தமிழ்நாடு தேர்வாணையம் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு அதன் தலைவராக ஒரு பார்ப்பனர் கூட நியமிக்கப்படவில்லை. முதன் முதலாக அந்த நிலையைத் தகர்த்த சாதனைக்குரியவர்(?) மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (வாழ்க திராவிட உணர்வும் அண்ணா நாமமும்!)
திறமைக்கே பெயர் போன - பிரம்மாவின் முகத்தில் உதித்தவர் தலைவரான நிலையில் இதுவரை இவ்வளவுப் பெரிய தவறு நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குரூப்-2 தேர்வில் எங்கு பார்த்தாலும், கேள்வித் தாள்கள் வெளியாகின (Out) ஊரே சிரித்தது. ஆனாலும் ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாக சண்டி யர்த்தனம் செய்யும் ஊடகங்கள் (பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில்தானே!) இதைப்பற்றி மூச்சு விடவேண்டுமே!
இதற்குமுன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்கள் என்று சொல்லித்தான் இந்த பிராமணோத்தமர் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
இவரின் நிருவாக லட்சணம் பல்லிளித்துப் போய்விட்டது.
8 லட்சத்து 40 ஆயிரம் பேர் மீண்டும் தேர்வு எழுதவேண்டிய அவல நிலை! இதற்கு ஆகும் செலவை யார் கணக்கில் எழுதுவதோ! நடராஜ் அய்யர்களுக்குத்தான் (சிதம்பர ரகசியம் என்றும் கூறலாம்) வெளிச்சம்!!
குரூப் நான்கு தேர்வை நடத்தினார்களே - அதாவது ஒழுங்காக நடத்தப்பட்டதா? தருமபுரியில் எழுதியவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாளில் 200 கேள்விகளுக்குப் பதிலாக 105 கேள்விகள் மட்டும்தான் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம் சென்றதன் காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இப்பொழுது அந்தத் தடை நீக்கப்பட்டு, பாதிக்கப் பட்ட 13 பேர்களுக்கு மட்டும் தனித் தேர்வு நடத்தப்பட்டது (ஒரே தேர்வுக்கு இருவகையான வினாத்தாள் என்பதுகூட எப்படி நியாயம்?).
பார்ப்பனத் தலைவரின் தகுதி - திறமை இந்த அளவில்தான் இருக்கிறது. இதே இடத்தில் தாழ்த் தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ இருந்திருந் தால் எப்படியெல்லாம் தூற்றித் திரிந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!
இது இப்படியென்றால், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் 50 வினாக்களுக்குத் தவறான விடைகள் அளிக்கப்பட்டு இருந்தன. தேர்வு செய்யப்பட்ட வகையிலும் இட ஒதுக்கீடு முறையில் தவறு நேர்ந்திருக்கிறது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தேர்வை ரத்து செய்துள்ளது. ஆசிரியர்கள் தேர்வு வாரியம் இந்தத் தரத்தில் செயல்பட்டுள்ளது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் களுக்கான (28,596 இடங்கள்) தேர்விலும் ஏகப்பட்ட குளறுபடிகள் - சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசின் பணியமர்த்த ஆணையை ரத்து செய்து விட்டது. அதிலும் இட ஒதுக்கீடு முறை ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்பது முக்கியமான குற்றச்சாற்றாகும்.
சட்டப்படியான இட ஒதுக்கீட்டு முறையை ஏதோ ஒரு வகையில் பயனற்றதாக்கிட வேண்டும் என்ற சூழ்ச்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
மத்திய தேர்வாணையத்திலேயே திறந்த போட்டியில் இடம் அளிக்கப்படவேண்டியவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குக் கொண்டு வந்து, திறந்த போட்டிக்குரிய அத்தனை இடங்களையும் உயர்ஜாதிக்காரர்களின் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டவில்லையா?
அதனால்தான் திரு. சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களின் தலைமையில் செயல்பட்ட நாடாளு மன்ற நிலைக் குழு- இட ஒதுக்கீடு முறையில் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரை என்னாயிற்று என்றே தெரியவில்லை.
போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு முறை சூழ்ச்சிகளால் பறிக்கப்படுகிறது ஒடுக்கப்பட்ட மக்களும், தலைவர்களும் மிகவும் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் பெற்ற உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டு விடுவோம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment