தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ - தமிழ் உணர்வை தொடர்ந்து நிலைநாட்ட
திருக்குறளை போற்றி புகழ்ந்து நாம் வாழவேண்டும்; அதுதான் திருவள்ளுவருக்கு செய்கின்ற கடமையாகும்!
தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் உரை
சென்னை, செப். 21- தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ, தமிழ் உணர்வை தொடர்ந்து நிலை நாட்ட, அய்யா அவர்கள் சொன்னதைப்போல - பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, திருக்குறளை நாம் போற்றி, புகழ்ந்து என்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே கொண்டு நாம் வாழப் பழகவேண்டும்;
அப்படி வாழப் பழகுவதுதான் வள்ளுவருக்குச் செய்கின்ற உண்மையான கடமை என்று இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார் 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழா - பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் - வள்ளுவர் நூல் வெளி யீட்டு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நம்முடைய லட்சியத்திற்குத் துணையாக விளங்குவது திருக்குறள்!
உங்களையெல்லாம் பார்க்கின்றபோது திருவள்ளுவர் மறுபடியும் பிறந்திருக்கிறாரோ என்கிற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. திருவள்ளுவரை நாம் போற்றுகிறோம் என்று சொன்னாலும்கூட, நாம் போற்றுவது, அவ்வப்போது போற்று வது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு பிரச்சினைக்காக அதனைப் போற்றுவது, இன்னும் சொல்லப்போனால், திருவள்ளுவருடைய திருக்குறள் நமக்கு ஒரு பெரிய ஆதரவாக, துணையாக, நம்முடைய லட்சியத்திற்குத் துணையாக விளங்குவது.
அப்படிப்பட்ட திருக்குறளை நம்முடைய மக்கள் உணரவேண்டிய முறையில் உணரவில்லை. தெளிய வேண்டிய முறையில் தெளியவில்லை. அதனுடைய கருத் துகளில் மாறுபாடுகள் இருந்தாலும், அந்தக் கருத்துக்களிலே எந்தக் கருத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வதன்மூலமாக அந்தக் கருத்துக்கு மரியாதை கிடைக்கும்; ஒரு சிறப்பு கிடைக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்கவில்லை.
இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி நூலாக விளங்குகிறது திருக்குறள்!
நீங்கள் ஆழமாக எண்ணிப் பார்த்தால், தொல்காப் பியம் எப்படி தமிழுக்கு முதல் நூலோ - அதுபோல் திருக் குறளும் முதல் நூல். தொல்காப்பியம் எப்படி தமிழுக்கு முதல் நூலாக, முதன்முதலாக எழுதப்பட்ட நூலாக நமக்கு இன்றைய தினம் கிடைக்கின்ற நூல்களிலே மிகப் பழைய நூலாக தொல்காப்பியம் அமைந்திருப்பதைப்போல, திருக் குறள் எழுதப்பட்ட நூல்களிலே மிகத் தொன்மையானதாக - மற்ற இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி நூலாக விளங்குகிறது.
அதனை நம் மக்கள் முன்னோடி நூல் - முதல் நூல் - கருத்துக்களிலே தெளிவு ஏற்படுத்துகின்ற நூல் - அப் படிப்பட்ட நூலை நாம் போற்றவேண்டிய முறையில் போற்றவேண்டும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டு மானால், தொல் காப்பியத்தைப்பற்றி - அதன் பழைமை யைச் சொல்கின்றவர்கள் பாணினி அவனுடைய இலக் கணம் எப்பொழுது தோன்றியதோ, அதற்கு முன்னாலே தொல்காப்பிய நூல் தோன்றியது என்று சொல்லப்பட் டாலும், அது உண்மையல்ல. தொல்காப்பியம் தோன்றி, அதனுடைய இலக்கணம் தோன்றி, பல நூற்றாண்டுகள் கழித்துதான் பாணினியினுடைய சமஸ்கிருத இலக்கணம் பிறந்திருக்கிறது என்பார்கள்.
அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள்கூட, அந்தப் பாணினி இலக்கணம் தமிழில் தோன்றிய இலக்கணங் களுக்கு பின்னாலே அந்த இலக்கணம் தோன்றியது என் பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் உள்ள அருமையான ஆழமான கருத்துக்களைக் கொண்ட அந்தத் தொல்காப் பியத்திற்கு அந்தப் பாணினி இலக்கணம் எந்த வகையிலும் இலக்கணமாகாது. வடமொழியில் பாணினி இலக்கணமும், தொல்காப்பியமும் சமத்துவம் உடையது என்கிற கருத்தைக் கூட, வட மொழியில் தொல்காப்பியத்தை இயற்றியவர்கள், அதே நேரத்தில், தென்மொழியில் தமிழில் இலக்கணம் அமைந் தால், அது அதற்குச் சமமாகும் என்று கருதியதுதான்.
