Wednesday, March 4, 2015

மீள்வது எப்போது?



கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்


வட நாட்டில் தலைவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு  அன்புடன் பழகுகிறார்கள் - ஒருவருக்கொருவர் வாழ்த்து களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்; ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலை காணப்படவில்லையே;
குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் திராவிடர் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடத்தில் அந்தத் தன்மை காணப்படவில்லையே என்ற ஆதங்கத்தை ஓர் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் அப்படிச் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் அவருக்கு உண்டு.

பிரிந்து கிடக்கும் திராவிடர் அரசியல் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளைக்கூட மேற்கொண்டவர் அவர் என்பது வரலாறு.

அ.இ.அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அதற்காகச் சந்தித்து தேவையான முயற்சிகளை அவர் மேற்கொண்ட நிலையில், பழம் நழுவிப் பாலில் விழும் ஒரு தருணத்தில் குறுக்கே பாய்ந்து கெடுத்தவர்கள் உண்டு.

திராவிட அரசியல் கட்சிகள் மற்ற மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதைவிட திராவிட இயக்கக் கட்சிகளிடையே கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாமே என்ற திராவிட இயக்கப் ஃபார்முலாவைக் கூட அவர் தெரிவித்ததுண்டு.

அத்தகைய தலைவர் திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளுக்குள் பகைமைப் பாராட்டிக் கொள்ளாமல், வடநாட்டுத் தலைவர்கள்போல இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியதை ஓர் ஆரோக்கியமான பார்வை யில் பார்க்க மனமின்றி,

அதனைத் திசை திருப்பி, திராவிடர் இயக்கத்தையே கொச்சைப்படுத்த இதுதான் சந்தர்ப்பம் என்று சேற்றை வாரி இறைக்க முயற்சிப்பது ஆரோக்கியமான தல்ல - அது ஒரு தாழ்நிலை மனோபாவம் அல்லது திட்ட மிட்ட விஷமம் என்று சுட்டிக்காட்டுவது நமது கசப்பான கடமையாகும்.

திராவிட அரசியல் கட்சிகளில் நிலவும் ஒரு போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மற்ற தேசியக் கட்சிகளில் அந்த நிலை இல்லை; அவர்கள் எல்லாம் உயர்ந்த பண்பாட்டுத் தளத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்று பொருளாகாது.

கட்சிக் கமிட்டிக் கூட்டத்தைக்கூட அமைதியாக, ஆரோக்கியமாக நடத்த முடியாத நிலை எல்லாம் உண்டு.
 
தேசியக் கட்சிகளால் தந்தை பெரியார் சந்தித்த அவமானங்கள் ஒன்றா? இரண்டா?

தந்தை பெரியார் சென்ற ஊர்வலத்தில் செருப்புத் தோரணங்களைத் தொங்க விட்டவர்கள் யார்? செருப்பை வீசியவர்கள் யார்? முட்டைக்குள் மலத்தை நிரப்பி பெரியார்மீதும், திராவிடர் இயக்க முன்னணியினர்மீதும் வீசியவர்கள் யார்?

அணுகுண்டு அய்யாவுகளையும், விபூதி வீரமுத்து சாமிகளையும் தயார் செய்து, புழுத்த நாய் குறுக்கே போக முடியாது என்கிற அளவுக்கு திராவிட இயக்கத்தை நாசகார முறையில் கொச்சைப்படுத்திய புராணங்கள் ஏராளம் உண்டே!

திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு என்ற போர்வையில் ம.பொ.சி. கம்பெனிகள் எப்படியெல்லாம் பேசித் தீர்த்தன - இவர்களின் மிச்ச சொச்சங்கள்தான் இப்பொழுது புறப்பட்டுள்ளன!

தூத்துக்குடிக்கு வருகை தந்த தந்தை பெரியார் அவர் களை அவமதிக்கவேண்டும் என்று ராமசாமி கழுதை செத்துவிட்டது என்றும், ராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் சுவர்களில் எழுதி வைத்தவர்கள் யார்?
 
எவ்வளவோ சொல்லலாம்.

