Friday, November 2, 2012

ஒரு சிறுமியின் புரட்சி



நான் மலாலா, நானும் மலாலாதான் என்னும் குரல் கேட்கிறது உலகெங்கும். மடோனா, ஏஞ்சலினா ஜூலி போன்ற உலகப் புகழ்பெற்ற பெண் கலைஞர்கள் முதல் சாதாரணமான ஆட்கள் வரைக்கும் மலாலாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒரு நடிகருக்கு, ஒரு அரசியல் புரட்சியாளருக்கு, ஒரு விளையாட்டு வீரருக்கு இதுபோல உலகம் முழுவது மிருந்து ஆதரவுக் குரல்கள் வந்திருக்கும். ஆனால் ஒரு சிறுமிக்கு, இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. யார் இந்த மலாலா-? ஏன் இவ்வளவு பேர் மீண்டும் மீண்டும மலாலா, மலாலா என்கிறார்கள்.
*****
மலாலா யூசுப்சாய் _1997 ஜூலை 12ஆம் நாளில் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தவர். இப்போது அவருக்குப் பதினைந்து (15) வயது. கடந்த அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மலாலா, இப்போது லண்டன் மருத்துவமனையில் உடல்நலம் தேறி வருகிறார். பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஒரு 15 வயதுச் சிறுமியைக் கொல்ல முற்பட வேண்டியதன் காரணம் என்ன?
நம் நாட்டில் இன்று நல்ல மதிப்பெண் அதிகமாக வாங்குவது யார் என்று பார்த்தால், பெண்கள் என்றுதான் பதில் வரும். ஒவ்வொரு ஆண்டும் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதமும், முதல் இடங்களுக்கு அவர்களின் போட்டியும் அவர்கள் பெறும் மதிப்பெண்களும்தான் அதிகம் என்று அண்மைக்கால வரலாறு சொல்கிறது.

நம்மைப் பொறுத்தவரையில் பெண்கள் படிப்பது என்பது ரொம்ப சாதாரணமான ஒன்று என்று நமக்குத் தோன்றும். இப்படித்தான் எப்போதும் இருந்திருக்கும்போல என்று நினைக்கக் கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. நம் நாட்டில் பெண்கள் மட்டுமல்ல, எல்லா சமூகத்து ஆண்களும் நினைத்ததை நினைத்தவாறு படிக்க முடியாது என்ற கொடுமையான நிலை இருந்தது.

பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவர்கள். அவர்கள் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற கருதி, பெண்களைப் படிக்க அனுமதித்ததில்லை நம் நாட்டில். இந்நிலை மாற வடநாட்டில் மகாத்மா ஜோதிபாபூலே போன்றவர்கள் செய்த பணியும், தென்னாட்டில் தந்தை பெரியார் செய்த பணியும் மிகப்பெரியது.   ஊர் ஊராகப் பேசிப் பேசித்தான் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும், படித்தால் நல்ல இடம் பிடிக்க முடியும் என்று புரியவைத்து, தைரிய மூட்டியதன் விளைவுதான் இன்று பெண்கள் அதிக அளவில் நம் நாட்டில் படிக்கிறார்கள். பட்டம் பல பெற்று, பதவி பெற்று எல்லைதாண்டி வெற்றியடைந்திருக்கிறார்கள்.

பெண்களைப் படிக்கவிடாமல் தடுத்தது எது? மதம். மதங்கள்தானே மனிதனை இன்னும் சிந்திக்கவிடாமல் வைத்திருக்கின்றன. உலகின் பல பகுதிகளில் இன்றும்கூட மதவாதம் மத அடிப்படையிலான விசயங்கள் மக்களின் வளர்ச்சியைத் தடை செய்து வைத்திருக்கின்றன.

