Wednesday, July 25, 2012

ஆன்மீகச் சிதறல்கள்


ஆன்மிகச் சிறப்பிதழ்கள் என்று வெளியிடு கிறார்களே - கொஞ்சமாவது புத்தியைச் செலுத்து கிறார்களா? இதோ ஒரு கதையைக் கேளுங்கள்!  கேளுங்கள்!!
சிறீபக்ஷிராஜர் திரு நட்சத்திரம்
கசியப மகரிஷி - வினதை இருவருக்கும் பிறந்தவர் கருடன். தாயின் அடிமைத் தளையை நீக்க  தேவ லோகத்திலிருந்து இந்திரனிடம் சண்டையிட்டு அமிர்தத்தைப் பெற்று வந்தார். அதைத் தர்ப்பையைப் பரப்பி ஊற்றி தாயின் அடிமைத்தனத்திற்குக் காரணமாக இருந்த கத்ருவின் பிள்ளைகளான நாகர்களைக் குடிக்கச் செய்தார். தர்ப்பையால் நாக்கு பிளவுபட்ட சர்ப்பங்கள் இரத்தம் கொட்ட மயங்கி விழுந்தன. மாற்றாந் தாயான கத்ரு, கருடனின் வலிமையைப் புரிந்து கொண்டு சக்களத்தியான வினதைக்கு அடிமைத் தளையிலிருந்து விடுதலை அளித்தார்.
கருடனின் தமையன் சூரியனின் ரதசாரதி யான அருணன். கருடன் திருமாலின் வாகனம். நர காசுர வதத்திற்கு பெரும் உதவியாக இருந்தவன்.  கருடனின் அம்சமாகப் பிறந்தவர் பெரியாழ்வார். இன்று, பெரிய திருவடி எனப்படும் பட்சி ராஜா வாகிய கருடனை பெருமாள் கோயில் சென்று வழிபடுவதால் சாதனை புரியும் ஆற்றலும், வீரமும், திருமால் அருளும் கிட்டும்.
ஏதாவது புரிகிறதா?
கருடனின் அண்ணன் சூரியனின் ரத சாரதி (எவ்வளவுக் காட்டு விலங்காண்டிகள்!) ஆகாயத் தில் இப்பொழுது பறக்கின்றனவே - இவை எல்லாம் கூட மகரிஷிக்குப் பிறந்தவைகள்தானா? பெரியாழ்வார் யார் என்று கேட்டால் கருடனின் அம்சமாம். கருடன் தலைக்கு மேல் பறந்தால் காண்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டுமாம். வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வழக்குகளில் ஜெயமாம். (வாதி, பிரதிவாதி இருவரும் தரிசித்தால் யாருக்கு வெற்றியாம்?) அது சரி, கோழிக் குஞ்சுக்கு மேல் கருடன் பறந்தால் யாருக்குப் பலனாம்?
அந்தப் பெரியாழ்வாரின் வளர்ப்பு  மகள்தான் ஆண்டாளாம். அந்த ஆண்டாள் யார் என்றால் தந்தையாகப் போற்றத் தகுந்த பெருமாளைப் புரு ஷனாகக் கொண்டு புணர்ந்திட ஆசைப்பட்டா ளாம்! (அட ஒழுக்கம் கெட்ட கூட்டமே!)
பக்தரிடம் பெருமாள் கடிபட்டாராம்
பக்தர் ஒருவரிடம் கடவுள் பெருமாள் ஒவ்வொரு நாளும் கடிபட்டாராம். சிறீரங்கம் கோயிலில் சிறீமான் ரெங்கநாதன் பள்ளி கொண்டு இருக் கிறார் அல்லவா? அரையர் சுவாமிகள் பாடும் பாசுரங்கள் பெருமாளுக்குப் ப்ரீதியாம். அரையர் வெற்றிலைப் பாக்குப் பிரியராம். குழைய குழைய வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டே பாசுரங்களைப் பாடுவாராம். பெருமாளைத் தம் வெற்றிலைப் பாக்குப் பெட்டியில் எழுந்தருளச் செய்தாராம் (பெருமாளின் கதியைப் பார்த்தீர்களா!)
அடிக்கடி வெற்றிலைப் பாக்குப் பெட்டியைத் திறந்து பார்த்துத் தொட்டு வணங்குவாராம். சில நேரங்களில் கொட்டைப் பாக்கு என்று நினைத்து பெருமாளையும் கடித்துவிடுவாராம். பிறகு நீராட்டிப் பாசுரம் பாடி வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள் வைத்துவிடுவாராம். (கடவுளா கொட்டைப்பாக்கா?)