வெகுகாலத்திற்கு முன்புகூட செல்லவேண்டாம். பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் உருவம் செய்து பாடை கட்டித் தூக்கிச் செல்லவில்லையா? அவரின் துணைவியாரைக் குறிப்பிட்டு எல்லாம் கொச்சைப்படுத்திக் கோஷம் போடவில்லையா? (இதற்கும் திராவிடர் இயக்கம்தான் காரணம் என்று சொல்லாமல் இருந்தால் சரி)

தந்தை பெரியார் மறைவையொட்டி தலையங்கம் தீட்டாத ஆங்கில ஏட்டுக்கு என்ன மதிப்பீடு? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அன்னை மணியம்மையார் போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் மறைவை ஆபிச் சுவரி காலத்தில் அதே பார்ப்பன ஏடு போடவில்லையா?

அப்படி அசிங்கமாக அநாகரிகமாக அவர்கள் நடந்து கொண்டபோது, இப்பொழுது சம்மன் இல்லாமல் ஆஜராகும் வக்கீல்கள் அப்பொழுது எங்குப் போயிருந்தார்களாம்?

எந்த நோக்கத்துக்காக திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார் என்ற சாரத்தைப் புரிந்து கொள்ளாமல், அப்படி சொல்லுகிறவர் தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முக்கியத்துவத்தையும் புறந்தள்ளி, திராவிட இயக்கத்தைத் தாக்குவதற்கு, கொச்சைப்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்த முயலுவது, திராவிடர் இயக்கத்தின்மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பு உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பரிதாபமே!
குறைகூற முயல்பவர்கள் நல்லெண்ணத்தோடு, திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது; அனைவரும் பின்பற்றவேண்டியது என்று சொல்லியிருந்தால், சொல்லுகின்றவர்கள்மீது ஒரு தனி மரியாதைகூட ஏற்பட வாய்ப்புண்டு. அது அல்லவே அவர்களின் நோக்கம்! திராவிடர் கழகத் தலைவரே இப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள் - பாருங்கள் என்ற பராக்குக் கூறுவதற்கு அல்லவா பயன்படுத்தத் துடிக்கிறார்கள்.

எந்த அளவுக்கு திரு.பழ.நெடுமாறன் அவர்கள் சென்றுள்ளார் என்றால், (தினமணி, 2.3.2015) 40 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை ஜெர்மானிய ஹிட்லரோடு ஒப்பிடும் அளவுக்கு இந்தச் சந்தர்ப்பச் சந்துக்குள் நுழைய முயல்வது கண்டிக்கத்தக்கதே - மிகப்பெரிய திரிபுவாதச் சறுக்கல் இது!

ஒரு காலத்தில் திராவிட அரசியல் கட்சிகளோடு சங்கமித்துப் பயணம் செய்து கொண்டிருந்தவர்தானே - மறுக்க முடியுமா?
 
திராவிடக் கட்சிகளின் 40 ஆண்டுகாலத்திற்கு மேலான ஆட்சியில், தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டிருக்கிற சீரழிவை சரி செய்வதற்கு என்ன செய்வது, எப்படி செய்வது, யாரால் இயலும் என்ற கவலை நாட்டுப்பற்றாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்று மிகவும் கவலைப்பட்டு எழுதியுள்ளார்.

திராவிடர் இயக்க ஆட்சியில் எந்த நல்லதும் நடந்து விடவில்லையா? சாதனைகள் ஏதும் நிகழ்த்தப்பட வில்லையா?
 
திராவிடர் இயக்கத்தைவிட சாதனை செய்தவர்கள் யார்?


சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டவடிவம், தமிழ்நாட்டில் இரு மொழிக்குத்தான் இடம்; மூன்றாம் மொழி இந்திக்கு இடமில்லை.

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு (By an Act) பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் பெண்கள் மறுமலர்ச்சிக்கான அடுக்கடுக்கான திட்டங்கள் (அன்னை நாகம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்,

அன்னை மணியம்மையார், டாக்டர் சத்தியவாணிமுத்து முதலிய வீரப் பெண்மணிகளின் பெயர்களில் எத்தனை எத்தனைப் பெண்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்), பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழிக்கான அங்கீகாரம், அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைச் சட்டம் - இவையெல்லாம் கண்களுக்குத் தெரியவில்லையா? திராவிடர் இயக்கக் கொள் கைகளின் விளைச்சல் இவற்றில் எதிரொலிக்கவில்லையா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுயமரியாதைத் திரு மணத்தைச் செல்லும்படியாக்கவேண்டும் என்று தனி நபர்களாக (சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவன், போளூர் அண்ணாமலை) தீர்மானங்களைக் கொண்டு போன நிலையில், காங்கிரஸ் ஆட்சியினர் ஏன் ஏற்றுக்கொள்ள வில்லை? சுயமரியாதைத் திருமணத்தை வரையறுக்க முடியுமா? (Define) என்று அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் சட்டமன்றத்தில் சொன்னாரே, மறந்துவிட்டதா?

