நவம்பர் முதல் தேதி அய்.நா.வின் மனித உரிமைக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி கொடுக்கப்படும் ஒரு சூழ் நிலையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு:
நவம்பர் ஒன்றில்
அய்.நா. மனித உரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப் படுவது, உயர் பாதுகாப்பு வளையங்கள், ஊடகவியலா ளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2005-இல் திரிகோண மலையில் அய்ந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை, கேலிச் சித்திர ஓவியர் (cartoonist) பிரகீத் எகினொலி கொட காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவும், இங்கிலாந்தும்
சாட்சிகள், மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்ப தற்கான சட்ட மூலம், சேனல் 4 காணொலி தொடர்பான விசாரணை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆன இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய செய்திகள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில், உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
உள்நாட்டுப் போரின்போது, இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான ஒரு முறைப்படியான சுதந்தர விசாரணை நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தக் கட்டத்தில் இலங்கை பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாள் நடக்கவுள்ள இலங்கைத் தொடர்பான விவாதத்தையடுத்து நவம்பர் 5ஆம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
மற்ற வெளிநாடுகளில் இப்படி ஒரு மனிதநேயம், மனித உரிமை காப்பு உணர்வு ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட முயற்சிகளும் கேள்விகள் வாயிலாக வெடித்துக் கிளம்பும் செய்திகள் வரும்போது, ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டினை உள்ளடக்கி ஆளும் இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதை தி.மு.க. போன்ற ஆளுங் கூட்டணிக் கட்சிகள் வற்புறுத்திட வேண்டும். பிரதமரைப் பார்த்தும், அய்க்கிய முற்போக்கு முன்னணி தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரை நேரில் கண்டும் பேசி, இந்தியப் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகள் மேலும் எப்படி இன்னும் முள்வேலிகள் அகற்றப்படாமல், சிங்களக்குடியேற்றமாக தமிழர் வசித்த பகுதிகள் மாற்றப்பட்டு அங்குள்ள தமிழர்கள் வாழவும் வசதியற்று Homeless வீடற்றவர் களாகவும் (ஏற்கெனவே நாடற்றவர்களாக்கப்பட்டு விட்டு) உள்ளநிலை, வடகிழக்கு மாகாணங்களில் இராணுவம் தான் சகல சர்வ அதிகாரிகள் என்ற நிலை போர் முடிந்த 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படி ஒரு கொடுமையா - வாழ்வுரிமைப் பறிப்பா என்று கேட்க வேண்டும் - இந்தியா பிரச்சினை எழுப்பிட வேண்டும் அந்த நவம்பர் கூட்டத்தில்.
அய்.நா. சென்ற வெளி உறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அவசர அவசரமாக காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தராதீர் என்று பிரதமருக்கு எழுதுவதில்தான் முனைப்பு காட்டப்படுகிறது. இது மகா வெட்கக் கேடு அல்லவா!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண 1) மத்திய (இந்திய) அரசு முயற்சிகள்
2) உலக மாமன்றமான அய்.நா.வும், அதன் பல்வேறு அங்கங்கள் மூலம்தானே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பரிகாரம் காண முடியும்?
நாம் அழுத்தங்கள் தரலாமே தவிர, ஆக்க ரீதியான பாதுகாப்பும் மீட்டுரிமையும், பெற்றுத் தர மேற்கண்ட இரண்டு அமைப்புகளின் பங்கும் பணியும் கடமையும் தானே முக்கியம்?
எனவே வாக்கெடுப்பிலும் இந்தியாதானே இலங் கையை வழிக்குக் கொண்டுவர தக்கதோர் நிலை எடுக்க வேண்டும்?
மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாக வேண்டும்!
மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாக வேண்டும்!
3. விடுதலைப்புலிகளை- தமிழர்களை அழித்த இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை இராஜ பக்சே அரசு நிறுவி, சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல்!
போர் வெற்றிச் சின்னமா? ஈழத் தமிழர் வாழ்வுரி மையை அழித்த வெறிச் சின்னமா? நடுநிலை நாடுகள் கண்டிக்க வேண்டும். இப்படி ஒரு பழி வாங்கும் மிருக உணர்ச்சி தமிழர்கள்மீது சிங்கள அரசால் நிரந்தரமாகக் காட்டப்பட்டால், அங்கு பழைய - சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதோ சம வாய்ப்பு என்பதோ, பரஸ்பர அன்பு என்பதோ ஏற்படுமா?
இறுதியில் தீர்வு தனி ஈழம்தான் என்று தமிழர்கள் எண்ணிட அவர்களைத் துரத்துவது அல்லாமல் வேறு என்ன?
புலியும், ஆட்டுக் குட்டியும் சர்க்கஸ் கூடாரத்தின் காட்சி வரையில் நட்பாக இருப்பதாகக் காட்ட முடியும் - அது நிரந்தரமாக மாறிவிட்டது என்று எவராவது கூறினால் அதைவிட கேலிக் கூத்து ஏமாளித்தனம் வேறு உண்டா?
உலக நாடுகள் பார்வை ஈழத் தமிழர்பால் அனுதாபத் தோடு விழுகிறது. இந்திய அரசே, உங்கள் கடமை என்ன?
சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்து நீங்காப் பழியால் தேர்தல்களில் மீளாத் தோல்விகளையும் சுமக்கத் தயாராகப் போகிறதா காங்கிரஸ்?
யோசிக்க வேண்டிய தருணம் இது!
யோசிக்க வேண்டிய தருணம் இது!
சென்னை
24.10.2012
24.10.2012
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கி அட்டூழியம்
- இந்தியாவும் நாங்களும் இணைந்து திடமான கூட்டணியாக செயல்படுவோம் : சீனா
- புதிய காற்றழுத்தம் உருவானதால் மழை நீடிக்கும்
- டெங்கு பாதித்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரத்த தானம் செய்ய தயாராக இருக்கிறோம்- திருமாளவன்
- டெங்கு கொசுவை ஒழிக்கும் கம்பூசியா மீன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- அந்தோ கொடுமை!: டெங்குவை தொடர்ந்து பரவுகிறது பன்றிக் காய்ச்சல்
- இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதா என்ற ஏக்கத்தோடு தாய்த்தமிழகம் தவித்துக் கொண்டிருக்கின்றது-கலைஞர்
- ராணுவத்துக்கு ரூ.100 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரிகள்: தணிக்கை குழு அறிக்கையில் தகவல்
- அமெரிக்கா அருகே கோஸ்டாரிகாவில் கடும் நிலநடுக்கம்
- மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பின் கருணை மனு நிராகரிப்பு
No comments:
Post a Comment