இட ஒதுக்கீடே வழங்கப்படாமல் 21,000 பணி நியமனங்கள்! அம்பலமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடி
நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கூறி வருகின்றனராம் முகநூலில்!
அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன என்றும் தெரியாது. ஏன் என்றும் தெரியாது. இதில் தகுதிக் குறைவு என்பதற்கு பேச்சே கிடையாது என்பதும் புரியாது. ஆயிரம் முறை சொன்னாலும் அதுகள் பேசுவதைப் பேசிக் கொண்டுதானிருக்கும். அவர்களுக்கும் இறுதியில் நாம் விளக்கம் சொல்வோம்.
முதலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்திருக்கும் மோசடிகள் பற்றித் தெரிந்து கொள்ள அடிப்படையாகச் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இடைநிலை ஆசிரியர்கள் (Secondary grade)
2. பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate assistants / BT assistants)
3. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate assistants)
- இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அவசியமில்லை. நேரடிப் போட்டித் தேர்வோ அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் செய்து கொள்ளலாம் (முன்பிருந்த முறைப்படியே).
இது குறித்து மத்திய அரசு புதிய விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை.
ஃ மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு, அவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர்களாகப் பணிபுரியத் தகுதியானவர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் - அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.
- கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான முறைகேடு அரங்கேறியிருக்கிறது. நாமும் ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.
முதலில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த விவரங்கள். பணி நியமனங்கள் என்று வரும்போது எவ்வளவு காலிப் பணியிடங்கள்? அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு? என்பதைக் குறிப்பிட்டு அறிவிக்கை (Notification) வெளியாகும். நாமும் இந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளதா என்பதைப் பார்த்தாலே போதுமானது.
ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று மொத்தமாக 21,000 பேருக்கு வேலை. அதில் 10,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 8000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 3000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என்று செய்தி வெளிவந்த போது, நாமும் நிரப்பப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டி ருக்கிறதா என்ற பார்வையுடன் தான் இப்பிரச்சினையை அணுகத் தொடங்கினோம்.
அப்போதுதான் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் கொண்ட அறிவிக்கை கூட வெளியிடப்படாதது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையின் வேர் இன்னும் ஆழத்தில் இருப்பதும் புரியவந்தது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். அதென்ன தகுதித் தேர்வு? போட்டித் தேர்வு? தனித்தனியாகவா இருக் கிறது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் நீங்கள் விழித்துக் கொண்டீர்கள் என்று பொருள். ஏனென்றால் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் குழம்ப வைத்ததுதான் இந்தப் பணி நியமன மோசடியில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி!
UPSC, TNPSC, TRB என்றெல்லாம் நடத்தப்படுகின்ற னவே அவைதான் போட்டித் தேர்வுகள். அதாவது மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதை அறிவித்து அதற்காகவென்றே நடத்தப்படுவதுதான் போட்டித் தேர்வு.
NET, SLET, SET, TET போன்றவையெல்லாம் தகுதித் தேர்வுகள் (Eligibility Test). இவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது வேலை பெறுவதற்கான தகுதித் தேர்வே தவிர, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை என்பது கிடையாது.
போட்டித் தேர்வு
1. வேலை வாய்ப்பிற்கான அறிவிக்கைகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு.
2. ஒவ்வொரு ஆண்டும் நடத்த அவசியம் இல்லை (எ.கா. TNPSC)
3. பெற்றுள்ள மதிப்பெண்களைப் பொறுத்து ஒவ்வோ ராண்டும் வகுப்பு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் மாறும்.
4. இதில் வெற்றி பெறுவோருக்கு தேர்ச்சிச் சான்றிதழ் தரப்படாது. மதிப்பெண்களை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்ய முடியாது.
5. கட்-ஆப்க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி.
6. இதிலிருந்து நேரடியாக பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.
தகுதித் தேர்வு
1. வேலை வாய்ப்புக்கான அறிவிக்கைக்கும் தகுதித் தேர்வுக்கும் தொடர்பில்லை
2. ஒவ்வோராண்டும் நடத்தப்படும் (TET ஒன்றுக்கு மேலும் நடத்தப்படலாம்).
3. மொத்த இடங்கள் எவ்வளவு என்ற பிரச்சினை இல்லை. எனவே வகுப்பு வாரியான தனித்தனி தகுதி அளவுகோல்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகோல்கள் மாறாது.
4. வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்ட தனித்தனி தகுதி அளவுகோலுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
5. தகுதித் தேர்வில் பெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை என்பது உறுதி கிடையாது. இதில் வெற்றி பெற்றோரை தனியே விண்ணப்பிக்கச் சொல்லி, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முறை என்னவோ அதற்கேற்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டித் தேர்வு மதிப்பெண் கட்-ஆப் / பதிவு மூப்பு தேதி கட்-ஆப் ஆகியன வகுப்பு வாரியாக அறிவிக்கப்படும். மற்றபடி இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே!
6. இதிலிருந்து நேரடியாகப் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்து வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வதுபோல தகுதித் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதற்குள் அரசு அறிவிக்கும் ஆசிரியர் பணிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இந்தத் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். (தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணியில் இடம் பெற முடியும் என்பதுதான் இப்போதைய சட்டப்படியான நடைமுறை) அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க இத்தகுதி மதிப்பெண்கள் பயன்படும். பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வோ / பதிவு மூப்போ / வெயிட்டேஜ் மதிப்பெண்ணோ காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்பு வாரியான கட்-ஆப் அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
இப்படியான தகுதித் தேர்வுகள் பல ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படுகிறது. NET / SLET தேர்வுகளில் வெற்றி பெற்றோர் தான் கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றோ ராவர்.