அப்படித்தான் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த மதத்தைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லும் தாலிபான் பயங்கரவாதிகள், பெண்கள் படிக்கக்கூடாது; தெருவில் நடமாடக் கூடாது; காய்கறிக் கடைக்குக்கூட போகக்கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர். அதை எதிர்த்துப் பேசியதும், எழுதியதும் செயல்பட்டதும்தான் மலாலா சுடப்பட்டதற்குக் காரணம்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸ்வாட் பகுதியின் மிங்கோரா என்னும் ஊரில் பிறந்தவர். மலாலா யூசுப்சாயின் தந்தை -_ கவிஞர் ஜியாவுதீன் யூசுப்சாய் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி, தோற்று பின்னர் பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான் படையினரின் மதவாதக் கருத்துகள்மீது ஜியாவுதீன் யூசுப்சாய்க்கு எப்போதும் எதிர்க்கருத்து உண்டு. யூசுப்சாய் என்பது அப்பகுதி பழங்குடி மக்களின் கூட்டமைப்பு ஆகும். ஜியாவுதீனுக்கும் தன் மகள் மீது பெரும் மதிப்பு உண்டு. அதே பற்று மலாலாவுக்கும் உண்டு.

தாலிபான்களின் ஆதிக்கத்தால் தனது கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது என்று மலாலாவுக்குப் புரியும்போது, அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவளுக்குப் பிறந்தது.

தன் மகள் தன்னிடம் கேட்ட கேள்வியைக் கண்ட ஜியாவுதீன் பெஷாவரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மலாலாவைப் பேசவைத்தார். உலகமே கண்டு நடுங்கும் தாலிபான்களை நோக்கி, என்னுடைய அடிப்படையான உரிமையான கல்வியைத் தடுக்க இந்தத் தாலிபான்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? என்று கேட்டாள் மலாலா. இந்தக் கேள்வியை மலாலா கேட்டபோது, அவளுக்கு வயது 11.

அடுத்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனம், ஒரு மாணவியே தங்களின் கல்வி குறித்து எழுதினால் நலம் என்று தேடியது. 2009-ஆம் ஆண்டு தொலைக்காட்சி, இசை, பெண் கல்வி ஆகியவற்றைத் தடைசெய்துவிட்ட தாலிபானின் ஆட்சியில் பெண்களின் நிலைபற்றி எழுத ஜியாவுதீனின் பள்ளியில் ஒரு மாணவியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தயக்கம் காட்டவே தன் மகளையே எழுத வைத்தார் ஜியாவுதீன்.

தனது 12ஆவது வயதில் பி.பி.சி.யில் ஒரு பள்ளி மாணவயின் டைரிக் குறிப்பு என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினாள் மலாலா. முதலில் தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல்தான் எழுதத் தொடங்கினார்.



மலாலா கொடுத்த செய்தியும், அங்கு நடக்கும் கொடுமையும் உலகின் கவனத்தை ஈர்த்தது. சமூகத்திற்கு நம் பங்குக்கு என்ன செய்வது என்று தந்தையுடன் அடிக்கடி பேசிய மலாலாவின் மனது, டாக்டராகும் கனவிலிருந்து அரசியல் துறையில் மக்கள் பணியாற்றும் முடிவுக்கு வந்தது.
தைரியமாகப் பொது இடங்களில் தன் கருத்தைத் தெரிவிக்கத் தொடங்கினாள் மலாலா. பெண் கல்வியின் அவசியத்தையும், கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்றும் பேசினாள். பாகிஸ்தானின் இளம் அமைதிப்பரிசு _ 2011 மலாலாவுக்குக் கிடைத்தது.

மலாலாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகிய நேரத்தில்தான் தாலிபான்கள் அவளது உயிருக்கும் குறிவைத்தனர். சுடப்பட்டாள் மலாலா; உலகம் துடித்தது; மக்கள் எழுந்தனர்.

மலாலாவுக்கு உலகெங்கும் ஆதரவுக்குரல் வெடித்தது.  நான் மலாலா என்று பதாகை தாங்கியடி மாணவ, மாணவிகள் வலம் வருகின்றனர். உலகப் பெரும் தலைவர்கள் மலாலாவைக் காக்கக் குரல் எழுப்பியுள்ளனர்.

இப்போது மலாலா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குண்டுகள் அகற்றப்பட்டு நிற்கத் தொடங்கியுள்ளார்.

உலகெங்கும் அவள் கால்கள் நடக்கத் தொடங்கும். மலாலா தன் உரிமைக்காக உயிர்துறக்கத் துணிந்தார்.

உலகம் அவளை ஏற்றிப் போற்றுகிறது. கல்வியை நமக்கெல்லாம் வழங்கிய பெரியாரின் பேரன், பேத்திகளான நாமும் மலாலாவை வாழ்த்துவோம். அவரது குரலோடு நம் குரலையும் இணைப்போம்.
- சமா. இளவரசன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...