Saturday, August 11, 2012

அரை நூற்றாண்டுக் காலம் ஆசிரியர்! கவிஞர் கலி. பூங்குன்றன்


உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி, வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய் திருந்தேன் என்று எழுதினார் தந்தை பெரியார் (விடுதலை - 10.8.1962).
விடுதலை நாளேட்டைப் பெருமையாகப் பேசுவோர் யாராக இருந்தாலும் அதன் சாதனைகளைப் பட்டியலிடுவோர் எவராக இருந்தாலும், விடுதலையின் பணியால் நாங்கள் நலம் பெற்றோம்  நாடு செழிப்புற்றது என்று நா மணக்கக் கூறுவோரும்கூட தலைதாழ்ந்த நன்றியை ஒருவருக்குத் தெரிவிக்க வேண்டு மென்றால் அவர் வேறு யாருமல்லர்  நம் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குத் தான்!
நடுத்தரக் குடும்பம்  பொருளாதாரச் சுமை களை ஏற்று ஏற்று, அங்குலம் அங்குலமாகத் தம் கல்விக் கடமையைக் கண்ணும் கருத்துமாக முடித்து, இல்லற வாழ்விலும் அடியெடுத்து வைத்து, கற்ற கல்வி மூலம் வருவாய் ஈட்டியே தீரவேண்டும் என்ற நெருக்கடியில்  இருந்த ஒருவர், எல்லாக் கனவுகளையும் கலைத்து விட்டு, ஊதியம் எதிர்பாராத் தொண்டில் தன்னைப் புதைத்துக் கொண்டார் என்பது சாதாரணமானதல்ல.
இதனைத் தந்தை பெரியார் அவர்களே குறிப்பிட்டுள்ளார்.
வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் ஒன்றிற்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும், மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்து விட்டார்.
அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர் களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வள வோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத்தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத் தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன் மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை.
ஆனால், மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும் நாளைக்கு அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல். என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க் வாங்கி இருக்கும் தகுதியினாலும்) மாதம் ஒன் றிற்கு ரூ.250க்குக் குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்குக் காத்திருந்து ஆசைகாட்டிக் கொண்டிருக்கும் போது, அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் முழுநேரப் பொதுத்தொண்டில்  இறங்குவ தென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதனிடமும் எளிதில் எதிர் பார்க்க முடியாத விஷயமாகும் என்று அறிக்கை யாகவே தந்தை பெரியார் கோடிட்டுக் குறிப் பிட்டுக் காட்டிய பின் எந்தவிதக் கணிப்பும் அவ ரைப் பொறுத்த வரை தேவையில்லாத ஒன்றே!
முத்தாய்ப்பாக தந்தை பெரியார் கூறும் ஓரிடம்  ஆசிரியரின் பெருமைக்கும் புகழுக்கும் தொண்டுக்கும் அக்மார்க் முத்திரையே.
வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ. 1,000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நமது இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட் டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்தாததற்கு இதுதான் காரணம் (விடுதலை  6.6.1964) என்று காரண காரியத்தோடு கண்களில் ஒன்றிக் கொள்ளும் சொற்களைக் கையாண்டு நமது ஆசிரியரை உச்சத்தில் வைத்துப் பாராட்டியவர் பகுத்தறிவுப் பகலவன் என்பதை மறக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் ஒரே ஒருவரைக் குறிக்கிறது  அவர்தான் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
இந்த நிலைக்குக் காரணம் என்ன? ஆசானாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குப் போதிக்க வேண்டியதைப் போதித்து வழிகாட்ட வேண்டி யவைகளை வழிகாட்டி, கைப்பிடித்து அழைத்துச் செல்வது விடுதலையன்றோ  அதனால்தான் இந்த மகுடம்!
தந்தை பெரியார் தன்மீது வைத்திருந்த மதிப்பு எதிர்பார்ப்பு  இவற்றை ஆழமாகக் கண்டு நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அந்தக் காலந்தொட்டு தனக் கென்று உள்ள அனைத்து விடுதலைகளையும் இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
விடுதலைக்குச் சந்தா சேர்ப்பதற்காக அவரே பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார்.
தந்தை பெரியார் காலத்தில் இருந்த விடுதலை யின் பொலிவு வேறு. கால மாற்றத்தோடு வலிமையாகப் பயணிக்க வேண்டியதன் அவசியத்தைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு நவீனமயத்தின் முழு அரவணைப்போடு விடுதலையை வீறுநடை போடச் செய்திருக்கிறார் மானமிகு வீரமணி அவர்கள்.
பல நாளேடுகளை அச்சிட்டுக் கொடுக்கும் அளவுக்கு விடுதலை அச்சகம் தலைநகரில் பெயர் பெற்று விளங்குகிறது.
இணையதளத்தில் முதன்முதலாக வெளி வந்த ஏடு விடுதலை என்ற பெருமையும் உண்டு.
