Thursday, May 2, 2013

ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்குச் செய்யும் துரோகம்!


மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டுவோம் - வாரீர்!

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை சேது  சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவோம் - ஆதரவு திரட்டுவோம். அனைவரும் வாரீர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பாக அமையும், தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற திட்டத்தினை வேண்டாத தமிழ்நாட்டுத் தலைவர்களே இல்லை என்றே சொல்லலாம்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், எம்.ஜி.ஆர். என்ற மறைந்த அத்தனைத் தலைவர்களும், கட்சி வேறுபாடு இன்றி இதனை பற்பல கால கட்டங்களிலும் வலியுறுத்தி, செயலில் கொண்டு வர வேண்டுமெனக் கோரியுள்ளனர் - தத்தம் கட்சிகள் சார்பில்.
ரூ.2400 கோடி திட்டம்
இத்திட்டம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை 2004இல் அமைத்த வாய்ப்பின் காரணமாக, 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் (U.P.A.) அடுத்து 2007இல் துவக்கப் பட்டது. அதற்கு முன்பே தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதே (NDA)   வாஜ்பேயி பிரதமராக இருந்த காலந்தொட்டே இது தமிழ்நாட்டுக் கட்சிகளால் வற்புறுத்தி, ஆராயும் படியான ஒரு நிலையையும் ஏற்படுத்தின.
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்...
அதன்படி - பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இதற்கான ஆய்வுகளை - நாகபுரியில் உள்ள நீரி (Neeri)   என்ற புவியியல் ஆய்வுக் கூடத்தின் மூலம் சரியான வழித் தடம் பற்றி ஆய்வு செய்து, ஆறாம் வழித்தடமே வாய்ப்பானது என்று கூறப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனை ரூ.2400 கோடி திட்டமாக செயல்படுத்த முனைந்தது!
இன்னும் 22 கிலோ மீட்டரே!
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இடையறாத திட்டமிட்ட சீரிய முயற்சி - தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல்துறை அமைச்சராகவே பொறுப் பேற்று மிக வேகமாகச் செய்ய முனைந்து இன்னும் ஒரு சிறு பகுதிதான் (22 கி.மீட்டர்தான்) முடிக்க வேண்டிய பாக்கி பகுதி என்ற நிலை இருந்தது.
இந்தக் கால கட்டத்தில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி என்ற பார்ப்பனரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வழக்குப் போட்டனர்.
அரசியல் நோக்கமே!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்துவிட்டால் அதன் பெருமை - அதன் அரசியல் லாபம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு - தி.மு.க.வுக்கு அல்லவா சென்றுவிடும் என்ற அரசியல் நோக்கில் (பிஜேபி ஆட்சியிலேயே தேர்வு செய்த தடம்தான் என்ற போதிலும்) ஆதாம் பாலம் போன்ற மணற் திட்டுகளை, இராமன் பாலம் என்று கயிறு திரித்து, பார்ப்பன ஊடகங்கள் ஆதிக்கம் காரணமாக இதை ஊதிப் பெரிதுபடுத்தி, முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆய்வுக் குழு புதிதாக போடப்பட்டு (கால தாமதம் செய்து கட்டை போடுவதுதான் அதன் நோக்கம் என்பது அரசியல் பார்வையாளர் அறியாததா?) அதன் அறிக்கைக்காக என்று, காங்கிரசு சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வடநாட்டில் இந்த இராமன் பாலப்  பிரச்சாரம் தங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்று கருதியோ என்னவோ, இந்த முட்டுக்கட்டை போட்டவர்களுக்கு மறைமுக உதவி செய்வது போல நடந்து கொண்டு கிணற்றில் போட்டனர்!
வெறும் நம்பிக்கை போதுமானதா?
மக்கள் வரிப் பணம் ரூ.2000 கோடி செலவழிக்கப்பட்டு, பல வகையில் கப்பல்களின் பயண தூரம் இலங்கையைச் சுற்றாமல் சுருங்கியுள்ளதனால் எரி பொருள் சிக்கனம், இலங்கை அரசுக்குச் செல்லும் பண வருவாய் தமிழ் நாட்டிற்கு, இந்திய அரசுக்கு வரும் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவைபற்றி சிறிதும் எண்ணா மல், வெறும் மூடநம்பிக்கை அடிப்படையில் அறிவிய லுக்கும் ஆதாரங்களுக்கும் முரணாக இப்படி ஒரு செயற்கைத் தடையை ஏற்படுத்தி, 4 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய திட்டத்தைக் கிடப்பில் போட, இவ்வாறு பல நிலைப்பாடுகளை உருவாக்கி விட்டனர்.
