இலட்சக்கணக்கானோரின் வாழ்வைப் பறித்த ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி (6)
(நேற்றைய தொடர்ச்சி)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இட ஒதுக்கீட்டை எப்படி செயல்படுத்துறதுன்னு சுத்தமா தெரியலைங்கிறது தெள்ளத் தெளிவா தெரியுது (Crystal Clear) ன்னு நீதியரசர் சொல்லியிருக்காருன்னு பார்த்தோமே! அது தெரியாம செஞ்சதா? இல்லை தெரிஞ்சே செஞ்ச சதியான்னு விசாரிச்சாத் தான் தெரியும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதையும் தாண்டி இன்னொரு விசயத்தையும் தன்னோட தீர்ப்புல சொல்லியிருந்தார் நீதியரசர்.
27. Thus, the Teachers Recruitment Board itself has now impliedly conceded before this Court that the method of selection under various categories already done by the Teachers Recruitment Board is not correct and therefore the lists of selected candidates already published are liable to be withdrawn. Therefore, the entire select lists, including the select lists for the posts for which there is no challenge, are liable to be set aside.
ஏற்கெனவே ஆசிரியர் தேர்வுவாரியத்தால் பல்வேறு பிரிவுகளுக்கு செய்யப்பட்ட தேர்வு முறைகளிலும் (method of selection under various categories) சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என தேர்வு வாரியமே மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே, இதற்கு முன்பு வெளியிடப்பட்ட பட்டியல்கள் எல்லாமே திரும்பப்பெறப்பட வேண்டியவை. ஆகவே, இங்கே நீதிமன்றத்தை அணுகாத இடங்கள் உள்பட அனைத்துத் தேர்வுப் பட்டியல்களுமே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவையே!
ஆக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வழக்கில், இட ஒதுக்கீட்டை நாங்க எப்படி அமல்படுத்துறோம்னு ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்த விளக்கங்கள்ல இருந்தே, இது சரியான நடைமுறை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்ட நீதியரசர், இதற்கு முன் பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்பட்ட தேர்வு முடிவுகளும் இப்படித் தான் -னு தெளிவா புரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் திரும்பப்பெறணும்னு சொல்லியிருக்கு
அப்போ, இந்த TET தகுதித் தேர்வுப் பட்டியலும் 24.08.2012-இல், இந்தத் தீர்ப்புக்கு முன்னாடி வந்தது தானே, அப்பன்னா இதுவும் தப்பான பட்டியல். திரும்ப வாங்கணும்கிற மாதிரி தானே தீர்ப்பு இருக்கு!
உண்மை தான். அதேமாதிரி, வெறும் தகுதித் தேர்வு முடிவை மட்டும் வச்சுக்கிட்டு வேலையும் கொடுக்க முடியாது. தெரியுமா?
ஆம். TET என்பது தகுதித் தேர்வு மட்டுமே, இதை வைத்துக் கொண்டு நேரடியாக வேலை கொடுக்க முடியாது; கொடுக்கவும் கூடாது! ஆசிரியர் பணி நியமனத்திற்கென்று எப்போதும் வழக்கமாக தனி நடைமுறைகள் பின்பற்றப்படும்! அதாவது வகுப்பு வாரியான பணியிடங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட ஒரு முறைப்படியான அறிவிக்கையை அரசு வெளியிடும்.
தகுதி பற்றிய விவரங்களும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களும், (நேரடிப்போட்டித்தேர்வு /பதிவுமூப்பு /வெயிட்டேஜ் மதிப்பெண்கள் இவற்றுள் ஏதேனும் ஒன்று) குறிப்பிடப்பட்டு, வயதுவரம்புச் சலுகை, இன்னபிற சலுகைகள் குறித்த விவரங்களும் இடம்பெறும்! அதில் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப் படுவார்கள்.
இதுபோன்ற முறையான அறிவிக்கையை வெளியிட்ட பிறகுதான், அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களைக் கொண்டு எந்த ஓர் அரசுப் பணியிடத்தையுமே நிரப்பமுடியும்! அதில் விண்ணப்பித்தவர்களை வரிசைப்படுத்தி, அதில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு விகிதாச்சார அளவான 69ரூ இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்! இதுதான் வழக்கமான சட்டப்படியான நடைமுறை!
