- அறிவு ஆதனி
IAS, IP உள்ளிட்ட பதவி களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத் தில் தேர்வு முறைகளில் மாற்றங் களை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பு சார்ந்த ஒரு அமைப்பு சமூக நீதிக்கு எதிரான செயல்களில் ஒன்றாக தேர்வு முறைகளில் மாற்றங்களை செய் துள்ளது.
முதல் நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில்/படிகளில் நடைபெறும் இத்தேர்வு முறையில் முதன்மை தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தான் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
தேர்வுமுறை மாற்றம்: தாள் - I, II என தாள் IX வரை 9 தாள்கள் இருந்த பிரதான தேர்வில் தற்போது தாள் - I,II என தாள் VII வரை 7 தாள்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வட்டார மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது முன்பு 22 வட்டார மொழிகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம் எடுத்து எழுத வேண்டும் ,இதனால் அவரவர் தாய் மொழியையோ விரும்பும் வட்டார மொழியையோ ஒரு பாடமாக எடுத்து எழுத இயலாத நிலை உருவாகி யுள்ளது.
தாள் - I (ஆங்கிலம்) தவிர மற்ற அனைத்துத் தாள்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம் என்கிற முறை இருந்தது. அது தற்போது மாற்றப்பட்டு எடுத்துக்காட்டாக தமிழ்மொழி வாயிலாக பட்டம் படித்தவர்கள் மட்டுமே தமிழ் மொழியில் முதன்மைத் தேர்வு எழுத முடியும். என மாற்றப்பட் டுள்ளது. மேலும் 25 மாணவர்கள் அந்த மொழியில் அந்த குறிப்பிட்ட பாடத்தில் தேர்வு எழுத விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
முதன்மைத் தேர்வில் தமிழை ஒரு தாளாக தேர்வு செய்து எழுதலாம் என்று இருந்த நிலை தற்போது தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழை விருப்பப்பாடமாக தேர்வு செய்து எழுத முடியும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
25 விருப்பப்பாடங்கள் மற்றும் 22 மொழிப்பாடங்கள் உள்ள நிலையில் மற்ற பாடங்களுக்கு இல்லாத ஒரு கட்டுப்பாடு மொழிப்பாடங்களுக்கு மட்டும் ஏன்? உதாரணமாக சட்டம் என்ற பாடத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய சட்டத்தை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை (எந்த வொரு பட்டப்படிப்பு படித்தவரும் தேர்வு செய்து எழுதலாம்) ஆனால் மொழிப் பாடங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுபாடு?
இந்தியா போன்ற பல்வேறு மொழி கலாச்சார இயல்பு கொண்ட நாட்டில் வட்டார மொழிகளை நசுக்குவது எதற்காக? தமிழ் படித்தவர்கள் தேர்வில் வெற்றிபெற்று உயர்ந்த பதவிக்கு வரக்கூடாதா? பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் கிராம மக்கள் கல்வியிலும், பதவிகளி லும் உயர்ந்து வருவதைப் பொறுக்கவில்லையா?
தாய்மொழி: ஒருவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தாய் மொழியில் மட்டுமே சிந்திக்க இயலும் என உளவியல் கூறுகிறது. தாய் மொழிக்கல்வியே அறிவு வளர்ச்சிக்கு சிறந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மனித சமுதாயம் வளர அறிவு சார்ந்த வளர்ச்சி தேவை என்கிற நிலையில் ஏனிந்த இரட்டை அளவுகோல்? பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்பதவிக்கு வருவது யாருக்கோ, எங்கேயோ எரிகிறதோ?
சமூக நீதி: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்கிறநோக்கில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முகவுரையிலும், அடிப்படை உரிமையிலும் கூறப்பட்ட சமூக நீதி, கேசவானந்த பாரதி Vs கேரளா, Basic Structural (1973) என்ற வழக்கில் சமூக நீதி என்பது அடிப்படை கட்டமைப்பு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் (அடிப்படை கட்டமைப்புகளை மாற்றவோ, நீக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை) இத்தேர்வு முறை மாற்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
அரசியலமைப்பு சார்ந்த ஒரு அமைப்பே அரசியல் சட்டத்திற்கு எதிராக மாற்றதை கொண்டு வந்திருப்பது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்
சமூக நீதிக்காக போராடி அதில் வெற்றியும் கண்ட தந்தை பெரியார், அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் கொண்டு வர காரணமானவர் என்பதை மறந்து விட்டார்களா? பெரியார் கண்ட இயக்கம் சமூகநீதிக் களத்தில் வடபுலத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. இந்தியாவெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து போராடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறும் நிலையில் கிராமப்புற, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவது தடுக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் இச்செயல் முதுகெலும்பை முறிக்கும் செயல் என்பது அப்பட்டமான உண்மை.
தாய்மொழிக் கல்வி சிறந்தது என்கிற நிதர்சனமான உண்மை இருக்க, வட்டார மொழி நசுக்கல் என்பது இந்தி திணிப்பின் இரண்டாவது முயற்சி, இரண் டென்ன எத்தனை முறை முயன்றாலும் இங்கு அது எடுபடாது என்பது தெரியாதா?
பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் மக்களாட்சி நாட்டில் வட்டார மொழியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல். இது அரசு தனது பொறுப்பிலிருந்து விலகு வதைக் காட்டுகிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு, நலி வடைந்தோருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியை உயர்த்திப்பிடிக்கும் ஊன்றுகோல், அனைவரும் சமம் என்கிற நிலையில் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது பின்னால் தாக்கும் கொல்லைப் புறத்தனம்.
இத்தேர்வு முறை மாற்றத்தால் கிராமப்புற, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து சீர்குலைய செய்யும் தன் தலையில் மண்ணை வாரிப்போடும் செயல்.
மொழி அறிவு: மொழி என்பது வேறு அறிவு என்பது வேறு. மொழி அறிவை வளர்க்கும் கருவிதானே தவிர மொழியே அறிவாகாது. ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி, தமிழ் பேசுபவன் அறிவாளி இல்லை என்கிற நினைப்பு முற்றிலும் தவறானது. தமிழ் மொழியில் தேர்வு எழுத நியாயமில்லாத கட்டுப்பாடு விதிப்பது அறிவின் வழி உயர்வு அடையும் வழியை மூடுவதற்கு சமம்.
நிர்வாகத் திறன்: கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்மட்ட நிர்வாகத்திற்கு வந்த பிறகு நாடுபல முன் னேற்றங்களை கண்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. மனிதனை மனிதனாய் பார்க்கும் சமுதாயம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான, அறிவுசார்ந்த, பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாட்டை உயர்த்தும் செயல், இது யாருக்கோ இடிக்கிறதோ?
ஒடுக்கப்பட்டவன் உயர்ந்து நிற்பது பொறுக்க வில்லையோ அவாளுக்கு?
குறிப்பு: புதிய விதிமுறைகள் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதன் பின்னணிகளைத் தெரிந்து கொள்வது அவசியமே!
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- உதைத்த காலுக்கு முத்தமிடலாமா?
- இந்தி நுழைப்பு
- நூல் மதிப்புரை
- இணையதளத்தில் ஈழத் தமிழர்களின் இதயக் குரல்கள்!
- அறிவு தழுவிய அணுகுமுறையால்... அனைத்தையும் வெல்லலாம்!
No comments:
Post a Comment