Thursday, October 15, 2015

எண்ணுவதற்கும், உண்ணுவதற்கும் உரிமை இல்லையா? தவறு நடக்கும்போது அதனைக் கண்டிக்க பிரதமர் முன்வர வேண்டாமா?

எண்ணுவதற்கும், உண்ணுவதற்கும் உரிமை இல்லையா?
தவறு நடக்கும்போது அதனைக் கண்டிக்க பிரதமர் முன்வர வேண்டாமா?
பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பிரதமருக்கு அழகல்ல

செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

 நீதித் துறைக்கே காவல்துறைமீது நம்பிக்கை இல்லையெனில்  சாதாரண குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே?
சென்னை, அக்.15- எண்ணுவதற்கும், உண்ணு வதற்கும் கூட இந்த ஆட்சியில் உரிமை இல்லையா? தவறு நடக்கும்போது அதனைக் கண்டிக்கப் பிரதமர் முன் வராமல் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது சரியாகுமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
மறைந்த நாத்திகம் பாலு அவர்களின் படத்திறப்பு நிகழ்வு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 14.10.2015 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. அந்நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி அளித்தார். அவரது பேட்டி வருமாறு:
செய்தியாளர்: மாட்டுக்கறி விவகாரம் பெரிய பிரச்சினையாகி இருக்கிறது; ஒரு எழுத்தாளர்மீது மை ஊற்றப்பட்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இந்தியாவின் நிலை இருக்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், பிரதமர் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்; எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
இரட்டைப் பேச்சுகள்
தமிழர் தலைவர் பதில்: பொதுவாக, இரட்டைப் பேச்சுகள் என்பது இந்த அரசில் புதிதல்ல. ஒரு அமைச்சர் வேறு விதமாகப் பேசுவதும், பிரதமர் பெரும்பாலும் மவுனமாக இருந்து - மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதைப்போல இருப்பதும், அந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்த பிறகு, ஏதோ ஒரு சமாதானத்தை தன்னுடைய சக அமைச்சரின்மூலம் பேசுவதும், பிறகு நிலைமை கட்டுக் கடங்காமல் சென்றால், பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் அவர்களுடைய வாடிக்கைதான்.
நீங்களே தெளிவாகச் சொல்லியதுபோல, எழுத்தாளர் களுக்கு உரிமையில்லை; உண்ணுவதற்கு உரிமையில்லை; எண்ணுவதற்கு உரிமையில்லை; எழுதுவதற்கு உரிமை யில்லை என்பதுபோன்ற நிலை. பொதுவானவர்கள் எல்லாம் - நாம் ஒரு ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்தோடு இருக்கிறோமா, அடிப்படை கருத்துச் சுதந்திரம் பாதுகாக் கப்பட்டிருக்கிறதா என்று அச்சப்படக்கூடிய அள விற்கு வந்திருக்கின்றது.
மிகப்பெரிய சிந்தனை யாளர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய வேதனையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பி கொடுப்பதன்மூலமாக - அறவழியில் - இதைவிட சிறப்பான அணுகுமுறை வேறு இருக்க முடியாது.
பொறுப்பான அரசாங்கமாக இருந்தால் என்ன செய் திருக்கவேண்டும்? உங்களுடைய அச்சம் தேவையில்லாத அச்சமாகும். உங்களுடைய கருத்துச் சுதந்திரம் என்பது நிச்சயமாக உறுதி செய்யப்படும். அந்தக் கருத்துச் சுதந் திரத்தைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்; நாங்கள் அரசியல் சட்டப்படி உறுதியெடுத்துக் கொண்டிருக்கி றோம். அரசியல் சட்டத்தில் அது அடிப்படை உரிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவர்கள் சொல்லி யிருக்கவேண்டும்.
கலாச்சாரத் துறை அமைச்சரின் ஆணவம்
இதைவிட, அதற்குரிய கலாச்சாரத் துறையில் இருக்கின்ற பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா  சொல்கிறார், விருதைத் திருப்பிக் கொடுப்பது என்பது அவர்களுடைய விருப்பம். அதுபற்றி நாங்கள் கருத்துச் சொல்ல முடியாது. வேண்டுமென்றால், அவர்கள் இனிமேல் எழுதிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளட்டும். விருதைத் திருப்பிக் கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், எழுதுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்வது இருக்கிறதே, இதைவிட ஆணவப் பேச்சு வேறு என்ன இருக்க முடியும்? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பிரதமரின் கீழ் பணியாற்றும் ஒரு அமைச்சர் பேசுகிறார் என்று சொன்னால், அமைச்சருடைய பேச்சு என்று எடுத்துக்கொள்வதா? அல்லது இவருடைய பேச்சுதான் என்று எடுத்துக்கொள்வதா? என்கிற சிக்கல் இருக்கிறது.
ஆகவே, கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற  பேரபாயம்; இந்த அபாயம், பின்னாளில் வரக்கூடிய மற்ற அபாயங்களுக்கு முன்னோட்டமா? என்கிற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. இதை செய்தியாளர்கள்மூலம் மறுக்கவேண்டும். அதற்கு அடிப்படை இல்லை என்று சொல்லவேண்டும்.
பிரதமருக்குப் பொறுப்பு இல்லையா?
அப்படிப்பட்ட அறிஞர் பெருமக்களை அழைத்து - அழைக்கக்கூட வேண்டியதில்லை. மாணவர்களோடு பேசுகிறார், மற்றவர்களோடு பேசுகிறாரே பிரதமர் - அது போல, அறிஞர் பெருமக்களே, உங்கள் அச்சம் ஆதார மற்றது; நாங்கள் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட மாட் டோம்; யாராவது எங்களை மீறி அந்தப் பிரச்சினையில் கருத்துத் தெரிவித்திருந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லியிருக்க வேண்டாமா?
கட்டுப்பாடு உள்ள ஒரு அமைப்பு என்று சொன்னால், அவரவர்கள் தான்தோன்றித்தனமாக, தானடித்த மூப்பாக யாரும் கருத்துச் சொல்லக்கூடாது; அப்படி சொன்னால், தலைமை அதனை மறுக்கவேண்டும். அதுதான் சிறந்த தலைமையாகும். அந்தத் தலைமை இன்று இருக்கிறதா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பிரதமருக்கு அழகல்ல! என்று பேட்டியில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...