மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வற்புறுத்தல்
காவிரி நடுவர் மன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டும், தாமதமாக கெசட்டில் தீர்ப்பை வெளியிட்ட மத்திய அரசு - அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தாமல் காலங்கடத்திவருவதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி மேலும் காலதாமதமின்றி அவற்றை ஏற்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே, அதன் சட்டப் படிக்கான தொடர் நடவடிக்கையான நிரந்தரமான சுதந்தரமான நிபுணர் களைக் கொண்ட காவிரி ஆணையம் உருவாக்கப்பட வில்லை; காவிரி நீர் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரம் பெற்ற அந்த ஆணையத்தை அமைக்காமல் இன்னமும் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.
மத்திய கெசட்டில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கே, பல ஆண்டு கால தாமதம் ஆனது; தமிழ்நாட்டுத் தலைவர்கள், விவசாயிகளின் தொடர் குரல்கள்; தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு; இவற்றைத் தொடர்ந்து மத்திய அரசினை உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பு ஆணை மூலம் வற்புறுத்திய பின்னர் - இந்த சாதாரண சட்ட நடவடிக்கையெடுத்தது மத்திய அரசு.
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்கே இந்த மெத்தனம்; பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல கெசட் செய்யா மலேயே, சட்டபூர்வ உரிமையான தமிழ்நாடு காவிரி நீர்ப் பங்கீடு பெறுவதை - தவிர்த்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்தது மத்திய அரசு! பிறகு எப்படியோ கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டது.
2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
காலதாமதம்!
காலதாமதமாகித்தான் - மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டது - அதுவும் உச்சநீதிமன்றம் சுரீரென்று தட்டிக் கேட்ட பிறகே - தமிழக முதல்வர் போட்ட வழக்கில்.
ஆனால் இன்னமும் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசால் நியமிக்கப்படவே இல்லை!
இதனால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக் காலத்தில் - காவிரி மேற்பார்வைக் குழு என்ற ஒன்று உரு வாக்கப்பட்டு, அதில் அந்த மாநில தலைமைச் செய லாளர்கள், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது!
தேவை நிரந்தர ஆணையம்
நிரந்தர ஆணையம் உடனடியாக அமைக்க தமிழ்நாட்டில் உள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் கெஞ்சுதல், கொஞ்சுதல் எல்லாம் இல்லாமல், நாம் நமது காவிரி நீர் உரிமையை நிலை நாட்டிட முடியும். அது அவசரம் அவசியம்!
ஏற்கெனவே காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடியைச் சரிவரச் செய்யாமல் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்!
அடுத்த குறுவை சாகுபடி என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகள் தொடர்ந்தன!
நிலத்தடி நீர் வறண்டுவிட்டது; பம்புசெட் விவசாயத் திற்கோ வாய்ப்பே குறைவு; காரணம் தொடர் மின்வெட்டு, டீசல் விலை ஏற்றம் - இப்படி அடுக்கடுக்காக விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விட்டார்கள்.
கர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்தும், ஏதோ பிச்சை போடுவது போல கர்நாடக அரசு கூறுவது வேதனைக்குரியது!
கர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்தும், ஏதோ பிச்சை போடுவது போல கர்நாடக அரசு கூறுவது வேதனைக்குரியது!
குறுவை சாகுபடிக்கு வழி செய்க!
தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நமது உரிமைப்படி நமக்குச் சேர வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை ஏற்கெனவே பாக்கி வைத்த 100 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது கர்நாடகத்தின் பொறுப்பு.
தற்போதைய குழுவினர் நேற்று நடைபெற்ற (டில்லி) கூட்டத்தில்கூட, தமிழகத்திற்கு ஏராளம் தந்துவிட்டோம்; மேலும் இப்போது தர இயலாது என்று அதிகப் பிரசிங்கித்தனமாகக் கூறியுள்ளதாவது நமது வாதத்திற்கு வலிமை சேர்க்கிறது.
ஆனால் கர்நாடக செயலாளர் ஏற்கெனவே வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கிவிட்டது;
இன்னும் 10 டி.எம்.சி., இம்மாத இறுதிக்குள் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நிரந்தர விடியல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை ஆணையங்களை (நிபுணர்கள், நிதித்துறை வல்லுநர்களைக் கொண்டவை) மத்திய அரசு மேலும் கால தாமதமின்றி நியமித்து, நீதி வழங்கி, காவிரி டெல்டா குறுவை சாகுபடியாவது சரியாக நடந்திட உதவிட வேண்டுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.7.2013
17.7.2013
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இஸ்லாமியர்களை நாய்கள் என இழிவுபடுத்திய நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!
- இந்திக்குள்ள உரிமை தமிழுக்குக் கிடையாதா? கலைஞர் கேள்வி
- திராவிடர் கழகம் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்
- நரேந்திரமோடி ஒரு திருந்தாத ஜன்மம்! நாயோடு சிறுபான்மையினரை ஒப்பிட்டுக் கூறும் திமிர்!
- மணவழகர் மன்ற விழாவில், தமிழர் தலைவர் சூளுரை!