Monday, December 24, 2012

சூளுரைத்து, சுயமரியாதை உலகமைப்போம்!


நம் மக்களின் விழி திறந்த வித்தகர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவு நாள்.
பெரியார் தொண்டர்களைப் பொறுத்த வரை அது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல;
மாறாக, சரித்திரக் குறிப்பு நாள்; அவர் துவக்கிய சமுதாயப் புரட்சிப் போர் அவரது இராணுவக் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களால் தொய்வின்றி தொடர்ந்து நடத்தப்பட்டு முன்னேறிச் செல்கிறது என்று உலகுக்குப் பறைசாற்றும் பல்திசை முழக்க நாள்!
முன்பு எப்போதையும்விட இப்போது மேலும் பெரியார் - தத்துவம், கொள்கை, லட்சியப் பணிகள் தேவைப்படுகின்றன என்று உணர்ந்துள்ள நாள்!
சமூகப் புரட்சி இல்லாத வெறும் அரசியல் மாற்றங்கள், வேரில்லாத மரத்தைப் போல, நீடித்து நிலைத்து நிற்பதில்லை. எனவேதான் மக்களிடம் செல்; அவர்கள் மனதை மாற்று, அதற்கு ஆயுதம் அறிவாயுதமாக மட்டுமே அமையட்டும்; அதற்காக விலை கொடுக்க வேண்டுமானால் உன்னை ஒப்படைத்துக் கொள்! ஊரை, உலகத்தைத் தொல்லைப் படுத்தாதே! தன்னலத்தைச் சுட்டெ ரித்து, பொது நலத்தை தகத்தகாய ஒளிவீசும் தங்கம் எனப் பிரகாசிக்கச் செய்!
- என்று அறிவுரை கூறி, அதன்படி அவரே நடந்து அகிலத்திற்குப் பாடம் போதித்தார் - தமிழகத்தின்  முதல் பேராசிரியராம் தந்தை பெரியார்!
அய்யா மறைந்தார் என்று ஆரியம் மகிழ்ச்சிக் கூத்தாடியது. ஆனால் அது, இன்று பொய்யாய், பழங் கதையாய் ஆகி வருகிறது என்பதால், புது உருவத்தில் பொல்லாங்கு ஊடகங்கள் மூலம் பொறுப்பற்ற இனத் துரோகிகளைப் பிடித்து அவர்களுக்கு விளம்பர சடகோ பங்களைச் சாத்துகிறது. அதற்குப் பலியாகும் இனத் துரோகிகளான விபீடணர்களைப் பிடித்துத் தம் காலடியில் வைத்து மகிழ்கிறது.
பதவிகளைப் பெற முடியாத பல அரசியல்வாதிகள், ஜாதி, மத வாதங் களைப் புதிய முதலீடுகளாக்கி படியேற முயற்சிக்கின்றனர். பெரியார் மண் அதற்கு ஒருபோதும் இடந்தராது.
மதவாதம் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாமல் உள்ளது போலவே இந்த ஜாதி வெறித்தனத்தின் முதுகெலும்பும் முறிக்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களை விற்று தனியார்மயமாக்கி அதன் மூலம் முதலாளித்துவமும் கொழுக்கிறது; வருணமும் புத்துயிர் பெற்று, சமூக நீதிக்கு சமாதி கட்டலாம் என்ற அவர்களின் ஆசை நிராசையாக்கப்பட கிளம்புதுகாண் சிங்கக் கூட்டம்!
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக் கீடு கட்டாயம் என்னும் பதாகையைத் தூக்கிக் கிளம்பும் கிழக்குச் சூரியக் கதிர்கள்!
பெண்ணுரிமை, மண்ணுரிமையை விட மகத்தானது; அதற்குத் தோன்றும் அறைகூவல்களையும் ஏற்று, நிலை நாட்டுவோம் என்பதற்காக 1929இல் செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் மேலும்  செயலுரு கொள்ள 2013ஆம் ஆண்டை பிரச்சார - போராட்ட ஆண்டாக்கி, நாம் முழுமையாக அப்பெரும் பணிக்கே ஒப்படைக்கிறோம் என்று அய்யா என்ற அணையா அறிவுச் சுடர் முன் சூளுரை ஏற்போம்!
சுயமரியாதை உலகமைப்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
கி.வீரமணி
தலைவர்  திராவிடர் கழகம்
சென்னை, 24.12.2012


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...