ஏதோ எந்தக் காலத்திலோ சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துத் தொலைத்தார்கள் - காலம் மாறி வரும் சூழலில் அவர்களின் மனப் பான்மையில் ஏதாவது மாற்றம் வந்திருக்குமா என்று எதிர்பார்த்தால், பலத்த ஏமாற்றம்தான்.
எப்பொழுதுமே அவர்களின் சிந்தனைகள், பார்ப்பனர் அல்லாதார் படித்துவிடக் கூடாது என்பதுதான்; 1937இல் முதன் முதலாக ஆச்சாரியார் என்று அழைக்கப்படும் ராஜாஜி அவர்கள் சென்னை மாநிலத்தின் பிரதமராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; பள்ளிகளில் இந்தியையும் திணித்தார். 1952இல் கொல்லைப்புறம் வழியாக சட்ட மேல் சபையில் நுழைந்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சார் ஆனார் என்றால், அப்பொழுதும் 6000 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும்; மீதி நேரம் மாணவர்கள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு வழியில்லாமல் கதவை அடைத்து விட்டனர்.
சட்டத் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதன் சந்து பொந்துகளில் நுழைந்து ஏதாவது தொல்லை கொடுத்து வருவது பார்ப்பனர்களின் ஜீவ சுபாவமாகவே போய் விட்டது.
திறந்த போட்டி (Open Competition) என்பதை பிற சாதியினர் (Other Community) என்று திரிபுவாதம் செய்து அனைத்து ஜாதியினரும் போட்டியிடத் தகுதி உடைய அனைத்து இடங்களையும் பார்ப்பனர்களே பறித்துக் கொண்டனர். அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு மூன்றாண்டுகள் ஓடி விடும் - கிடைத்த வரை ஆதாயம்தானே!
மத்திய தேர்வாணையம் வரை உள்ள பார்ப்பன அதிகார மய்யங்கள் - இந்த அக்கிரமத்தைச் செய்தன! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில்கூட அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டோருக்கு திறந்த போட்டிக்குரிய ஒதுக்கீட்டில் இடம் அளிக்காமல்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்குரிய ஒதுக்கீட்டில் இடங்களை அளித்து திறந்த போட்டிக்குரிய அந்த இடங்களையெல்லாம் இந்த உயர் ஜாதிக்காரர்களே சுளையாக விழுங்கினார்கள்.
இப்பொழுதுதான் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது; உச்சநீதிமன்றம் வரை சென்று பார்ப்பனர் முட்டி மோதிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை என்றவுடன் இப்பொழுதோ அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்து வாசல் வழியாக உள்ளே நுழைய முடியாத பார்ப்பன சாதி ஒட்டகம் கொல்லைப்புற வழியாக நுழைய பார்க்கிறது.
பொறியியல் - கல்லூரிகளில் சேருவதற்குத் தகுதி மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு ஒன்றை நிர்ணயம் செய்தால் உடனே அகில இந்திய தொழில் நுட்பக் கவுன் சில் (AICT) என்ன செய்கிறது? தகுதி மதிப்பெண்களை உயர்த்தி அறிவிக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு கிடையாது. இதனை எதிர்த்து வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண் குறைவாகவும், சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண் வேறாகவும் இருக்கிறது. பல்கலைக் கழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண்ணையே (பொதுப் பிரிவுக்கு 70 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீதம்) அரசு கல்லூரியில் சேருவதற்கும் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு சம்பந்தப் பட்டவர்களுக்குத் தாக்கீது அனுப்பியுள்ளது. மனப்பாடம் பண்ணி வாங்கும் மதிப்பெண்ணில்தான் ஒட்டு மொத்தமாக தகுதியும் கூடாரம் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக அடம் பிடித்துச் சாதிக்கப் பார்க்கிறார்கள் பார்ப்பனர்கள்.
டில்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களைச் சேர்ப்பதில் நிருவாகம் செய்த தில்லுமுல்லுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் ஒன்றைக் குறிப்பிட்டனர்.
அந்த நாட்களில் தேர்ச்சி பெற குறைந்தளவு மதிப்பெண்கள் 35 ஆகும். அம்பேத்கர் 37 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கல்லூரியில் சேர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு ஒரு அம்பேத்கரும், அருமையான அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்குமா என்று கேட்டனர். இந்த உண்மைகள் எல்லாம் உயர் ஜாதிக்காரரான - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது? கல்வித் துறைக்குப் பார்ப்பனர் அமைச்சராக இருப்பது ஆபத்தானது! ஆபத்தானது!!
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஆடையூர் அவலம்
- கலைஞர் அவர்களின் எச்சரிக்கை!
- அடுத்தகட்ட கிளர்ச்சி!
- இடஒதுக்கீடும் வருமான வரம்பும்
- புதிய இராணுவத் தளபதியின் அறிவுரை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- அவமானப்படும் ராஜபக்சேக்கள்!
- 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
- விடுதலை விடுதலை!
- சமச்சீர்க் கல்வியின் கண் கண்ட பலன்!
- கலைஞர் பிறந்த நாள் எழுச்சியின் பின்னணி
Comments
1 கபில் சிபில் திட்டத்தின் படி பொது தேர்வில் கிடைத்த மதிப்பெண்களுடன் மாணவர்கள் +2 வில் எடுத்த மதிப்பெண்களும் சேர்த்து (60 -40 என்ற விகிதத்தில் சேர்த்து) எடுத்து கொள்ளப்படும். மேலும் மாணவர் ஆற்றிய சமுதாயப் பணிகளுக்கும், விளையாட்டு முதலிய மற்ற துறைகளுக்கும் உரிய எண்கள் தரப்படும்.
2 பல தலித் மாணவர்களின் தற்கொலைஐ பற்றி கேள்விப்பட்டு, உயர் கல்வி பள்ளிகளில் ஜாதியை வைத்து பாகுபாடு செய்வது சட்ட விரோதமாக்கப்படு ம் என்று புதிய சட்டத்தை கொண்டு வரப் போகிறார்
ஆகவே பார்பனர் தான் தலித்களிடம் அதிக கவன செலுத்துகிறார். மற்றவர்களை போல பேச்சுடன் நிறுத்தி கொள்ளவில்லை. ..