மின் தேவைக்காக கோரிக்கை வைத்தது நியாயமே! - ஆனால்
பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர
உச்சநீதிமன்றம் வழக்கு - அணுகுமுறை தவறானது!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
தமிழ்நாட்டுக்குத்
தேவையான மின்சாரத்தினைப் பெறுவதற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர், பிரதமரை
நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து சாதிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசை
எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சரியான அணுகுமுறையில்லை என்று திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு 16 மணி நேரம் வரை சென்று கொண்டிருக்கிறது; இதனால் மக்களுக்குப் பல்வகைத் துன்பங்கள்.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு 16 மணி நேரம் வரை சென்று கொண்டிருக்கிறது; இதனால் மக்களுக்குப் பல்வகைத் துன்பங்கள்.
தூக்கமின்மையில்
தொடங்கி, டெங்கு காய்ச்சல் வரை பரவலாகி வரும் அவல நிலை ஓர்புறம்;
மின்வெட்டு காரணமாக, தேர்வுக்கு மாணவர்கள் படிக்க முடியாது தவித்தல், சிறு,
குறு தொழிற்சாலைகள் மின்வெட்டினால் மூடி, பல்லாயிரக்கணக்கில் வேலை
வாய்ப்பை இழந்து வாடிடும் இளைஞர் கூட்டம் நாளும் பெருகுகிறது. காவிரி
டெல்டா விவசாயிகளை - தற்காலிகமாக மழை பெய்து ஓரளவுக்கு காப்பாற்றும் என்று
நினைத்து மகிழ்ந்தபோது, அதிகம் பெய்து சம்பா பயிர்கள் அழுகி ஏராளமான
நட்டத்தை ஏற்படுத்தி விட்டது.
தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இரண்டு மணி நேரம் தானே - இப்போது?
இந்நிலையில்
தி.மு.க. ஆட்சியின் போது புதிய வேலை வாய்ப்புத் தந்த வெளிநாட்டவர் இங்கே
துவங்கிய தொழிற்சாலைகள் காரணமாகவும், ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை
இலவசமாக வழங்கியும், குடிசை நீங்கிய புதிய வீடுகள் வந்ததின் காரணமாகவும்
மின் தேவை, உற்பத்தியை விட அதிகம் ஆன படியால் இரண்டு மணி நேர மின்வெட்டு
வந்தது. அதைத் தேர்தலில் பயன்படுத்தியது அ.தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு
வந்தால் மூன்றே மாதங்களில்இதனை மாற்றிக் காட்டுவோம்; மின் மிகை
மாநிலமாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கியதை
மக்களும் நம்பினர்; வாக்களித்தனர்.
ஒன்றரை
ஆண்டுகளில் அத்தனையும் சாதிப்போம் என்றது அ.தி.மு.க. ஆட்சித் தலைமை -
முதல்வர். இப்பொழுது ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டனவே - சாதிக்கப்பட்டது என்ன?
மந்திரத்தால் மாங்காய் விழாது என்பதற்கொப்ப, மின்வெட்டைப் போக்க, ஆக்க
ரீதியான வழிவகையை நடைமுறைக்கேற்ற வழியில் - அதுவும் ஒரு கூட்டாட்சியைக்
காண தமிழக ஆட்சியாளர் - முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும்.
முந்தைய
தி.மு.க. ஆட்சியையே குறை கூறிக் கொண்டு அரசியல் லாவணியில் ஈடுபடுவது எந்த
பயனையும் தராது; பொது மக்களின் வேதனையை தீர்க்க உதவாது. கூடங்குளம்
பிரச்சினையில் முடிவெடுக்கத் தாமதம்!