இந்தத் தகுதித் தேர்வுக்கென ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையிலும் வேலை வாய்ப்புக்கான நடைமுறைகள் தனியே நடைபெறும் என்றும், இந்தத் தேர்வு வேலைவாய்ப்புக்கான நேரடித் தேர்வு இல்லை என்றும், இதில் வெற்றி பெற்றுவிட்டதாலேயே, எவரும் கட்டயாமாக் வேலை தந்தாக வேண்டும் என்று கேட்கமுடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது! இதோ TRB வெளியிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில்((04/2012-07.03.2012)) குறிப்பிடப்பட்டுள்ளசெய்தி.
General Information:
The Teacher Eligibility Test is merely as a pre-requisite eligibility test for those who are seeking appointment as a teacher.
For appointment of teachers the Teachers Recruitment Board will follow separate selection procedures.
Recruitment of Teachers will be conducted separately as and when there is need following the guidelines of the Government of Tamil Nadu and the Communal Roster in vogue.
…. qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment.
ஆனால் நடந்தது என்னவென்றால், மேற்கண்ட அறிவிப்புக்கு மாறாக, தனியே எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல், சட்ட விரோதமான முறையில், TET மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பட்டியல் வெளியிடப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளது. இதோ, 05.12.2012-இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைப் பாருங்கள். (http://trb.tn.nic.in/TET2012/05122012D/msg.htm) .
Candidates who have secured 60% marks and above were called for Certificate Verification. Certificate Verification was held in two spells i.e. for TNTET main examination and for TNTET Supplementary Examinations.
Now, the Board release the tentative provisionally selected list of candidates for the post of secondary grade teachers and graduate assistants. The said selection for secondary grade teachers is purely based on seniority with communal rotations and the priorities laid down by the Government of Tamil Nadu and the selection list for graduate assistants is prepared based on the weightage marks awarded as per the G.O.Ms.No.252 School Education Department dated 5.10.2012.
முன்பு போட்டித் தேர்வுக்கும், தகுதித் தேர்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தோமே, அதை மறைத்து தகுதித் தேர்வையே போட்டித் தேர்வு போன்ற தோற்றத்துடன் காட்டியிருக்கிறார்கள் என்று சொன்னோமே - அது இது தான்.
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கூட கோரப்படவில்லை. வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.
பொதுப்போட்டி - 31 %
பிற்படுத்தப்பட்டோர் -26.5%
பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) -3.5 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20 %
தாழ்த்தப்பட்டோர் (பட்டியல் இனத்தவர்) - 18%
பழங்குடியினர் - 1 %
(இவை தவிர, மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 30% , மாற்றுத் திறனாளிகள் 2% , தமிழ் வழியில் பயின்றோர் - 20% ஆகியோருக்கு கிடைமட்ட இட ஒதுக்கீடு)
இப்படித் தெளிவாக சமூகநீதி அடிப்படையில் வரையறுக்கப் பட்டுள்ள, இந்திய அரசியல் சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ள இட ஒதுக்கீடு பற்றி சுத்தமாகக் கண்டுகொள்ளாமல் தான் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமனத்துக்கு அறிவிப்பு வெளிவந்தது. நேரடியாக தகுதித் தேர்வில் தேறியோர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால், இதில் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வகுப்புவாரியான சுழற்சி, முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளதாக அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்களே! அப்படி யானால் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம்? ஆம்.. அப்படித் தான் தோன்றும். அப்படி நமக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பித்தலாட்டமான வார்த்தைகள். அது தான் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை வகுக்காமல், இட ஒதுக்கீட்டிற்கான வழியையே அடைத்தாயிற்றே! அப்புறம் ஏன் இந்த சால்ஜாப்பு என்றால், நம்மை ஏமாற்றத் தான்..
05.12.2012-இல் வந்த அறிவிப்பின்படி முதல் மற்றும் மறுதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கலந்தாய்வுக்கும் வருமாறு அழைக்கப்பட்டு சுடச்சுட வேலை வழங்கப்பட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என தேர்ச்சிபெற்ற 19000 பேருக்கும் வேலை வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டதே, அதில் தமிழ்நாட்டின் 69 இட ஒதுக்கீட்டின் படியேவா தேர்ச்சி இருந்தது? தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை என்று சொன்னாலே அங்கே இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று தானே பொருள்.
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - தகுதித் தேர்வில் தேறியவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் செய்யப்படவேண்டும். (இதற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என்ற அளவுகோலை அறிவித்தார்கள். ஆனால், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதிவுமூப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.)
அதாவது சமூகநீதிப்படி தகுதி அளவுகோல் வரையறுக்கப்படாத பொதுப்போட்டிக்குரிய 60% மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் தேர்ச்சி அடைந்ததாகக் கருதப்படுவார்கள். அதன்பிறகு அவர்களது தகுதி மதிப்பெண்களுக்கு முன்னுரிமை இல்லை. பணிக்கு விண்ணப்பம் செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படவேண்டும். அப்படியெனில், ஒவ்வொரு பிரிவினருக்கும் வகுப்பு வாரியான பதிவு மூப்பு கட்-ஆப் தேதி அறிவிக்கப்பட வேண்டும். அப்படி அறிவிக்கப்பட்டால், பொதுப்போட்டிக்கென்ற தேதிக்குப் பிறகு ஒரு தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், பதிவு மூப்பு கட்-ஆப் தேதி விவரமும் வெளியிடப்பட வில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலும் வெளியிடப்பட வில்லை. வேலை உண்டா? இல்லையா? என்பதைத் தனித் தனியாக அவரவர் தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டிருந்தார்கள்.
எடுத்துக்காட்டாக சில விவரங்களை நாம் பார்ப்போம். பின் வருவனவற்றில் நீங்கள் கவனிக்க வேண்டியது - பதிவுத் தேதி (Emp. Reg. Date)
அதாவது, 2002-இல் பதிவு செய்தவர் BC என்று குறிப்பிடப் பட்டுள்ளார். 2006-இல் பதிவு செய்தவர் SC என்று குறிப்பிடப்பட் டுள்ளார். ஆனால், 2010-இல் பதிவு செய்தவர் GT என்று குறிப்பிடப் பட்டுள்ளார். இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? எப்படியென்றால், வகுப்புவாரியான கட்-ஆப் தேதி அறிவிக்கப்படவில்லை. Turn என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது இட ஒதுக்கீட்டின் படியான Turn அல்ல.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் என்ன பிரிவு என்று குறிப்பிட்டுள்ளார்களோ, அதையே எடுத்துப் போட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்ற தோற்றம் தரப்பட்டுள்ளது. மற்றபடி, இடஒதுக்கீட்டுவிதிகளின்படி, பதிவுமூப்பு அடிப்படையிலோ அல்லது பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வகுப்புவாரிப்பிரிவு அங்கு குறிப்பிடப்படவில்லை! உண்மையில், பழைய மோசடி, அதாவது நீதிமன்றம் எது முறையற்றது என்றதோ, அது தான் மீண்டும் நடந்துள்ளது. 69% இட ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் அது போன்ற தோற்றத்தைத் தரத் தான் BC, SC, ST என்று குறிப்பிட்டுள்ளார்கள். முற்பட்ட வகுப்பினரை மட்டும் பொதுப்பிரிவு GT என்று குறிப் பிட்டுள்ளார்கள்.
அதனால் தான் 2010-இல் பதிவு செய்தவர் GT என்றும், 2002-இல் பதிவு செய்தவர் BC என்றும் குறிப்பிடபட்டுள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம்:
பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று அறிவித்திருந்தது. வெயிட்டேஜ் மதிப்பெண்களே மோசடி. ஒருவர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு, 12-ஆம் வகுப்பு, கல்லூரியில் இளநிலையில் பெற்ற மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண்கள், இவற்றுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் இதெல்லாம் சேர்த்து கணக்கிடப்படுமாம். மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடந்த காலத்தில், 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணையும், நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கிட்டு பட்டியல் தயாரித்தார்கள்.
நுழைவுத்தேர்வு நீக்கப்பட்டதே, இத்தகைய நடைமுறையால் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தான். ஆனால், அதே போன்ற, இன்னும் சொல்லப்போனால், அதை விடக் கொடுமையான நடைமுறைதான் இந்த பணிநியமனத்தில் சொல்லப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்கள்.
12-ஆம் வகுப்பில் வெவ்வேறு பாடப் பிரிவு படித்தவர்கள் எடுத்த மதிப்பெண்களையும், கல்லூரியில் வெவ்வேறு பாடப்பிரிவில் படித்த மதிப்பெண்களையும் எப்படி கணக்கில் எடுக்கிறார்களோ தெரியவில்லை. நல்ல வாய்ப்பாக, LKG, UKG-ல் எடுத்த மதிப்பெண்களுக்கும், அப்பா, அம்மா எடுத்த மதிப்பெண்ணுக்கெல்லாம் வெயிட்டேஜ் தரவில்லை.