1962இல் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவ்வாண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை விவேகம்  வனப்பு என்ற தண்டவாளங்களில் பயணிக்கும் வகையில் கொண்டு வந்து சாதனை புரிந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மலரை பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்து, படித்து குழந்தை போல் மகிழ்ந்து துள்ளும் தந்தை பெரியாரின் அந்தச் செயலைப் பார்த்தவர்கள்தான் அனுப விக்க முடியும்.
ஆம்! விடுதலை அய்யா மலர் வெகுமக்களால் ஆண்டுதோறும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது. விடுதலை பொன் விழா, பவள விழா மலர்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
50 ஆண்டுகள் விடுதலை ஆசிரியராகப் (1962 - 2012) பொறுப்பேற்ற பெரும் சாதனை  அசா தாரணமானது.
சமூக நீதித் திசையில் வருமான வரம்பு ஆணை ரத்து, அதன் காரணமாக பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 31 சதவிகிதத் திலிருந்து 50 சதவிகிதமாக உயர்வு.
மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கம்  இதன் பயன் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல  இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஆணை  நுழைவுத் தேர்வு ஒழிப்பு!
பெண்ணுரிமைக் களம், பண்பாட்டுத் தளம்  வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான எதிர்க்குரல் இன்னோரன்னவை விடுதலை வீரனின் மார்பில் பொறிக்கப்பட்ட பதக்கங்கள்.
விடுதலையின் 77 ஆண்டு தொடர் ஓட்டத் தில் 50 ஆண்டு காலம் அதன் சேவகனாகவும், சேவகராகவும் விளங்கும் பெருமைக்குச் சொந்தக்காரரான ஆசிரியருக்கு நாம் காட்டும் கைம்மாறு என்ன? நன்றிக் காணிக்கை என்ன?
பொன்னா, பொருளா, புகழ் மாலையா? அல்ல, அல்ல. 50 ஆண்டு பணியாற்றியவருக்கு 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிப்பது என்ற தீர்மானம் கொள்கைப் பார்வையில் நிறைவேற்றப்பட்டதாகும். (திருச்சிராப்பள்ளி  திராவிடர் கழகப் பொதுக்குழு 11.9.2011).
இதற்கான களப்பணிகள், செயல் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கருஞ் சட்டைத் தோழர்கள் களத்தில் கம்பீரமாகத் தேனீக்களாகப் பறந்தும், பம்பரமாகச் சுழன் றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 50 ஆயிரம் சந்தாக்கள் என்பது தமிழர்களின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைந்ததாயிற்றே!
விடுதலையால் பலன் பெற்ற தமிழர்கள், விடுதலையால் பகுத்தறிவு பெற்ற தமிழர்கள், பலன் அனுபவித்த அரசுப் பணியாளர்கள், உரிமை பெற்ற பெண்கள் இந்த அளவுக்குக்கூட இருக்க மாட்டார்களா?
தமிழர்களின் கதவுகளைத் தட்டித் தட்டிக் கேட்போமே!
நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்கிற தன்னம்பிக்கையையும் நமக்குக் கொடுத்தது நமது தலைவர்தானே!
அவரிடம் 50 ஆயிரம் சந்தாக்களை அளிப் பதற்கான ஆயுதத்தை அந்த வகையிலும் அவர் நமக்குக் கொடுத்தார் என்று எடுத்துக் கொண் டோம் - சாதித்தும் காட்டினோம் - தொடர்ந் தும் கொண்டும் இருக்கிறோம். சந்தா சேர்ப்பது என்கிறபோது குடிஅரசு இதழுக்குச் சந்தா சேர்க்கை பற்றி தந்தை பெரியார் எடுத்துக் கூறியதை இந்நேரத்தில் நினைவூட்டுவது மிகவும் பொருத்தமாகும். குடிஅரசு
புது ஆண்டு சன்மானம்
1926ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது; ஆண்டுப் பிறப்பிற்காக குடிஅரசு
பத்திரிகைக்கு என்ன சன்மானம்
செய்யப் போகிறீர்கள்?
ஒன்று,
குடிஅரசுக்கு அதன் நண்பர்கள்
ஒவ்வொருவரும் 3 சந்தாதாரர்களைச்
சேர்த்துக் கொடுங்கள்;
அல்லது
நமது சமூகத்துக்கே கேடு சூழும்படியான
பிராமணப் பத்திரிகைகளின் ஒரு
சந்தாதாரரையாவது குறையுங்கள்.
இதை நீங்கள் செய்தால் குடிஅரசுக்கு
மாத்திரமல்லாமல், நாட்டுக்கும்,
பிராமணரல்லாத சமூகத்துக்கும்
விடுதலை அளிக்க உங்கள்
கடமையைச் செய்தவர்களாவீர்கள்.
தந்தை பெரியார்
(குடிஅரசு 27.12.1925).
இது விடுதலைக்கும் பொருந்துமே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...