மத்திய
அரசுக்கு சில மாநிலங்களால் தரப்பட்ட சுமார் 900 மெகாவாட் மின்சாரத்தை
எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது நியாயமானதுதான்; கூடங்குளம்
மின்உற்பத்தியை தாமதப்படுத்தாமல் முதலிலேயே தமிழக அரசு ஒரு திடமான
நிலைப்பாட்டை எடுக்காமல், இரட்டை நிலைப்பாட்டை துவக்கத்தில் எடுத்ததால்
போராட்டக்காரர்களுக்கும் ஒரு புதுத் தெம்பு கிடைத்தது; நம்பி ஏமாந்து இன்று
சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் வரை அது கொண்டு போய் விட்டது.
கூடங்குளம்
மின் உற்பத்தியை முழுவதும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்று கேட்டார்
முதல்வர்; நாமும் அது சரிதான் என்று அறிக்கை விடுத்தோம். மத்திய
இணையமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும்கூட அதை ஆதரிக்கிறோம் என்றார்
கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருதி.
நீதிமன்றம் சென்றது சரியா?
அதுபோலவே
இப்போது மத்திய அரசுக்குத் தரப்பட்டுள்ள அந்த மின்சக்தியை தமிழ்நாட்டில்
மின்வெட்டு அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு அதைத் தர வேண்டும் என்று
முதல் அமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது
நியாயமானதுதான். அதை நாம் ஆதரிக்கிறோம்.
ஆனால்
அதற்காக அவர் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ள முறை - உச்சநீதிமன்றத்திற்குச்
சென்று வழக்குப் போட்டு, அதைப் பெற முயற்சிப்போம் என்பது சரியான அணுகுமுறை
அல்ல. கூட்டாட்சியில் உள்ள ஒரு மாநில முதல்வர், பிரதமரை, மத்திய மின்துறை
அமைச்சரை டெல்லி சென்று நேரில் வற்புறுத்திக் கேட்டு, வெற்றியடைய
முயற்சிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஓர்
இணக்கச் சூழலை ஏற்படுத்தி, பிரச்சினையைத் தீர்க்க அந்த அணுகுமுறை ஒரு
போதும் உதவாது.
பிரதமரை நேரில் சந்தித்து, ஆவன செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.
பிரதமரை நேரில் சந்திக்க வேண்டாமா?
குஜராத்
அரசுடன் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்ட போதே, மின்தட வசதியில்
மின்சாரத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர சிக்கல் உள்ளது என்று
அறிந்தவுடனேயே மத்திய அரசுக்கு, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு
நிறுத்திக் கொள்ளுவது எவ்வளவு தூரம் காரியசித்திக்கு உதவிடும் என்பதை
எண்ணிப் பார்த்து, பிரதமரை நேரில் சந்தித்து இச்சிக்கலுக்குத் தீர்வு காண
முயற்சிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்
தீர்ப்பு, தமிழக அரசுக்குச் சாதகமாக அமையும் என்பதற்கு எவ்வித
உத்தரவாதமும் கிடையாது. மாறாக அமைந்தால் தாங்களே இரட்டைத் தாழ்ப்பாள்
போட்டதாக ஆகி விடாதா? நீதிமன்றங்களே எல்லா ஆணைகளையும் பிறப்பித்து விட
முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
எனவே முதல் அமைச்சர் கோரிக்கையில் உள்ள நியாயத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் செல்வதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
காரியம் பெரிதே தவிர, வீரியம் பெரிதல்ல என்று சாதாரண மக்கள் மத்தியில் ஒரு சொலவடை உண்டு.
கர்நாடகத்திற்குத்
தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுவதற்கு வழக்குப் போட்டது வேறு. மத்திய அரசு
மீது மின்சாரம் வழங்க ஆணையிட வேண்டும் என்று வழக்குப் போட்டுத் தீர்ப்புக்
கோருவது வேறு.
இது
ஆரோக்கிய அரசியல் நடைமுறை ஆகாது. உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக்
குரல் கொடுப்பது நியாயம். ஆனால் மத்திய அரசைக் குற்றம் சுமத்தி, இவைகளைப்
பெற வைப்பது என்பது நல்ல முன்னுதாரணம் ஆகாது. தவறான அணுகுமுறையாகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.10.2012
No comments:
Post a Comment