விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் - இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள்.
ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.
பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா? இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?
மதச் சார்பற்றவர்கள், இஸ்லாம், கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன?
ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?
ஆன்மீகப் பண்பாடும், துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்
- என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.
பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.
பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய், விளக் கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்;
இதுதான் இந்த இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!
இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?
இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?
கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?
இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்!
1 comment:
சரியான பதிலடி.இதே போல் மதச் சார்பற்ற அரசாங்கம் இந்துக் கோவில்களில் என்ன செய்கிறது என்பதையும் எழுதினால் பகுத்தறிவு பளிச்சிடும்.
Post a Comment