சுயமரியாதைத் திருமணம் என்று வருகிறபோது பெரியார் சொன்னபடி எளிமையாக நடக்கவில்லையே என்று அதிலும் குறையைக் காணும் கண்ணோட்டம்.

திருமணம் மட்டுமல்ல, எளிமையாக, சிக்கனமாக எல்லாவற்றிலும் நடந்துகொள்வது நல்லதுதான். அதை வலியுறுத்துவோம் - நல்லெண்ணம் இருந்தால் இப்படித்தான் சிந்திப்பார்கள்.

பார், பார், சிக்கனமாக சுயமரியாதைத் திருமணங்களை நடத்தச் சொன்னார் பெரியார் - தி.மு.க. - அ.தி.மு.க.வினர் களோ ஆடம்பரமாக நடத்துகின்றனர் என்று அதிலும் குறை காணும் இடத்தைப் பெரிதுபடுத்தும் கண்ணோட்டம்தான் குதித்து எழுகிறது.

திராவிட இயக்கப் பொதுக்கூட்ட மேடைகளிலும், மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் வீட்டிற்கே வந்தும்கூட தோழர்கள் எளிய முறையில் சுயமரியாதைத் திருமணங்கள் செய்துகொள்வதெல்லாம் இவர்களின் கண்களுக்குப் படவே படாதா?

இந்தியத் துணைக் கண்டத்திலேயே பார்ப்பனீயப் பண்பாட்டு ஆதிக்கத்தை ஆணிவேரோடு கெல்லி எரியும் மிகப்பெரிய சாதனையை - வரலாற்றையே திருப்பிப் போட்ட புரட்சியைச் செய்து காட்டியவர்கள் யார்? திராவிடர் இயக்கத் தலைவர் தந்தை பெரியார்தான் செய்தார்; திராவிடர் இயக்க ஆட்சிதான் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தது என்பதை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லையே, ஏன்?

எப்படி வரும்? முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் இடம்பெறத் தகுதியில்லாதவர் பெரியார் என்ற சிந்தனை உள்ளவர்களிடத்தில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெரியார் எந்தவிதத் தொண்டும் செய்யவில்லை என்ற முடிந்த முடிவுக்கு வந்தவர்கள் வேறு எப்படித்தான் எழுதுவார்கள்?

நல்லதுதான்! இதன்மூலம் வரலாற்றுக்கு இவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள் - ஒரு வகையில் அதுவும் வரவேற்கப்படவேண்டியதுதான்.

தமிழர் தலைவரின் பண்பாடு மிளிரும் அறிக்கையின் கருத்தை காமாலைக் கண்ணோடு பார்த்து, திராவிடர் இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் கொச்சைப் படுத்தும் வகையில் திசை திருப்பும் பார்ப்பன ஏடுகளோடு சங்கமமாகி அந்தப் பார்ப்பன ஏடு மெச்சத் தகுந்த வகையில் கைலாகு கொடுத்துக் கட்டுரை எழுதுவது குறித்து காலந்தாழ்ந்தாவது வருத்தம் அடைவார்கள் என்று கருதுகிறோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளைப் புறந்தள்ளி செய்யப்படும் எந்த ஒரு செயலும் பார்ப்பனீய நச்சுக் களைக்கு எரு போட்டு, நீர் ஊற்றி வளர்க்கத்தான் பயன்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளட்டும்!

மீள்வது எப்படி? என்று கேட்கிறார்கள். திராவிடர் சமுதாயத்தையே சீர்குலைத்த - ஜாதி சாக்கடைக்குள் குப்புறத் தள்ளிய கொடிய பார்ப்பனீய ஆக்டோபசின் பிடியிலிருந்து மீள்வதற்குத் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் செம்மாந்த கருத்துகளையும், வழிமுறைகளையும் கடந்த ஒரு நூற்றாண்டாக கூறியும்,

வழிகாட்டியும் வந்துள்ளனர். அவற்றைப் பின்பற்றினால் மீள்வது சுலபமே! இன்றேல், மொழி உணர்வு, இன உணர்வு, மனிதநேயம் - மாள்வது உறுதி!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...