை நமக்கு நினைவூட்டிக்கொண்டு இருக் கிறார்கள்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
தோன்றலின் தோன்றாமை நன்று
என்ற குறளுக்கு ஏற்ப அ.சி.சுப்பையாவும், ச.சா.சின் னப்பனாரும் வாழ்ந்துள்ளார்கள். தந்தை பெரியாரின் தன்னலமற்ற பணி கடல்கடந்து பரவி உள்ளது. அதை நாம் இங்கு (சிங்கப்பூரில்) அறிவோம். அந்த பணிகளை எடுத்து கூறும் பெரியார் சமூக சேவை மன்றம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் நாம் அறிவோம்.
நான் பெரிய உரையாற்றப் போவதில்லை ஏனென்றால் எனக்கு தெரிந்தது கொஞ்சம்தான். நான் நாடாளு மன்றத்தில் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால், எனக்கு தெரிந்தது கையளவுதான். கடல் அளவு தெரிந்த இரண்டு பேர் இங்கு மேடையில் இருக்கிறார்கள்.
இந்த கவிதை நூல் வெளியீட்டில் கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் தமி ழர்களாகிய நாம் இதற்கு முழு ஆதரவு கொடுப்போம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரை யாற்றிய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் "வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும் விழா" எனத் தொடங்கி, சிங்கப்பூரில் அ.சி.சுப்பையா தோற் றுவித்த தமிழர் சீர்திருத்த சங்கம் அதனால் தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகளை விளக்கி கூறி அதற்கு காரணமான அறிஞர் அ.சி.சுப்பையாவின் பணிகளையும், ச.சா. சின்னப்பனாரின் தமிழ் பணியினையும் குறிப்பிட்டார்.
1935_லிருந்து சிங்கையில் தமிழ்த்தொண்டு செய்த அறிஞர் அ.சி.சுப்பையா முன்னேற்றம் பத்திரிகையில் ‘‘வரிவடிவ ஆராய்ச்சி’’ கட்டுரைகளை எழுதினார். அதனை தொகுத்து தந்தை பெரியார் 1935 ஆம் ஆண்டு ‘‘தமிழ் வரி வடிவ ஆராய்ச்சி’’ என்ற ஒரு நூலாக வெளியிட்டார்.
அந்த எழுத்துச் சீர்திருத் தங்களை குடியரசு பத்திரிகை வழியாக செயலாக் கியதையும், முதன் முதலாக சிங்கப்பூர் அரசு அதனை அங்கீகரித்ததையும் நன்றி உணர்வோடு குறிப்பிட்டார். இன்று பெரிதும் பாராட்டப்படும் எழுத்துச் சீர் திருத்தத்தை அன்றே மக்கள் மனத்தில் ஏற்றிய பெரியாரின் தமிழ்த் தொண்டிற்கு இதுவே சான்று என்றார்.
தமிழ் மொழி வளர தமிழ் எழுத் துகள் காலத்துக்கு ஏற்ப குறைக்கப்படவேண்டும் என்று அதற்காகவே பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கினார். அதனை நாம் பின்பற்றி தமிழை மேலும் எளிமையாக்க சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று கூறி, பெரியாரைபற்றி பல செய்திகளை இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்டு கவிதை எழுதிய கவிஞர்களுக்கு பாராட் டுகளையும் கூறினார். (முழு உரை பின்னர் தனியாக வெளிவரும்).
சிறப்புரைக்கு முன்னதாகவே மன்றத்தின் செய லாளர் க.பூபாலன் நன்றி கூறினார். சிறப்புரை முடிந்தவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அனைவரும் நூல்களை பெற்றுக் கொண்டு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள். மன்றத்தின் துணைத் தலைவர் சு.தெ.மதியரசன்,
பொருளாளர் ந.மாறன், மலையரசி, இளையமதி, சவுந்தர்ராஜ், மனோகர், தமிழ்ச்செல்வி, ராஜராஜன், கவிதாமாறன், குந்தவி, வளவன், கமலகண்ணன், ராமன் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்களின் உதவி யுடன் செயலாளர் க.பூபாலன் விழா-வை ஒருங் கினைத்தார். சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் (Political Science) துறையில் பட்டம் பெற்ற சையத் அஷ்ரத்துல்லா நிகழ்ச்சியை சிறப்பாக நெறிப்படுத்தி நடத்தினார்.
விழாவில் வெளியிடப்பட்ட ‘‘சிங்கப்பூர் கவிதையில் பெரியார்’’ என்ற நூலையும், சிங்கப்பூர் அறிஞர் அ.சி.சுப்பையா எழுதிய தமிழ் வரி வடிவ ஆராய்ச்சி நூலின் புதிய பதிப்பினையும் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் வெளியிட கிவிறிவி AMPM Property Consultants_இன் நிர்வாக இயக்குநர் ந.மோகன்ராஜ், கவிஞர் க.து.மு.இக்பால், எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் காப்பாளர் தங்காத்தாள் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியார் சிங்கப்பூர் வருகை தந்தபோது எடுத்த அரிய ஒளிப்படங்கள், அ.சி. சுப்பையா, ச.சா.சின்னப்பனார் பற்றிய ஒளிப் படங்கள் மற்றும் அந்தகால தமிழ்முரசு-வில் வந்த செய்திகள் அடங்கிய Presentation Video ஒளிபரப்பப்பட்டது.
-செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தெருமுனை பகுத்தறிவுக் பரப்புரை பயணக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்படும்
- மாணவச் செல்வங்களே பகுத்தறிவுச் சுடர் ஏந்துவீர்!
- 12 வருடங்கள் பாவம் செய்துவிட்டு மகாமகத்தன்று கும்பகோணத்தில் குளித்துவிட்டால் பாவம் போகுமா?
- கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு பாலகிருட்டிணன் விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடை
- கள்ளக்குறிச்சி கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
No comments:
Post a Comment