சரி, அப்படியே வெயிட்டேஜ் மதிப்பெண்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் நடைபெற்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என்ன? அந்த மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப் பட்டியல் எங்கே? மதிப்பெண்ணே போடாமல், தகுதிப் பட்டியல் வெளியிட்டதை இதுவரை யாராவது கண்டிருக்கிறோமா? மதிப்பெண் தான் தகுதி என்ற பிறகு அது இல்லாமல் எப்படி தகுதிப் பட்டியல்? கேலிக் கூத்தாக அல்லவா இருக்கிறது. ஆனால் இது வெறும் கேலிக்கூத்து அல்ல. எண்ணற்றோரின் வாழ்வை அழித்த மோசடி!
எங்கே வெயிட்டேஜ் மதிப்பெண்? எதை வைத்து அவர் BC, இவர் GT என்று கணக்கிடப்பட்டது? இது தான் வேலை உண்டா இல்லையா என்று மட்டும் சொன்ன பட்டியல்.
யெஸ்-சுன்னா யெஸ்-ன்னு சொல்லு...
நோவுன்னா நோவுன்னு சொல்லு என்ன சினிமா பாட்டா இது? மதிப்பெண்கள் இல்லை; ஆனால் இது தான் தகுதிப் படியான முடிவு என்கிறார்கள்.
இந்த அப்பட்டமான அநீதி தான் இந்த பணிநியமனம் முழுக்கவே நடைபெற்றிருக்கிறது. தொடக்கத்தில் இருந்து நடந்திருக்கிறது. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மோசடி நடந்திருக்கிறது. அறிவிக்கைகள் வெளியிடப்படவில்லை. வெளியிடப் பட்ட அறிவிக்கையில் OCக்கான பணியிடங்கள் என்று சொல்லி விட்டு, OC என்பது என்ன விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே இல்லை. இடஒதுக்கீட்டை குழப்ப வேண்டும் என்ற நோக்கம் தொடக்கம் முதலே இதில் ஈடுபட்டவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
இத்தனைப் பெரிய மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? அல்லது எத்தனை பேர்? இந்தக் கேள்விகளுக்கான விடையை, அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. மேற்கண்ட மோசடி முடிவுகள் அனைத்தையும் திரும்ப வாங்கிவிட்டு, சமூகநீதி அடிப்படையிலான மதிப்பெண் அளவுகோலுடனான புதிய பட்டியல்களை வெளியிட்டு, வகுப்புவாரியான காலிப் பணியிட விவரங்கள் அடங்கிய புதிய பணி நியமன அறிவிக்கை வெளியிட்டு முழுமையான முறையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதே உரிய நீதியாகும்..
இனிமேல் உள்ளவற்றில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அநீதியானது. இந்த வேளையில், இன்னொரு முக்கியமான செய்தியையும் கவனிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாது
குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்த கதையாக அரசுப் பணியிடங்களுக்கு நடந்த இந்த மோசம் மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே போன்ற அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை தந்திருக்கிறது.
NCTE -இன் விதிப்படி தகுதி மதிப்பெண் 60% என்பதை, பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தரவேண்டிய மதிப்பெண் தளர்வுகளை தனியார் பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையில் தகுதித் தேர்வில் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி தேர்ச்சி பெற்றவர்களே (60% எடுத்தவர்களே) சேர்க்கப்பட வேண்டும் என்று, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு NCTE கொடுத்துள்ள வாய்ப்பையும் பறித்துள்ளனர். இதுபற்றிய தெளிவான பார்வை பள்ளிக் கல்வித்துறைக்கும் இல்லை. தனியார் பள்ளிகளுக்கும் இல்லை.
மதிப்பெண் பட்டியலைத் தந்தால், அதைக் கொண்டு தனியார் பள்ளிகளிலாவது பணி பெற வாய்ப்புடைய லட்சக் கணக்கான ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இதனால் ஏற்படும் பாதிப்பின் முழுப் பரிமாணமும் புலப்படும்.
************************
அனைவரின் கண்களைக் கட்டிவிட்டு, மிக சூழ்ச்சியோடு செய்யப்பட்ட இந்த முறைகேட்டை, மிக நுணுக்கமாக ஆராய்ந்து, உழைத்து, ஆதாரங்களைச் சிறுகச் சிறுகத் திரட்டி, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தர்க்கபூர்வமான வாதங்களையும் வைத்து, கவனமாக அரசியல் கலந்துவிடாமல் நடுநிலையோடு அணுகி, இதனை சமூகநீதிச் சிக்கலாக மட்டும் வெளிக்கொணர்ந்திருக்கும், சென்னை லயோலா கல்லூரியின், மனிதம் மேம்பாட்டுத் துறைப் பேராசிரியர் தோழர் பெரியார்பேரன் அவர்கள் பாராட்டுக்குரியவர். லயோலா கல்லூரியின் மாணவர்களும், பேராசிரியர்களும், இத்தகைய சமூகநீதிப் பிரச்சினைகளில் முன்நிற்பது மிகவும் பாராட்டுக்குரியது!
