Monday, July 30, 2012

பா.ஜ.கட்சி தலைவர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஆர்.எஸ்.எஸ். (2)


- ராணா அயூப்
நேற்றைய தொடர்ச்சி....

முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர் சனம் அரசின் விவகாரங்களில் தலையிடு வதை வாஜ்பேயியும், அத்வானியும் எவ்வாறு திறமையுடன் தவிர்த்தனர் என்பதை எண்ணி ஆர்.எஸ்.எஸ். இப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கிறது. வாஜ்பேயி போன்ற மென்மையான தாராளமனம் கொண்ட தலைவருடன்  தீவிரக் கொள்கைப் பிடிப்புள்ள அத்வானி போன்ற தலைவரும் உடனிருப் பதையே ஆர்.எஸ்.எஸ். விரும்பி வரவேற் கிறது. ஆனால் அத்தகைய தலைவர்கள் மீது கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. கட்டுப்பாட்டை இழக்க அது விரும்பவில்லை.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மிகுந்த நம்பிக்கைக்கு ரிய அவரது தலைமைச் செயலாளர் பிரஜேஷ் மிஸ்ராவை ஆர்.எஸ்.எஸ்.  தொடர்ந்து தாக்கிக் கொண் டிருந்தது. அவரை பதவி விலக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் கூறிய காரணம் உண்மையானதல்ல. அவர் நீக்கப்பட்டால், வாஜ்பேயி பலவீனமடைந்துவிடுவார் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அரசு நிலைக்க வேண்டுமே என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை தெகல்கா வெளிப்படுத் தியதில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு மகிழ்ச்சிதான். பிரதமர் அலுவலகத்தில் இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் மீது தாக்குதல் நடத்துவதையும் அது வரவேற்றது. வாஜ்பேயி பிரதமர் அலுவலகத்தின் மிது முழு அளவி லான தாக்குதலை நடத்த சென்னை கணக் காயர் குருமூர்த்திக்கு  சுதந்திரம் அளித்தது.
பா.ஜ.கட்சி விவகாரங்களில் தலையிடு வதை ஆர்.எஸ்.எஸ். நிறுத்திக் கொண்டு அதனை ஒரு முழுமையான அரசியல் கட்சி யாக வளர விடுமா? என்று அரசியல் நோக் கர்கள் கேட்பதுண்டு. இது பற்றி ஆர்.எஸ். எஸ்.சின் ஓர் உண்மையான விவாதம் நடந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இக்கேள்வி அளிக்கிறது. ஆனால், பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டை விட்டு விலகிச்செல்வதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவே இல்லை. யார் தலை வராக வரவேண்டும், யார் ஓய்வு பெற வேண்டும் என்பத தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின் றனர். முற்றிலும் அரசியலை மட்டுமே சார்ந்த பிரச்சினையிலும் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நீட்டி வருகிறது. பிரதமர் வேட்பாளர் மதச்சார் பற்றவர் என்ற தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியபோது, பா.ஜ.கட்சி இதற்கு பதில் கூறட்டும் என்று விட்டுவிடாமல், மோகன் பகத், இந்துத்வ ஆதரவாளர் ஒருவர் பிரதமராக வருவதில் தவறென்ன? என்று கேட்டார். உடனே பிரதமர் வேட்பாளராக தான் ஆவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளிப்ப தாக மோடி கூற ஆரம்பித்து விட்டார். அதனை மறுத்து, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர் பாளர் ராம் மாதவ், இந்துத்துவா பற்றி நிதிஷ் குமார் கூறியதற்கு மோகன் பகத் பதிலளித் தார் அவ்வளவுதான்.  எவரையும் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறவில்லை என்று கூறினார்.
2002 குஜராத் படுகொலைகள் என்னும் களங்கம் மோடியின் மீது நீடித்திருக்கும் நிலையில் அவரை எப்படி பிரதமர் வேட்பாள ராக ஆக்க முடியும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, கோட்பாடு பற்றிய கேள்வி அது என்பதால், பாபர் மசூதி இடிப்புக் குப் பின்தான் அத்வானி உதவி பிரதமர் ஆனார் என்று அவர் பதிலளித்தார்.
