தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டது தொடர்பாக தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய நல ஆணையத்தின் தலைவர் புனியா, இயக்குநர் வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடை யாகச் சென்று (10.11.2012) உண்மை நிலையை அறிந்து சென்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக ஆணையத்தின் தாக்கீது காரணமாக தமிழ்நாடு காவல்துறை சேலம் டி.அய்.ஜி. சஞ்சய்குமார், தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி, தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையில் மயான அமைதி காத்து வருகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி யாகத் தேவைப்படும் வீட்டு வசதிகள் உள்ளிட்ட வைகளில் ஆமை வேகம்தான்.
அன்றாடம் அங்கு அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருள்கள்கூட காலப்படி கிடைக்கவில்லை என்ற புகாரும் ஒரு பக்கத்தில்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஜாதி - பாதிப்புக்குக் காரணமானவர்கள் எந்த ஜாதி என்று பார்த்து அரசியல் ஆதாயம் பார்க்கும் நோக்கம் ஆபத்தானது. எல்லாவற்றையும் வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தால், நாட்டில் நன்மைக்கும், தீமைக்கும், வன்முறைக்கும், நன்முறைக்கும் உள்ள வேறுபாடுகள் அறியப்படாமல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் நிலையைத்தான் உருவாக்கும்.
தருமபுரியைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் எரியூட்டப்பட் டுள்ளன.
இப்படி வீடுகள் எங்கு எரிக்கப்பட்டாலும் அவை தாழ்த்தப்பட்டோரின் வீடுகளாகவே இருப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தேனி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏழு ஆண்டுகளாகக் கோவிலில் துணைப் பூசாரியாக இருந்தவர் எப்படி திடீரென்று தாக்கப்பட்டார்? அதன் பின்னணி என்ன?
தருமபுரிகளும், கடலூர்களும் அரங்கேற்றப்பட்ட பின்பு, தாழ்த்தப்பட்டோர்மீது தாக்குதல் என்கிற புது யுக்தி கிளம்பியுள்ளதா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை மிகத் தீவிரமான செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.
அமைதிப் பூங்காவாக இருந்து வந்த தமிழ் மண்ணில் அண்மைக்காலமாக இந்த நோய் எப்படி பரவுகிறது? இதன் மூலக்கயிறு எங்கே இருக்கிறது? ஜாதித் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்களே - ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை?
பொதுவாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வீடுகள் தீக்கிரை என்கிற செய்திகள் வராத நாளே இல்லை.
அதேபோல விபத்துகளுக்கும் பஞ்சம் இல்லை. இதுபற்றியெல்லாம் உள்துறை உரிய முறையில் சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
அரசியல் நோக்கம் சிறிதும் இல்லாத மக்கள் பொதுநலனை முன்னிட்டு திராவிடர் கழகம் இவற்றை அரசு முன் வைக்கிறது.
புகார் கொடுக்கப்பட்டால் நிகழ்வுகளின் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப்படாமல், அரசியல் செல்வாக்கின் காரணமாக நடவடிக்கையில் தள் ளாட்டம் இருப்பதாகப் பொதுவான குற்றச்சாற்றும் இருந்து வருகிறது.
இதெல்லாம் உண்மையில்லை என்று உண்மை யாகப் பதில் வந்தால் நல்லதுதான். மாறாக, அந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்று கொஞ்சம் தெரிய வந்தாலும், தீர ஆராய்ந்து, குற்றவாளிகள் தாட்சண்யமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வகையில் தீவிரமாக அரசின் செயல் பாடுகள் இல்லாத நிலை ஏற்படுமேயானால், மேலும் மேலும் தமிழ்நாட்டின் நிலை சிக்கலாகிவிடும் - எச்சரிக்கை!
நாட்டின் நலங்கருதி எடுத்து வைக்கப்படும் கருத்து இது - தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளு மாக!
நாட்டின் நலங்கருதி எடுத்து வைக்கப்படும் கருத்து இது - தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளு மாக!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment