இந்தியாவில் ஒரு கால கட்டத்தில் இரயில்வே
துறைக்கு அடுத்தப்படியாக பெரிதும் புகழப்பட்டது - பேசப்பட்டது -
பயன்பட்டது அஞ்சல்துறைதான். அஞ்சல் துறையில் பணியாற்றுவது என்பது
பெருமைக்கு உரியதாகவும் கருதப்பட்டது.
மக்களுக்கு உண்மையான சேவகனாகவும் விளங்கியதுண்டு. கூடுதல் அஞ்சல் தலை ஒட்டினால் ஞாயிற்றுக்கிழமைகூட தபால்கள் கிடைக்கும்.
அஞ்சல்துறை அறிமுகப்படுத்திய வாழ்த்து மடல்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்தது.
அந்த அஞ்சல் துறை அஞ்சுகின்ற துறையாக மாறியது ஏன்? உடல் நலம் சரியில்லை என்று கடிதம் போட்டால் அது அவர்களின் மரணத்துக்குப் பிறகே உரியவர்களுக்குக் கிடைக்கும் அவலம்.
முதல் நாள் தபால் பெட்டியில் போட்டால் மறுநாள் கிடைக்கும் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது.
கேட்டால் என்ன காரணம் சொல்லப்படுகிறது? அஞ்சல் துறையில் புதிதாக நியமனங்கள் செய்யப்படுவதில்லை. வேலைப்பளு அதிகம். இந்தக் காரணமே அஞ்சல்துறை ஆமை வேகத்தில் நகர்வதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
பணி செய்வதற்கு நாட்டில் ஆள் பஞ்சமா? கோடிக்கணக்கான இருபால் இளைஞர்கள் பட்டங்கள் பெற்று விட்டு, வேலை வாய்ப்புக் கிடைக்காமல் பரிதவித்துக் கிடக்கின்றனரே! தீவிரவாத அமைப்புகளில் போய் சேர்கின்றனரே!
படித்தவர்களுக்கு
வேலை வாய்ப்புகளைக் கொடுப்பது ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? இரயிலில்
ஆர்.எம்.எஸ். சார்டிங் என்பதெல்லாம் போயே போச்சே!
இப்பொழுது அந்தத் துறையில் எஞ்சி இருக்கும் அம்சம் என்பது சிறு சேமிப்பு ஒன்றுதான்.
இந்தத் திட்டம் அதிகப் பயன் அளிக்கக் கூடியதாக உள்ளது. மாத வருமான வைப்புக் கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவை அஞ்சல் துறையின் சிறப்பு அம்சம் கொண்டவை என்பதில் அய்யமில்லை.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் இயங்கு கின்றன. 89 விழுக்காடு கிராமப் பகுதிகளிலும் 11 விழுக்காடு நகரப் புறங்களிலும் செயல்படுகின்றன.
எளிதாகப் பொது மக்கள் அணுகுவதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. சேமிப்புத் துறையில் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்த உள்ளனர்.
வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்தால் எந்த வூரிலும் பணம் எடுக்கும் வசதியிருக்கிறது. அஞ்சல் துறையைப் பொறுத்தவரை எந்த அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதோ அந்த நிலையத்தில்தான் பணத்தைப் பெற முடியும். ஏடிஎம் முறை கொண்டுவரப்பட்டால் எந்த ஊரிலும் தேவைப்படும் பொழுது பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இது வரவேற்கத்தக்கதாகும். ஓய்வு பெற்றவர் களுக்கும் மூத்த குடி மக்களுக்கும் கூடுதல் வட்டி அஞ்சல் துறையில் அளிக்கப்படுகிறது.
எடிஎம்
வசதி அறிமுகப்படுத்தினால், சேமிப்பு கணக்கைப் பொறுத்தவரை அஞ்சலகங்களில்
அதிக எண்ணிக் கையில் கணக்குகள் திறக்கப்பட வாய்ப்புண்டு.
அத்தோடு, தபால்களை உடனுக்குடன் மக் களுக்கு வழங்கும் அஞ்சல் பணியில் புதிய சீர் திருத்தங்கள் தான் மிக மிக முக்கியம். இத்துறை இதில் சரிவரப் பணியாற்றாத குறைபாட்டால் தனியார் கொரியர் அமைப்புகள் கொள்ளைப் பணம் ஈட்டி வருகின்றன.
சாதாரணமாக ஓர் உறை ரூ.25 என்கிற அளவுக்கு வாங்குகின்றனர். முதல் நாள் அனுப்பும் தபால் மறுநாள் உரியவர்களுக்குக் கிடைத்து விடுகிறது என்கிற உத்திரவாதம் இருப்பதால், பொது மக்கள் அதிகப் பணம் செலவழிப்பது பற்றி யோசிப்பதில்லை.
அஞ்சல் துறையிலும் கூட கட்டணங்களைச் சற்று உயர்த்தி, இன்றைக்குத் தனியார் கொரியர்கள் பணியாற்றும் வேகத்தோடு செயல்பட்டால் இலாபம் கொழிக்கும் துறையாகவும், மக்களுக்கும் - இலாபகரமானதாகவும் விளங்குமே.
மத்திய அரசு இதுபற்றிச் சிந்திக்குமா? எங்கே பார்ப்போம்!
No comments:
Post a Comment