அதேபோலத்தான் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு)ல் பெற்ற தேர்ச்சி பெற்றோர் தான் பள்ளி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவதற்கு மட்டும்தான் TET பயன்படும்; பயன்படுத்தப்பட வேண்டும். மற்றபடி பணி நியமனத்திற்கும் TET-க்கும் நேரடித் தொடர்பே கிடையாது.
சரிங்க அப்படின்னாலும் TET-ல தகுதி மதிப் பெண் ணுக்கு மேலே தானே வேலை கொடுத்திருக்காங்க. தகுதி பெறாதவங்களையெல்லாம் வேலைக்கு எப்படி எடுக்க முடியும்? கல்வித்தரம் கெட்டுப் போயிடாதா? வேணும்னா அடுத்த வருசம் எழுதி தகுதிப்படுத்திக்க வேண்டியது தான்.
இந்த மாதிரிப் பிரச்சினையெல்லாம் NET/SLET-ன்னு சொன்னீங்களே அங்கேயெல்லாம் வருதா? என்று இந்த தகுதித் தேர்வில் தோல்வியடைந் தாகச் சொல்லப் படும் சிலரே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி தகுதியானவர்கள், தகுதியில்லாத வர்கள் என்று பிரித்துச் சொல்லும் மாபெரும் அளவுகோலான தகுதி மதிப்பெண் என்பது எவ்வளவு?
60 விழுக்காடு
அதாவது 100-க்கு 40 விழுக்காடு குறைவான மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை அவர்கள் தகுதியு டையவர்கள் என்பது தானே உயர்ந்தபட்ச தகுதிக்கான அளவு கோல்!
ஆமாம். அதேதான்.
இந்த 60 விழுக்காடு மதிப்பெண் என்பது யார் யாருக்கு?
அனைவருக்கும்தான். அதிலென்ன சந்தேகம்?
அனைவருக்கும் எப்படி ஒரே அளவுகோல்? இந்திய அரசியல் சட்டத்தில் சமூகநீதி அடிப்படை யிலான தனித்தனி அளவுகோல்கள்தான் நிர்ணயிக்கப் பட வேண்டும். திறந்த போட்டிப் பிரிவினருக்குத்தானே 60 விழுக்காடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியெனில் பிற்படுத்தப்பட்டோருக்கு...? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு...? தாழ்த்தப்பட்டோருக்கு...?
பழங்குடியினருக்கு...?
மாற்றுத் திறனாளிகளுக்கு...?
பார்வையற்றோர்களுக்கு...?
60, 60, 60, 60, எல்லோருக்கும் 60 விழுக்காடுதான், யாருக்கும் தனித்தனியாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட வில்லை.
இப்போது புரிகிறதா? பார்ப்பனர்கள் முதல் பார்வையற்றோர் வரை அனைவருக்கும் ஒரே அளவுகோல்! எப்படி இருக்க முடியும்? சமூக நீதியில் மோசடி என்றோமே அதன் அடிப்படை புரிகிறதா இப்போது? இதுவரை இந்தியாவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கவே முடியாது.
அரசியல் சட்டத்திற்கு விரோத மாக, உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை வழங்கியிருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளுக்கு மாறாக, இந்த தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்திற்கும் ஆணைக்குமே புறம்பாக இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது. திட்டமிட்ட சதி அரங்கேறியிருக்கிறது.
NCTE எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆணைய விதிப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தகுதித் தேர்வுகளை நடத்தி வகுப்புவாரியான தனித்தனியான கல்வி அளவுகோல்களை வெளியிட்டு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்ணே கிடையாது என்று சமூகநீதிக்கும், அரசியல் சட்டத்திற்குமே எதிரான நிலைப்பாடு எப்படி எடுக்கப்பட்டது?
ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்று கேட்பதற் கான அடிப்படை வாய்ப்பையே இல்லாமல் செய்து, சமூகநீதிப்படி வேலை பெறும் தகுதிக்கான ஊற்றுக் கண்ணையே அடைத்தது யார்?
முன்னேறிய ஜாதியினரும், அனைத்து வாய்ப்புகளும் பெற்றவர்களே 40 விழுக்காடு குறைவாக 60 விழுக்காடு எடுத்திருந்தாலும் தகுதியானவர்கள்தான் என்னும்போது அவர்களை விட வாய்ப்புக் குறைந்த, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் சமூகநீதிப்படி நிர்ண யிக்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் ஏன் நிர்ணயிக்கப்பட வில்லை? திறந்த போட்டியைத் தவிர 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வெற்றிருக்க வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களுக் கான இடங்கள் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் விளங்கவில்லையா? இடஒதுக்கீடே வழங்கப்பட வில்லை என்பது புரியவில்லையா?
சட்டமும், நீதிமன்றமும் TET விசயத்தில் சொல்லியிருப் பவை என்ன? நடந்திருப்பது என்ன? நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? நடந்துள்ள சதியின் விவரங்கள் நாளைய விடுதலையில்!
தோழர்களே, பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்த்து விட்டீர்களா? அவர்களை ஒன்று திரட்டத் தயாராகி விட்டீர்களா?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம்
- தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்தில் சமூகநீதிக்குச் சவக்குழியா?
- தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் மறைக்கப்பட்டது - ஏன்?
- ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுதான்!
- அமெரிக்கத் தீர்மானம் உருக்குலைந்த,உருப்படாத தீர்மானம்: கலைஞர் பேட்டி
No comments:
Post a Comment