தமிழ் மொழி இலக்கணம் மற்ற எல்லா மொழி இலக்கணங்களுக்கும் முந்தையது
ஒரு சிறிய உவமையைச் சொல்ல விரும்புகிறேன். இலக்கணங்களில் தமிழ் இலக்கணம், சமஸ்கிருதம் இலக்கணம், இன்னொரு மொழி இலக்கணம் என்பதைவிட, இலக்கணங்கள் மொத்தமாகக் கருதப்பட்டால், அது திராவிட இலக்கணம்தான். அதனுடைய தொன்மையாது? வள்ளுவர் சொல்கிறபோது, மிக அழுத்தமாக சொன்ன ஒரு கருத்து, மொழி இலக்கணங்களிலேயே தமிழ் மொழி இலக்கணம் மற்ற எல்லா மொழி இலக்கணங்களுக்கும் முந்தையது. அந்த சிறப்பை உணராத முறையில் பல பேர் நடந்துகொள்கிறார்கள்.
தமிழ் முதல் மொழி - தமிழ் இலக்கணம் முதன் முதலில் தோன்றிய இலக்கணம். அதைச் சொல்கிறபோது, தமிழில் உள்ள எழுத்துக்கள்தான் சமஸ்கிருத எழுத்துக் களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்படி எடுத்துக்கொள் ளப்பட்ட அறம், பொருள், இன்பம் என்று நாம் சொல்வதற் குப் பதிலாக, அறம், பொருள், இன்பம் என்பதைச் சேர்த்து, நான்கு பொருளாக அதனை வளர்த்துப் பேசுகிறவர்கள், இந்தத் தமிழில் உள்ள இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு சொன்னதில்லை.
ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும், தமிழ் மொழியினுடைய பெருமை, தமிழ் மொழியினுடைய சிறப்பு அதற்குக் குறையாக வடமொழியில் பல கருத்துகளைக் கொண்டு வந்து திணிக்கின்ற முறையில், தமிழ் மொழியில், வடமொழியில் உள்ள கருத்துக்களைத் திணிக்கின்ற முறையில் பல கருத்துக்கள் வந்தன.
திருக்குறளைவிட மூலமான நூல் தமிழுக்கு வேறில்லை
எனவே, அந்த வகையில் ஆழ்ந்து எண்ணிப் பார்த் தால், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். திருக்குறளைவிட மூலமான நூல் தமிழுக்கு வேறில்லை. திருக்குறளைவிட மூலமான நூல் தமிழில் வேறு இல்லை என்று சொல்கிறபோது, தமிழ் உணர்வை எடுத்துக்காட்டு கின்ற நூல். தமிழ் என்கிற அந்த உணர்ச்சியை, தமிழ் என் கிற நினைப்போடு சேர்த்து சொல்லக்கூடிய - அப்படிப் பட்ட ஒரு நூல் திருக்குறளைத் தவிர வேறு இல்லை.
இன்னொன்றை நீங்கள் எண்ணிப் பார்த்தால், திருக் குறளை ஆழமாக, தந்தை பெரியாரைப்போல அதனை அலசி அலசிப் பார்க்கக்கூடிய பெரியவர்களாக இருந்தால், அந்தத் திருக்குறள் - மற்றவர்கள் சொன்ன கருத்துகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மிகச் சிறந்த தமிழ் உணர்ச்சியை அந்தத் திருக்குறளில் காண முடியும்.
ஆகவே நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, திருக்குறளை பெரியார் பார்த்த அந்தப் பார்வையில் பார்த்தால்தான், அதனுடைய சிறப்பு புலனாகும்.
பெரியாரிடமிருந்து விலகிப் பார்ப்பது தமிழர்களுடைய மானத்தை, தமிழர்களுடைய உரிமையைப் பறிப்பதாக இருக்கும்
பெரியார் பார்த்த பார்வையில் பார்க்காமல், வேறு பார்வையில் பார்த்தால், அதனுடைய கருத்து, வடமொழி யில் உள்ள அந்தக் கருத்து - தமிழர்களுக்கு ஈடு கொடுக் கக்கூடிய கருத்து - அந்தக் கருத்து தமிழர்களுடைய மானத்தை, தமிழர்களுடைய உரிமையைப் பறிப்பதாக இருக்கும்.
எனவே, அவற்றை எதிர்த்து, தமிழ் உணர்வோடு தமிழர்கள் வாழ, தமிழ் உணர்வை தொடர்ந்து நிலை நாட்ட, அய்யா அவர்கள் சொன்னதைப்போல - பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, திருக்குறளை நாம் போற்றி, புகழ்ந்து என்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே கொண்டு நாம் வாழப் பழகவேண்டும்; அப்படி வாழப் பழகுவதுதான் வள்ளுவருக்குச் செய்கின்ற உண்மையான கடமை என்று கூறி, நான் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment