உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான கலகம் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனராம். கலவரத்தை அடக்க இராணுவம் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளது.
முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கம்பெனி இராணுவம் மற்றும் துணை இராணுவ அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஹூக்கும் சிங், சங்கீத் ஷோம், சுரேஷ் ரானா, பர்தேண்டு சிங் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறிய கருத்துக் கவனிக்கத்தக்கது.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. அதற்கு முன்பாகவே உத்தரப் பிர தேசத்தில் பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்டி விடத் தொடங்கி விட்டனர்.
உத்தரப்பிரதேசத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க.வினர் துடிக் கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது.
இதே கருத்தினை சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நரேஷ் அகர்வாலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் சிறு பான்மை அல்லாதார் என்று உத்தி பிரிக்கும் வேலை யில் (Polarisation) இறங்கி அதில் வெற்றி பெற்றதன் அறுவடையை நரேந்திரமோடி அனுபவித்துக் கொண்டுள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வை அதற்குச் சாதகமாக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இரயில் பெட்டி எரிப்பில் மரணம் அடைந்தவர் களின் உடல்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லவிருந்த திட்டத்தை மாற்றி, அனைத்து உடல்களையும் அணி வகுக்கச் செய்து அகமதாபாத் நகரில் ஊர்வலம் நடத்தச் செய்ததன் பின்னணி நோக்கம் எளிதிற் புரிந்து கொள்ளத் தக்கதே!
எதற்கும் எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன் தத்துவத்தை அதற்கு எடுத்துக் காட்டினார். அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த சிறுபான்மை மக்களை மிகவும் கேவலமான முறையில், கொச்சைப் படுத்தும் வகையில் தங்கள் ஜனத் தொகையைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்.
இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டும், பிரதமர் வாஜ்பேயி செவி சாய்க்கவில்லை. இத்தகவலை கே.ஆர். நாராயணன் அவர்களே பிற்காலத்தில் கூறி, தம் வருத்தத்தைப் புலப்படுத்தினார்.
பாபர் மசூதி இடிப்பு நடந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் மிகவும் கூர்மையாயின. அதற்குக் காரணமான குற்றவாளிகள் - பிஜேபியில் உள்ள பெரிய மனிதர்கள், சங்பரிவார்த் தலைவர்கள் தண்டிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு மேலும் மேலும் முரட்டுத் துணிவு ஏற்பட்டு விட்டது.
காவி பயங்கரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சொன்னபோது எகிறிக் குதித்தனர்; உள்துறைச் செயலாளரோ, காவிகள் கலவரத்தின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் அரசு வசம் உள்ளன என்று அதிகார பூர்வமாக தெரிவித் துள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் தொடக்கத்தில் சிறுபான்மையினர் மீது கண்கள் பாய்ந்தன. பலர் கைது செய்யவும் பட்டனர். பிறகுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. காவிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி சந்தேகத்துக்குரிய வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின் மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொம்பைச் சீவிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதனை இந்திய வாக்காளர்கள் அடையாளம் காணாவிட்டால் அதற்கான விலையைப் பிற்காலத்தில் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!
1 comment:
If UP will become Gujrat, it will shine and illitracy will come down.
they will get 24/7 power supply
No liquor shops
No corruption
but u all know only Godhra , which is one among the bloody 2000+ riots happened after indian freedome
Post a Comment