கமல்சந்தேஷ், பஞ்சஜைன்யா, ஆர்கனை சர் என்ற ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தால் நடத்தப்படும் மூன்று பத்திரிகைகளிலும் அண்மையில் மோடிக்கு எதிரான செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் பிரபாத் ஜாவை ஆசிரியராகக் கொண்ட கமல்சந்தேஷில், மோடி ஓர் அவசரக் குடுக்கை என்று எழுதியுள்ளார். எல்லோரை யும் அனுசரித்துச் செல்ல முடியாத பொறுமை யற்ற தலைவராக மோடி ஆகி வருவதாக பஞ்சஜைன்யாவின் கட்டுரை எச்சரிக்கிறது. சங் வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் பேராசிரியர் தேவேந்திர ஸ்வரூப் எழுதிய கட்டுரை இது.
சங் என்ன நினைக்கிறதோ அதற்கு எதிரான இத்தகைய கருத்துகள் சங் பத்திரி கைகளில் எவ்வாறு வெளி வருகின்றன என்று ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கேட்கிறார்.
ஆனால்  ஓர் அமைப்பு என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ். மோடிக்கு இத்தகைய ஆதரவு அளிப்பது பற்றி குஜராத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கட்சியினர் கவலையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் அளிக்கும் ஆதரவு மோடியை சர்வாதிகாரி அரசியல்வாதியாகத்தான் ஆக்கும் என்று ஜடாபி கூறுகிறார். மோடியை ஆதரிக்க நம்மைப் போன்ற எத்தனை ஆடுகளை பலி தருவார்கள்? ஹரேன் பாண்டியா, சஞ்சய் ஜோஷி, கேசுபாய் படேல் என்று எத்தனை பேர்? என்று அவர் கேட்கிறார். கொள்கைப் பிடிப்பு கொண்ட தலைவர்களை உருவாக்குவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். தீய சக்திகளையே உருவாக்கி வருகிறது என்று அவர் கூறுகிறார்.
தனக்கு உடல்நலமில்லை என்று கூறிக்கொண்டு மோடி மருத்துவமனையில் சேர்ந்தபோது ஆர்.எஸ்.எஸ். அவருக்கு அடிபணிந்தது. ஆர்.எஸ்.எஸ்.கோட்பாட்டில் என் கணவர் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி கேட்கிறார்.
இப்போது நடப்பது இதுதான். ஒரு அமைப்பு பிரச்சாரம் செய்யும் கோட்பாடு வெளிப்படுத்தப்படும்போது,  ஒரு நோக்கத் திற்காக அல்லாமல் ஒரு தனிப்பட்டவருக்கே அது உதவுவதாக உள்ளது. எந்தப் பிரச் சினையில் இருந்தும் எளிதாகத் தப்பிக்கும் வழியையே இன்று ஆர்.எஸ்.எஸ். தேடுகிறது. எடியூரப்பா, வசுந்தரா, மோடி போன்ற தனிப்பட்டவர்களின் கட்டளைக்கு அது கீழ் படிந்து வருகிறது என்று ஒரு பா.ஜ.க. மூத்த தலைவர் கூறுகிறார்.
என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் முரண் பாடுகளே முன் நிற்கின்றன. ஜாதி அரசி யலுக்கு இடம் கொடுத்து லிங்காயத் சமூகத் திற்கான அடையாளத்துக்கு ஆதரவு தரும் எடியூரப்பாவுக்கு பா.ஜ.க. ஆதரவு தருவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. ஆனால், தனது சொந்த ஊரான நாக்பூரைச் சேர்ந்த தனது பார்ப்பன இனத்தைச் சேர்ந்த கட்காரிக்கு இரண்டாவது முறை பா.ஜ.க. தேசிய தலைவர் பதவியை பகவத் அளித்துள் ளது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.
