விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள்.
பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவுக்கு அங் கிருந்து இவருக்கு ஏதோ தனி அழைப்பு வந்த தென்று.. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
அமெரிக்கா உருவாகி 400ஆம் ஆண்டு விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. உலகில் பல நாடு களிலிருந்து பொருட்காட்சிகள் நடத்தினார்கள்; பல நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி இடம் பெற்றது.
ஒரு நாள் உலக மதங்களில் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு 1893இல் சிகாகோவில் நடத்தப்பட்டது. இந்து மதத்திலிருந்து யாரையாவது ஒருவரை அழைக்க நினைத்தார்கள்.
பார்ப்பனர் ஒருவருக்குத் தான் அழைப்பு வந்தது. கடல் தாண்டி செல்லுவது தோஷம்! என்பதால் செல்ல மறுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாதாரான விவேகானந்தர் சிக்கினார். அதுதான் உண்மை.
வெள்ளைக்காரர்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென் என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து சென்ற விவேகானந்தரோ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைத்து விட்டாராம். அடேயப்பா, இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்; இதுதான் இந்து மதத்தில் தகத்தகாய தத்துவம் என்று வானத்தை கிழித்து எழுதி வருகிறார்கள்.
உண்மையிலே இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?
பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஒரு வருணாசிரம மதத்தில் சகோதரத்துவம் என்பதற்கு எள் மூக்கு முனை அளவுக்கு இடம் உண்டா?
பிறப்பில் ஒரு குழந்தையின்மீது அத்துமீறித் திணிக்கப்பட்ட ஜாதி, அந்தக் குழந்தை பெரியவ ராகி செத்த பிறகு எரிக்கப்படும், அல்லது புதைக் கப்படும் இடுகாடு - சுடுகாட்டில் கூடத் தொடர்கிறதே.
மனிதன் சாகிறான்; ஆனால் பிறப்பின் போது அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதை உள்ள ஒரு மதத்தில் ஏதோ சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால், அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துக்காட்டிச் சொல்லப்பட்ட பொய்யுரையாகும்.
விவேகானந்தரைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்பற்றி பல நேரங்களில் அம்பலப்படுத் தினார் என்பது என்னவோ உண்மை. ஆனால் அதனை எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.
அமெரிக்கா சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.
இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்குச் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவேகானந்தர் கூறும் கருத்தினை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றனவா?
பூணூல் என்பது கோவணம் கட்டும் அரைஞாண் கயிறு என்று சொல்லி இருக்கிறாரே - அதைப்பற்றி எல்லாம் வெளியிடுவதுதானே!
ஆதி சங்கரர் ஆணவக்காரர் - இதயமில் லாதவர் - புத்தரோ கருணைக் கடல் என்று விவேகானந்தர் கருத்துத் தெரிவித்துள்ளாரே அதையும் எழுத வேண்டியதுதானே!
தந்தை பெரியாரைச் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவிலேயே பிரமாதமாகக் கொண்டாடப் படுவது குறித்து சிலாகித்துச் சொன்ன பொழுது, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று எதிர் கேள்வி போட்டு மடக்கிய நிகழ் வெல்லாம் உண்டு.
இந்து மதத்தை எந்த வகையில் எவர் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவரிடம் அளப்பரிய திறமைகள் குடி கொண்டிருந்தாலும் அதனை மதிக்கத் தேவையில்லை.
மதம் மிருகங்களுக்குப் பிடிக்கட்டும் - மனிதனுக்கு வேண்டாம்!
No comments:
Post a Comment