- 1.76 லட்சம் கோடி 2ஜியில் ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே!
- ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன?
ஆ.இராசா குற்றவாளியா? நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
மத்திய அமைச்சர் ஆ. இராஜாவால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நட்டம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் ஏல முறையால் அரசுக்கு வருவாய் ரூ.9400 கோடி என்ற இந்த நிலைக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வருமாறு:
1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று, நாட்டின் குக்கிராமங்களில்கூட தொலைத் தொடர்பு வசதியை, ஏழை, எளியவர்கள்கூட பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளித்த கொள்கை முடிவினை மிக வேகமாகச் செயல் படுத்தியும், தி.மு.க.வுக்கும் மத்திய அமைச்சர வைக்கும் பெருமை சேர்த்தவர் ஆ. இராசா அவர்கள்.
முதலாளிகளின் ஏகபோகம்!
2. அத்துறையில் நிலவிய சில பெரு முதலாளிகளின் ஏக போகத்தை உடைத்து, புதிதாக நுழைவோருக்கும் வாய்ப்பு என்பதை சிறப்பான வகையில் செயல்படுத்தியதால், தொலைபேசிக் கட்டணம் 30 காசுகளுக்குள் - உலகில் எங்கும் இவ்வளவு மலிவான கட்டணம் இல்லை என்ற சாதனைச் சரித்திரத்தை செய்தவர் அவர்!
3. அது மட்டுமல்ல - இராணுவத் துறையினர் பயன்படுத்தாத அலைக்கற்றையையும் போராடி வாங்கி அதனை சாமான்ய மக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவுப் பதிப்பாக்கி, நுகர்வோருக்கு மிகப் பெரும் பயன் விளைவித்தவரும் அவரே!
கொள்கை முடிவு
4. அதில்கூட முதலில் வருபவருக்கு முன்னுரிமை First Come First served) என்ற கொள்கைகூட இவரால் உருவாக்கப்பட்டதல்ல. ஏற்கெனவே ஆண்ட பா.ஜ.க. அரசினரால் - உருவாக்கப்பட்டதாகும் இதை பா.ஜ.க.வால் மறுக்க இயலாது. ஆ. இராசா இந்தக் கொள்கை முடிவினை சிறப்பான வகையில் செயல்படுத்தி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் பெருமை சேர்த்தார்.
5. இதில் பாதிக்கப்பட்ட பெரு முதலாளிகள் - சந்தர்ப்பம் தேடி காத்திருந்தனர். அமைச்சர் இராசாவின் சாதனை கண்டு சிலர் பொறாமையும் பட்டனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவனுக்கு இவ்வளவு பெருமையா? உயர்ஜாதி தலைவர்கள், ஊடகங்களுக்கும், சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் - எதிர்க்கட்சி யினருக்கு அரசியல் நடத்த ஏதாவது தீனியைத் தேடினர்.
தீர்ப்பை முன் கூட்டியே எழுதும் ஏடுகள்
6. பத்திரிகை நடத்தும் பல பெருமுதலாளிகள் தொலை காட்சிகளையும் தங்கள் கையில் வைத்து, செய்திகளை மக்களுக்குத் தருவதற்குப் பதிலாக, செய்திகளை அவர்களே உருவாக்கித் தருவதும், இல்லாத ஒரு பிரச்சினையை பூதாகரமாக்கி ஊதி, குற்றம் சுமத்திடுவதோடு, அவ்வழக்கின் விசாரணையையும் அவாளே நடத்தியும் தீர்ப்பும்கூட எழுதிடும் போக்கும் அண்மைக் காலத்தில் மிகவும் மலிந்து வருகின்றன. (Trial by media, Judgement by media).
7. இவர்களில் உயர்ஜாதி அதிகார வர்க்கத்திடம் உள்ள பதவிப் பொறுப்புக்களைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெகு மக்களுக்குப் பயன்படுபவைகளை அழிக்க, தவறான ஒரு செய்தியைக் கசிய விட்டு, விளம்பர வெளிச் சத்தை அதன்மீது வாரி விடுவதும், குற்றம் சுமத்து வதும் ஆன போக்கும் பிறகு இணைந்து கொள்வது.
