Wednesday, December 10, 2014

எல்லோரும் திருக்குறளைப் படியுங்கள் - எனது ஆசை - - பெரியார் ஈ.வெ.ரா

இந்நாட்டு மக்களனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக் களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் குறள் ஒரு பெரிய செல்வ மாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் (மதத்திற்கும்) நாகரிகத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். இக்குறளின் பேரால் நம் பெருமையைத் திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது.

நமது சரித்திரத்திற்கும் நாகரிகத் திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும், பல காவியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியும். ஆயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக் குத் தான் புரியுமாகையால், பயன் படுமாகையால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது.

திருக்குறளின் பெருமையை 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக்காட்டியவர் காலஞ்சென்ற தோழர் பா.வே.மாணிக்க நாயகர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கை யாகவும் விதாண்டாவாதமாகவும் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக் குறள் கருத்துக்களைத் தான் மேற்கோளாக எடுத்துக்கூறி என்னை மடக்குவார்.

அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துக்களை என்னால் அறிய முடிந்தது. திருவள் ளுவர் நூல் ஒன்றே போதும் - இந் நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை யுண்டாக்க. குறள்களை மட்டுமே எடுத் துக்கொண்டு, அதிலுள்ள எல்லாத் தலைப்புகளின் கீழ் வருவனவற்றையும் இரண்டு மூன்று பிரிவுகளாக, அதாவது படித்த மாத்திரத்தில் பொருள் விளங்கு வனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும், சற்றுக் கடினமான குறள்களை நடுத்தர வகுப்புக்கும், மிகுந்த புதை பொருள் கொண்டு கூட்டிப் பொருள் காண வேண்டியவற்றை மேல் வகுப்புக்கும் வைத்தால் பள்ளிகளில் மதப்படிப்போ, ஒழுக்கப்படிப்போ தனியாக வைக்க வேண்டிய அவசியமே இராது. ஒரு மாணவன் தன்னுடைய பரீட்சைக்குள் திருக்குறள் முழுமையையும் உணரும்படி செய்யப்பட்டால், அது எவ்வளவோ நன்மை. பி.ஏ.படித்தவனுடைய உலக ஞானத்திற்கு மேற்பட்ட அறிவு அனுபவத்துடன் படிப்பதாக அமையும்.

இராமாயணத்தில் நூறு பாட்டும், பெரிய புராணத்தில் இருநூறு பாட்டும், பாரதத்தில் நூறு பாட்டும், பாகவதத் தில் இருநூறு பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளைப் படிப்பது எவ்வளவோ மேலாக இருக்கும். பொருளை வீணாக்கி, காலத்தை வீணாக்கி பி.ஏ.பட்டமும், எம்.ஏ., பட்டமும் பெறுவதைக் காட்டிலும் திருக்குறளை முற்றும் உணர்ந்து பட்டம் பெறுவது எவ்வளவோ மேலாக இருக்கும். பி.ஏ., படிப்பதாலும், எம்.ஏ., படிப்பதாலும் அனுபவ அறி வொன்றும் நாம் பெற்றுவிடுவதில்லை. உத்தியோகம் பெற ஒரு பகுதியாகத்தான் அதுவும் பார்ப்பனருடன் உத்தியோகத் திற்கு நம்மைப் போட்டி போட முடி யாமல் செய்யத்தான் பயன்படுகிறதே யொழிய, உத்தியோகத்திற்கு அந்தப் படிப்பு ஒன்றும் பயன்படுவதில்லை. ஆனால் திருக்குறளின் ஒவ்வொரு கருத் தும் ஒருவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் நன்றாக அதில் விளக்கப்பட்டிருக்கிறது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்

ஒருவன் மற்றவனை இரந்து, பிச்சை யெடுத்துத்தான் பிழைக்க வேண்டு மென்கிற நிலை வந்தால் அந்நிலைக்குக் காரணமான கடவுள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
பாட்டாளி மக்களின் புரட்சியைத் தடுத்து அவர்களை வேறுபக்கம் திருப்பப் பித்தலாட்டக்கூப்பாடுகள் வேண்டா.

ஒரு தொழிலாளி தன் பட்டினிக்கு ஜகத்தைக் காரணமாக நினைப்பதில்லை. கடவுள் தான் அப்படிப் பாடுபட்டு அவனைப் பட்டினி கிடக்கும்படி உற்பத்தி செய்துவிட்டான் என்று நினைக்கிறான்.

அவனுக்கு, போடா, போ! கடவுளாவது வெங்காயமாவது! பாடுபட்டும் நாமெல்லாம் பட்டினி. பாடுபடாத அவனெல்லாம் வயிறு வீங்க உண்பது - இதுதான் கடவுள் நீதியா?

இப்படி ஒரு கடவுள் இருக்குமா? இருந்தால் அந்தக் கடவுள் நமக்கு வேண்டவே வேண் டாம் என்று கூறினால் கடவுள் ஒழிந்து விடும். அப்புறம் உலகப் பொருள் யாவருக்கும் சரி பங்கு என்ற உணர்ச்சி ஏற்படும். அதனால் அவன் உணர முடியும். தான் பட்டினியிருக்கத் தன் முட்டாள்தனமே காரணமென்று. இதைத்தான் கூறியிருக்கிறார் திருக் குறள் ஆசிரியர்.

நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கும் பாடப்புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்கள் ஆவதைவிட, நாலணாவுக்குத் திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் நான் கூறுவேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க, உலக ஞானம் ஏற்பட. அப் படிப்பட்ட குறளைத்தான் நாம் இது வரை அலட்சியப்படுத்தி வருகிறோம்.

ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றே போதும். தமது வேலையைச் சரியாகச் செய்ய. அவர்களுக்கு உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பரீட்சை வைக்கும் போது கூட. திருக்குறளை நன்குணர்ந் தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். அவர்கள் உத்தியோகத்திற்கு அவர்கள் படிக்கும் பூகோள சாஸ்திரமோ, வான சாஸ்திரமோ, திரி கணிதமோ, சரித் திரமோ பயன்படுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அனைவரும் திருக்குறளைப் படித்து, அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை.

- முல்லை பி.எல்.முத்தையா தொகுத்த திருக்குறளின் பெருமை என்ற நூலிலிருந்து வெளியீடு: முனைவர் ஆறு. அழகப்பன், தமிழ்ச்சுரங்கம்


Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/92417-2014-12-06-08-25-44.html#ixzz3LNaT6odi

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...