கடவுளைப் பக்திச் சிமிழுக்குள் அடைக்கும் விபரீதத்தை என்ன சொல்ல!
பெண்களுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?
மாண்டவ்ய முனிவருக்கும், டிண்டிகைக்கும் ஒரு மகள். தம்பதியர்கள் காசி யாத்திரை செய்ய விரும்பி, மகளை உத்தமராக நம்பிய எமதர்மனிடம் விட்டுச் சென்றனராம்.
அந்த யோக்கிய சிகாமணி என்ன செய்தான்? நம்பி விட்டுச் சென்ற அந்தப் பெண்ணுடன் சுகபோகம் அனுபவிப்பதும், பகல் நேரத்தில் அவளை விழுங்கி விடுவதும் வழக்கமாம்.
ஒருமுறை  குளிக்கச் சென்றபோது அந்தப் பெண்ணை வயிற்றிலிருந்து வெளியே உமிழ்ந்து விட்டு குளிக்கச் சென்றான். அப்பொழுது அந்த வழியில் வந்த அக்னி பகவான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி அவளை கற்பழித்துவிட்டானாம். (இந்து மதம் என்றாலே கடவுள் கற்பழிக்கவேண்டுமே!)
குளிக்கச் சென்ற எமதர்மன் வெளியில் வந்த போது வேறு வழியின்றி அக்னியை அப்படியே அலக்காகப் போட்டு  அந்தப் பெண் விழுங்கி விட்டாளாம்.
எமதர்மன் வழக்கம்போல அந்தப் பெண்ணை விழுங்கி விட்டானாம். இப்பொழுது எமன் வயிற்றில் பெண் - அந்தப் பெண்ணின் வயிற்றில் அக்னி! (இன்னும் கேளுங்கள்! கேளுங்கள்!!)
அக்னி அமுங்கிவிட்டதால் தேவர்கள் யாகம் முதலியவற்றைச் செய்ய முடியவில்லையாம்.
அக்னி பகவான் இருக்கும் இடம் எப்படியும் வாயு பகவானுக்குத் தெரியும் என்று கருதி அக்னியைக் கொண்டு வருமாறு தேவர்கள் வேண்டினர்.
வாயு பகவான் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். எமதர்மராஜாவுக்குப் பக்கத்தில் இரண்டு இலைகள் போடப்பட்டன. எமதர்மன் வாயுவைப் பார்த்து என் பக்கத்தில் இரண்டு இலைகள் ஏன் என்று கேட்க, அதுதான் சந்தர்ப்பம் என்று கருதி, உன் வயிற்றுக்குள் பெண் இருக் கிறாரே - அவளுக்குத்தான் என்று வாயு கூற, வேறு வழியின்றி எமராஜா பெண்ணை வெளியில் கக்கினான். இன்னொரு இலை யாருக்கு என்ற வினா எழுந்தது.  உன் வயிற்றில் இருக்கும் அக்னி பகவானை வெளியில் கொண்டு வா என்று அந்தப் பெண்ணிடம் கூறினான் வாயு.
அக்னி பகவான் பெண்ணின் வாயிலிருந்து வெளியே வந்தபோது பெண்ணின் தாடி மீசை பொசுங்கிப் போய் விட்டதாம். அதிலிருந்துதான் பெண்களுக்கு தாடி மீசை முளைக்காது போய்விட்டதாம்!
காட்டுமிராண்டிகளுக்கும் காட்டுமிராண்டிகள் என்பார்களே - அவர்கள் இந்த இந்து மதப் பேர்வழிகளாகத்தான் இருக்க வேண்டும்.
இந்துப் புராணங்களைப் படித்தால் பைத்தியம் பிடித்து, உலக்கையைக் கோவணமாகக் கட்டிக் கொண்டுதான் திரியவேண்டும்.
நாட்டில் பக்தி குறைந்ததால் தான் ஒழுக்கம் குறைந்து போய்விட்டது என்று கூறும் புத்தி சிகாமணிகளை முச்சந்தியில் நிறுத்தி நாலு கேள்விகளைக் கேட்கக் கூடாதா?


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...