பா.ஜ.கட்சியில் உள்ள புதுதலைமுறை யினருடனான தொடர்பில் ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. முரளி மனோகர் ஜோஷி, அத்வானியை விட்டால், வேறு யார் எங்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள உள்ளனர்? இரண்டாம் நிலை தலைவர்களை எல்லாம் பாருங்கள். அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ரஜ்நாத் சிங், எடியூரப்பா அவர்களில் எவரும் கோட்பாட்டுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. மேல்பதவியில் இருப்பதையே அவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். இந்த மாதிரியான அரசியல் நடத்துவ தால்தான் அத்வானி மும்பை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின் றனர். குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அம்மாநிலத்தின்  வளர்ச்சியும், இந்துத்துவா கோட்பாடும் தான் காரணம் என்று  சிலர் கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த வியூகம் மத்தியபிரதேசம், ராஜஸ்தான்  போன்ற மாநிலங்களில் ஏன் செல்லுபடி யாகவில்லை? மத்திய பிரதேசத்தில் உண் மையில் ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க. போர் வையில் ஆட்சி செய்கிறது. அரசியல் விவ காரங்களில் சுரேஷ் சோனியின் தலையீடும், வியாபார ஒப்பந்தங்களை ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் முடித்துத் தரும் வெளிப்படையான ரகசியங்கள்தான். சோனி ஆர்.எஸ்.எஸ்.சில் பணக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து விட்டதாக பலரும் புகார் கூறுகின்றனர். மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒப்பந்தங்களுக்கு அவர் ஒரு தரகர் போல இருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ்.சும் அதனைக் கண்டு கொள்ளாமல் உள்ளது என்று ஒருவர் கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.சின் இணைச் செயலாள ரான சோனி முன்னாள் தலைவர் சுதர்சனின் சீடர்.  மற்றொரு பார்ப்பனரான சுரேஷ் பய்யாஜி ஜோஷியை பொதுச் செயலாளராக ஆக்கி தன்னைப் புறக்கணித்ததற்காக பகவத் மீது சோனிக்கு வருத்தம் இருக்கிறது. ஜாதி தான் இதன் காரணம் என்று வைசியரான அவர் கூறுகிறார்.
பா.ஜ.கட்சிக்கு அரசியல் களத்தில் இடம் பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். இரட்டைப் பேச்சு பேசி வருகிறது. இது இதர இந்துத்துவ அமைப்புகளைப் புறக்கணிப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலரையும் ஏமாற்ற மடையச் செய்வதாகவும் இருக்கிறது. விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தளத்துடன் ஆர்.எஸ். எஸ்சுக்கு நல்ல உறவு இருந்தது.  கருநாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த அமைப்பு களுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கட்சி யினருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வெடித்துக் கிளம்பின. மகாராஷ்டிராவில் மாலகான் குண்டுவெடிப்புகளுக்கும் தனக் கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். சவுகரியமாக விலகிக் கொண்டது. பஜ்ரங்தளம், சனாதன் சன்ஸ்தா, விசுவ இந்து பரிசத் ஆகியவை மாலகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்தபோது, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தர வில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திரேஷ்குமார், சுனில் ஜோஷி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பற்றி சாட்சியம் அளித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியது.
இவை அனைத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். சின் செல்வாக்கு குறைந்து வருவதே கார ணம் என்று ஒரு முக்கிய ஆர்.எஸ்.எஸ்.நட்சத் திரமான கோவிந்தாச்சார்யா கூறுகிறார். சாதாரண சாப்பாடு, படுக்கும் பாய், 200 சதுர அடி அறையுடன் ஆர்.எஸ்.எஸ். தொண் டர்கள் மனநிறைவடைந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களும் அவர்களது மூத்த தலை வர்களைப் போலவே  அதிகாரம் தேடுபவராக இருக்கிறார்கள்; குளிரூட்டப்பட்ட அறை, மற்றும் நவீன சாதனங்களைத் தேடுபவர் களாக உள்ளனர். அந்த சவுகரியங்களைப் பெறுவதற்கு இந்துத்துவா, சமூக முன்னேற் றம் பற்றி பேசுவதே வழியாகும். இதுதான் அரசியல் என்று தோன்றுகிறது.
நன்றி: தெகல்கா 14 ஜூலை 2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...