இராமன் பாலம் - ஆதாரம் உண்டா?
1. இராமன் கட்டிய பாலம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆதாம் பாலம் - மணல் திட்டுக்கள் என்றே அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வாசகங்களிலேயே கூறப்பட்டுள்ளன.
2. அய்.மு. கூட்டணி அரசு (U.P.A.) இந்த ஆறாம் வழித்தடத்தை (ஆதாம்பாலம் உள்ள தடத்தை) தேர்வு செய்யவில்லை; நீரி என்ற ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் ஆறு தடங்களில் இதுவே சிறந்தது என அறிக்கை தந்து தேர்வு செய்து  பணிகளும் நடந்தன. தி.மு.க.வோ மற்ற அய்க்கிய முற்போக்குக் கட்சிகளோ முடிவு செய்த இடம் அல்ல அது! பா.ஜ.க. அமைச்சர்களே அப்போது கையொப் பமிட்டு முடிவு செய்யப்பட்ட தடம் (அருண்ஜேட்லி, எஸ். திருநாவுக்கரசர், வேத்பிரகாஷ்கோயல், உமாபாரதி ஆகிய பிஜேபி அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டமிது - பிரதமர் வாஜ்பேயியாலும் அறிவிக்கப் பட்டதும்கூட).
3. தனது இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை ஏன் அப்போதைய மத்திய ஆட்சிகள் செயல்படுத்தவில்லை என்பதை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வே வற்புறுத்தி விட்டு, இப்போது இப்படி தலை குப்புற பல்டி நிலைப்பாடு எடுப்பது எதனால்?  அரசியல் தவிர வேறு எந்த நியாயமான காரணமும் இல்லை. அது தி.மு.க.வின் சாதனையாகி விடக் கூடாதே என்பதுதானே உள் நோக்கம்?
இதைவிட தமிழ்நாட்டு வளர்ச்சிக்குக் கேடு செய்யும் கொடுமை வேறு உண்டா?
வேலை வாய்ப்பு, பொருளாதார செழுமைபற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையே விளக்கமாக விவரித்த நிலையிலா இப்படி ஒரு முரண்பட்ட அரசியல் நிலைப்பாடு?
நண்பர் வைகோவும், இடதுசாரிகளும் கண்டிக்க வேண்டாமா?
4. நண்பர் வைகோ இதை செயல்படுத்த தான் எடுத்த முயற்சிகள் அதிகம்; எனவே தனக்கும் தன் கட்சிக்குமே முதல் பெருமை கிடைக்க வேண்டும் என்று மார்தட்டியவர்.
இடதுசாரிக் கட்சித் தோழர்களும் இடையறாது வற்புறுத்தியதோடு, பல மேடைகளில் தி.மு.க.வோடு இணைந்து சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பற்றியும், இராமன் பாலம் என்பது கற்பனை என்றும் முழங்க வில்லையா?
தமிழக அரசின் நிலைப்பாடாகவே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, கட்சியாடி முடக்க நினைப்பதை - மதிமுக பொதுச் செயலாளரும், இடது சாரிகளும்  எதிர்க்க வேண்டாமா?
ஓட்டுக் கண்ணோட்டமா?
இதில் நாட்டுக் கண்ணோட்டம் முக்கியமல்லவா? ஓட்டுக் கண்ணோட்டம் அல்லது கூட்டணி உத்தேசக் கண்ணோட்டத்திற்காக மவுனம் சாதிக்கலாமா? உடனே குரல் கொடுக்க வேண்டாமா?
தி.மு.க. -கருமத்திற்குரியவர்கள் கடைசி வரை இருப்பர் - என்பதற்கேற்ப வரும் மே 15ஆம் நாள் - எழுச்சி நாள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஆதரவைத் திரட்டுவது என்பது வரவேற்கத்தக்கது!
இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டு வளர்ச்சியோடு இணைந்த - இன்றியமையாத திட்டம். எனவே இதனை மத்திய அரசு செயல்படுத்திட அனை வரும் ஒத்தக் கருத்துள்ளவர்கள். ஓரணியில் நிற்க மனமில்லா விட்டாலும் - முரண்பாடு இல்லாமல் தனித்தனியாகவேனும் குரல் கொடுக்க - செயல்படுத்த முன் வாருங்கள்!
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கும் துரோகம்!
தமிழ்நாடு அரசின் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை இராமனைக் காட்டி முடக்குவது அண் ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும்கூட அது செய்யும் துரோகம் -  மக்கள் விரோதம்! இதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று மக்கள் ஆதரவைத் திரட்டிட அனைவரும் முன் வருவார்களாக!

-  கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...