சமூகநீதியினால், இட ஒதுக்கீட்டினால் பலன்பெற்ற பலன் பெறப் போகிற அத்தனை ஆசிரியர்களும், அலுவலர்களும், அவர்களது சங்கங்களும், அரசியல் இயக்கங்களும், படித்துத்தேறிய, தேறுகிற அனைத்துத் தலைமுறையினரும், இதே போன்று செயல்படுவதற்கு கடமை உள்ளவர்களே! இந்த சமூகநீதியைக் குலைக்க, அழிக்க அனைத்து உயர்ஜாதியினரும் குறிப்பாக பார்ப்பனர்களும் தங்களின் பதவி, பட்டம், அறிவு, வாய்ப்பு, அதிகாரம் அத்தனையையும் பயன்படுத்தும் போது, இதனால் தங்கள் உரிமையை மீட்கப் போகிற நமக்கு கடமை இன்னும் அதிகம் அல்லவா? விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமல்லவா?
ஒடுக்கப்பட்டோரே, சிந்திப்பீர்!
தொகுப்பு: ஈரோட்டு கண்ணாடி
தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்
1. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் சமூகநீதி இடஒதுக்கீடு எங்கே? குறிப்பாக நெட், செட் தேர்வுகளில் உள்ளது போன்றும், இதே ஆசிரியர் தகுதித் தேர்வில் அண்டை மாநிலமான ஆந்திராவில் இடஒதுக் கீட்டின்படி, வகுப்புவாரியாக தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள தகுதி மதிப்பெண்கள் அளவுகோல்கள் எங்கே?
2. முதுநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு வெளியிட்டது போல், சட்டப்படி முறையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டிய, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான, வகுப்புவாரி காலிப் பணியிட விவரங்களுடன் கூடிய முறையான அறிவிக்கை எங்கே?
3. மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும், சுமார் 11,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படை என்று சொல்லப்பட்டுள்ளதே. அதற்குரிய வகுப்புவாரியான கட்ஆஃப் தேதி என்ன? குறிப்பாக பொதுப்பிரிவு இடங்களுக்குரிய கட்ஆஃப் தேதி எங்கே.? மற்றும்
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படை என்றுசொல்லப்பட்டுள்ளதே. அதற்குரிய வகுப்புவாரியான கட்ஆஃப் மதிப்பெண்கள் என்ன? குறிப்பாக பொதுப்பிரிவு இடங்களுக் குரிய கட்ஆஃப் மதிப்பெண்கள் பாடவாரியாக எங்கே.?
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படை என்றுசொல்லப்பட்டுள்ளதே. அதற்குரிய வகுப்புவாரியான கட்ஆஃப் மதிப்பெண்கள் என்ன? குறிப்பாக பொதுப்பிரிவு இடங்களுக் குரிய கட்ஆஃப் மதிப்பெண்கள் பாடவாரியாக எங்கே.?
4. -NCTE- விதிகளின்படி, அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகளும் மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளும், அவை தங்களுக்கெனப்பின்பற்றும் இடஒதுக்கீட்டு கொள்கைகளுக் கேற்கேற்ப, ஆசிரியர்தகுதித்தேர்வில் தகுதிமதிப்பெண்களை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் தளர்த்தி நிர்ணயித்துத் தங்கள் பள்ளிகளில், பணி நியமனம் செய்து கொள்வதற்கு ஏதுவாக, இந்தத் தேர்வை எழுதிய அனைத்து ஆசிரிய மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ்களை மற்ற மாநிலங்களும், மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ., நிறுவனமும் வழங்குகின்றனவே, தமிழகஅரசு ஏன் அது போன்று ஆசிரியத் தகுதித் தேர்வு எழுதிய அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கவில்லை?
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- அடுத்த பிரதமர் என்று தூக்கி நிறுத்தப்படும் மோடியின் முகத்திரை கிழிந்தது
- பொது எதிரி யார் என்றுதான் பார்க்கவேண்டும்; நமக்குள் விமர்சனம் செய்துகொண்டிருந்தால் எதிரி தப்பித்து விடுவான்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- முதல் அமைச்சரின் கவனத்துக்கு ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு!
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து இடஒதுக்கீட்டு மோசடி
- ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி - (4)
- அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது!
- ஒட்டுமொத்தமாக களவாடப்பட்ட 69% இட ஒதுக்கீடு
No comments:
Post a Comment