CAG என்னும் உயர்ஜாதி பார்ப்பனர்
8. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அமைச்சர் இராசாவைக் குற்றம் சுமத்தி, இதனால் ரூபாய் 1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டு விட்டது என்ற ஒரு ஆதாரமில்லாத, ஒரு புகாரை - CAG என ஒரு உயர்ஜாதி பார்ப்பனர் தணிக்கைக் குறிப்பில் எழுதியதோடு, அது அதிகாரப் பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே, அச்செய்தி (மீடியாவில்) ஊடகங்களில் கசிய விட்டு - மிகப் பெரிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தைச் செய்தனர்.
மத்திய அரசின் தவறு
9. இதனைத் திட்டவட்டமாக மறுத்து, இது கொள்கை முடிவு, இதில் எந்தவித நடைமுறை இழப்பும் ஏற்படவில்லை. இந்த சி.ஏ.ஜி. தணிக்கை அதிகாரி கூறுவது அனுமான இழப்பே தவிர உண்மையான இழப்பு அல்ல. (Only Presumptive Loss - No actual Loss) உண்மையான இழப்பு பூஜ்யமே. (இப்படி கபில்சிபல் போன்ற அமைச்சர் கூட கூறியிருக்கும் நிலையிலும்) துணிந்து எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், பிளாக்குமெயில் அரசியல் பேரக்காரர்கள் கூற்றுக்கள் என்பதை யெல்லாம், திராணியுடனும், துணிவுடனும் மேற்கொண்டு, தமது அமைச்சரவையும், அதன் கூட்டணிக் கட்சி அமைச்சரவையும் பாதுகாப் பதில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை எடுக்கத் தவறி, கரடி வந்தவுடன் மரத்தில் ஏறி தன்னை மட்டும் காப்பாற்றிய இரு நண்பர்களில் ஒருவனைப் போல், மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் பிரச்சாரப் பெரும் புயலைச் சரியாகச் சந்திக்கத் தவறியது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
அது நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழு முடிவைக்கூட, துவக்கத்திலேயே துணிந்து சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறி, உச்சநீதிமன்றத்தின் ஆணை என்பதையே சாக்காக வைத்து, இராசாவை பதவி விலக வைக்க தி.மு.க.வை வற்புறுத்தியது தி.மு.க.வும் ஏற்றது; பிறகு அவரைக் கைது செய்து, ஓராண்டுக்கு மேல் டெல்லி சிறையில் வைத்தது. அதையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் உண்மையான தொடர்பு இல்லாத நிலை யிலும்கூட கனிமொழி எம்.பி. அவர்களையும் சரத்குமார் என்பவரையும்கூட கைது செய்யப்பட்டு அவர்கள் திகார் சிறையில் பல மாதங்கள் கழித்தே ஜாமீனில் வந்தனர்.
வழக்குகள் நடைபெறுவதால் அதனுள் புக விரும்பவில்லை - பல்வேறு அம்சங் கள் முரண்பட்ட நியாய விரோத நிலைப்பாடாக இருந்த போதிலும்கூட!
இப்பொழுது என்னாயிற்று?
10. ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதையே ஏதோ மோசடி, சதியென்று கூறிய நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் முறைகளை யொட்டி மீண்டும் ஏலம் விடப்பட்டதே இரண்டு நாள்களுக்கு முன் - அதில் அரசுக்கு அதிக அளவில் லாபம் வரும் என்று பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டதே. கிடைத்ததா?
கூவிக்கூவி ஏலம் போட்டும், கிடைத்தது 9400 கோடி ரூபாய்கள்தான். (ஜி.எஸ்.எம். பிரிவில் மட்டும் அரசுக்கு 28000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது).
இதையும்கூட வரவு என்று சொல்லி விட முடியாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்படாத நிறுவனங்கள், தாங்கள் ஏற்கெ னவே உரிமம் பெற்றபோது செலுத்திய முன் பணத்தை இப்போது கழித்துக் கொள்ள முடியும். ஆகவே இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூபாய் 5,000 கோடிதான்.
ஏலப்பாட்டுப் பாடி, ரூ. 1.76 லட்சம் கோடி நட்டம் என்ற இமாலயப் புளுகினைக் கட்டவிழ்த்து விட்டு, காலந்தள்ளிய ஊடகங்களும் உத்தம ஊழல் ஒழிப்பு அவதாரங்களும் இப்போது, ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் (Cartel) இப்படி ஏலம் குறைந் திருக்கலாம் என்று நாகூசாமல் மறுபடியும் பேசுகிறார்கள். முன்பே ஏலம் விட்டிருந்தால், ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து குறைந்த ஏலம் கோராமல் இருந்திருக்க மாட்டார்களா? என்னே மழுப்பல்கள். எனவே சதி அல்ல இதன் பின்னணி சாதி! சாதி!! சாதி!!! தி.மு.க. வெறுப்பு - அவ்வளவுதான்!
மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுவதைக் கேளுங்கள்
அது மட்டுமல்ல. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபல் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஏலத்தில் குறைந்த தொகை மட்டுமே, அரசுக்கு வருமானக் கிடைத்துள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, ஏலத்தில் விட்டிருந்தால் கோடியில் லாபம் கிடைத்திருக்கும் எனக் கூறியது, எந்த அளவு உண்மை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டதின் மூலம் மிகப் பெரிய பாடம் கிடைத்துள்ளது.
கடந்த 2005 முதல் 2007 வரை, 2ஜி ஸ்பெக்டரம் மூலம் மக்களுக்குப் பயன் போய்ச் சேர, அரசு நடவடிக்கை எடுத்தது. கோடிக்கணக் கானோர் மொபைல் போன்களில் பேசும் வசதி கிடைத்தது. ஏல முறை இல்லாததால், தொலைத் தொடர்பு அடர்த்தி அதிகரித்தது. சாமான்ய மக்கள் ஏராளமானோருக்குப் பயன் கிடைத்தது. ஆனால் தற்போதைய ஏல முறையால் கிடைக்கா மற் போய் உள்ளது என்றும் கூறியுள்ளாரே மத்திய அமைச்சர் கபில் சிபல்
இப்போது பொய்த் திரை - ஊடகங்களின் எதிர்க்கட்சிகளின் கொயபெல்ஸ் பிரச்சாரப் பொய்த் திரை - மாய்மாலம் கிழிந்தும், உடைந்தும் சுக்கல் நூறாகி விடவில்லையா?
பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்றால்...
இறுதியில் நீதி வழங்க வேண்டியவர்களே பிராசியூட்டர்களாகி, சட்டத்தின் ஆட்சியின் இறக்கைகளை ஒடித்து, நியாயத்தினை மறுக்க லாமா? என்று கேட்டு, தன் தவறுக்கு மத்திய அரசு - அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தக்க பரிகாரம் தேட வேண்டாமா?
பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாதியற்றவர்களாக்கி வேடிக்கை பார்ப்பது சரியா? நியாயமா? நாம் இதனை ஓராண்டுக்கு முன்பே சொன் னோம்.
இந்த சி.ஏ.ஜி. என்ற அதிகாரி இதுபற்றி ஒரு அரசியல்வாதியைப் போல, தமிழ்நாட்டு அக்கிரகார வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டிகொடுத்து பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றிப் பெரிதாக எரியச் செய்தது எதைக் காட்டுகிறது? உள்நோக்கத்தோடு இது திட்டமிட்டு சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுதான்!
இந்த சி.ஏ.ஜி. என்ற அதிகாரி இதுபற்றி ஒரு அரசியல்வாதியைப் போல, தமிழ்நாட்டு அக்கிரகார வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டிகொடுத்து பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றிப் பெரிதாக எரியச் செய்தது எதைக் காட்டுகிறது? உள்நோக்கத்தோடு இது திட்டமிட்டு சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுதான்!
நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்
நீதிமன்றங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது; தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே உள்ளனவே! அதை அலட்சியம் செய்யலாமா?
எனவே 2ஜி அலைக்கற்றை வழக்கும் அது சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளும் மீண்டும் மத்திய அரசின் மறுபரிசீலனைக்குட்படுத்துவதே தவறிய நியாயத்தை, வழங்கிட வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே 2ஜி அலைக்கற்றை வழக்கும் அது சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளும் மீண்டும் மத்திய அரசின் மறுபரிசீலனைக்குட்படுத்துவதே தவறிய நியாயத்தை, வழங்கிட வாய்ப்பை ஏற்படுத்தும்.
இதுபற்றி நடுநிலையாளர்கள், நியாய உணர் வாளர்கள் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட் டவர்கள் பரிகாரம் தேடிட உரிமை உண்டே!
வேலிகளே பயிர்களை மேயும் நிலையை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
சென்னை
சென்னை
17.11.2012
கி. வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்-தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை
- ஈழத் தமிழர் விடிவுக்குப் பொது வாக்கெடுப்புத் தேவை!
- ஈரோட்டுப் பாதையில் ராம்ஜெத்மலானி!
- நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது!
- மருத்துவக் கல்லூரி தேர்வு முறை-திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை
No comments:
Post a Comment