Thursday, October 15, 2015

குழம்புகிறார்களா? குழப்புகிறார்களா?

இடஒதுக்கீடு சமூக நீதி என்று வரும் பொழுது பி.ஜே.பி.யும் சரி, அதன் குரு பீடமான ஆர்.எஸ்.எசும் சரி எப்பொழுதுமே எதிர் நிலையில் இருக்கக் கூடியவர்கள்தாம். மண்டல் குழுப் பரிந்துரைகளை ஏற்று பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இடஒதுக்கீட்டை சமூக நீதிக் காவலர் பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் செயல்படுத்திய பொழுது, அது வரை வெளியில் இருந்து வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தனது ஆதரவை விலக்கிக் கொண்டு - அந்தச் சமூக நீதிக்கான ஆட்சியைக் கவிழ்க்கவில்லையா?
மக்கள் மத்தியில் சமூகநீதிக்குப் பேராதரவு இருக் கும் நிலையில், அதனை ஆதரிப்பது போலவும் சில நேரங்களில் அவர்களுக்கே உரிய தந்திர முறைப்படி வேறு வகையில் காட்டிக் கொள்வார்கள். டில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு பற்றி தெரிவித்த கருத்து: சமத்துவமின்மை இருக்கும் வரை - தாழ்த் தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார் (தி இந்து தமிழ் 7.9.2014).
அதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஓராண்டுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். இதழான பாஞ்சன்யாவுக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார்? (21.9.2015)
இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமை களும் சரி சமமாக வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும் போது தான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலருடைய வாய்ப்பு களைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ் நிலை, இடஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறை யில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும்.
கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சாரக் காவலர் களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலை முறைகளுக்குத் துரோகமிழைக்கும் வகையில் செயல்படுவது பெரும்பான்மை மக்களுக்குப் பேரிழப்பாகும்.
இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக் காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக அனை வரின் பார்வைகளும் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக் காகத் தான் பாடுபடுகிறான். ஆகவே வளர்ச்சிக் காகத் தியாகம் செய்ய துணிச்சலுடன் இருக்கும் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான் இது போன்ற இட ஒதுக்கீட்டுத் தேவைக்கான போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக் கீடு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசிய மான ஒன்றாகும்
ஒராண்டுக்கு முன்பு இப்பொழுதுள்ள இடஒதுக்கீடு தொடரப்பட வேண்டும் என்கிறார். அதற்கு நேர்  எதிராக இந்த முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கதைக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இந்த மாறுபாடான கருத்து பல தளங்களிலும் கடுமையான விமர்சனங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. உடனே ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளர் அடுத்த நொடியே ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்பட்டார். அவர் பங்குக்கு என்ன சொன்னார்.
இடஒதுக்கீடுபற்றி மோகன் பகவத் கருத்துத் தெரிவிக்கவில்லை. சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றுதான் மோகன்பகவத் வலியுறுத்தியுள்ளார் என்று தலைவரின் பேச்சுக்கு செய்தித் தொடர்பாளர் பதவுரை - மொழிப்புரை பகன்றார் (Economic Times 21.9.2015)
மோகன் பகவத் பேட்டி கொடுத்திருப்பதோ ஆர்.எஸ்.எசின் அதிகார பூர்வ ஏடான பாஞ்சன் யாவுக்கு - அப்படி இருக்கும் போது - அதற்குப் புது விளக்கம் எப்படிக் கொடுக்க முடியும்?
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் முரண்படுவதற்கு முண்டா தட்டுவதில் வெட்கப்படாதவர்கள்தானே!
பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி யும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மும்பையில் அண்ணல் அம்பேத்கருக்கு நினை விடம் உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி (11.10.2015) என்ன பேசினார் தெரியுமா?
பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம், நாங்கள் இடஒதுக் கீட்டை ரத்து செய்து விடுவோம் என்று சில பொய் யர்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். இடஒதுக்கீடு என்பது பாபா சாகேப் அம்பேத்கர் நமக்குக் கொடுத்த தாகும். அதை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பேசினாரே  - பார்க்கலாம் (தினமணி 12.10.2015).
பிகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதால் பிகார் வாக்காளர்களில் பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர் என்பதால் இப்படி நாக்கில் தேன் தடவும் சொற் பொழிவு;   மக்களின் மிக முக்கியமான அடிநாதம் போன்ற சமூக நீதிப் பிரச்சினையில் இப்படி நிமிடத்திற் கொரு முறை சந்தர்ப்பவாதமாக கருத்து சொல்லு கிறார்கள் என்றால் இந்த இந்துத்துவா கூட்டத்திடம் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டாமா?
பிஜேபியில் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதியில் பிஜேபி காட்டும் இரட்டை வேடத் தைப் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க. என்றால் பார்ப்பன ஜனதா என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் - அந்த முகாமிலிருந்து வெளியேறு வதை முதற் கடமையாகவும் கொள்ள வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...