மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடத் திட்டம் வைப்பது என்ற முடிவை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. (20.1.2012)
அதற்குக் கை மேல் பலன் கிடைத்துள்ளது. சோதிடம் (Astrology) என்பது வேறு வானவியல் என்பது வேறு (Astronomy!) இரண்டும் ஒன்றல்ல படித்தவர்கள்கூட இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது பரிதாபமே!
சோதிடர்கள் கோள் என்று சொல்லும் சூரியன் உண்மையில் நட்சத்திரமாகும். சோதிடத்தில் முக்கிய கோளான பூமிக்கு இடமில்லை அதே நேரத்தில் பூமியின் துணைக்கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.
இராகு, கேது என்று இரு கோள்களைக் குறிப்பிடுகிறார்களே உண்மையில் அப்படி கோள்கள் கிடையாது என்று வானவியல் அறுதியிட்டு அறை கிறது. செவ்வாய், வியாழன், சனி இவைகளுக்குத் துணைக்கோள்கள் முறையே 2,16,22 இருக்கின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் எழுதி வைத் துள்ளனரா? இப்படி துணைக்கோள்கள் உண்டு அறியாதவர்கள் எப்படி இவற்றிற்குப் பலன் எழுதி வைத்திருக்க முடியும்?
பூமி நிலையானது என்றும், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்கிற சோதிடத்தை நம்பி பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்று எப்படிதான் துணிந்தனரோ தெரியவில்லை.
நம் நாட்டுக் கல்வியின் தரம் இதுதானா?
சோதிடர் கூறும் இராசி வட்டத்தில் பல கோடி நட்சத்திரங்கள் உண்டு. இவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் 27 நட்சத்திரங்களே.
ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு இடைவெளி துரத்தில் இருக்கும் பொழுது கிரகங்கள் எப்படி இராசி வட்டத்துக்குள் குடியிருக்கின்றன?
யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் கிடையாது.
சனிக்கிரகம் பொல்லாதது - பாவம் பிடித்தது என்றெல்லாம் உளறி வைத்துள்ளனர். 28.1.2006 அன்று சூரியன் - பூமி - சனி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அதனால் என்ன பாவம் வந்து சூழ்ந்து விட்டது?
இப்படி நேர்நோட்டில் வந்ததைக்கூட விஞ் ஞானிகள்தானே தெரிவித்தனர். 10.2.2007 அன்று பூமிக்கு அருகில் வந்த சனிக்கிரகத்தை பெரியார் அறிவியல் மய்யத்தில் உள்ள கோளரங்கத்திற்குச் சென்று பொது மக்கள் பார்வையிட்டனரே! அப்படிப் பார்வையிட்டவர்களை சனிப் பகவான் பிடித்துக் கொண்டானோ!
கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படு கின்றன; நிரூபணம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக புளூட்டோ என்னும் கிரகம் பற்றி 1930இல் கூறப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கிரகத்திற்குரிய தகுதிகள் அதற்கு இல்லை என்று கூறி கோள்களின் பட்டியலிலிருந்து அகற்றி விட்டனர்.
இப்படி விஞ்ஞானம் புதுப்புது உண்மைகளைக் கண்டறியும் நிலையில், அறிவியல் வளராத காலத்தில் வெறும் கண்களால் விண்வெளியைப் பார்த்து அப்பொழுது இருந்த அறியும் பக்குவத்திற்கு ஏற்ப எதையோ கிறுக்கி வைத்தனர்.
அவற்றை நாளும் அறிவியல் வளரும் இந்தக் கால கட்டத்தில் கண்மூடித்தனமாக நம்புவது, பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் கூறுகிறது; இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகத்திலேயே அறிவியல் மனப்பான்மைக்கு விரோதமாகப் பாடத் திட்டத்தை வைக்கத் துடிக் கின்றனர் என்பது வெட்கக் கேடாகும்.
பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம்தான் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment