தமிழ்நாடு அரசுக்கு அவசர அவசரமாக மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளன. அதுவும் போர்க்கால அடிப்படையில் கருத்தூன்றி செயல் படுத்தப்பட வேண்டியவை அவை.
முதலாவது இடத்தில் உள்ளது மின் பற்றாக்குறை! ஜார்மன்னன் பிடியிலிருந்து விலகி புரட்சி அரசை அமைத்த லெனின் கூட முதலில் கவனம் செலுத்தியது நாட்டை மின்மயமாக்குதலில்தான்.
பவர் என்ற சொல்லுக்கு அதிகாரம் என்பது மட்டும் பொருளல்ல - மின்சாரம் என்று பொருள் அமைவதில் உள்ள பொருத்தத்தை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு வயது 65 ஆண்டுகள் ஆனாலும், அடிப்படையான மின் மயமாக்கலில் இன்னும் சவலைப் பிள்ளையாக இருப்பது - நமது அய்ந்தாண்டுத் திட்டங்களின் மீதான மதிப்பீடு பாராட்டத்தக்க அளவில் இல்லை.
மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறாத நாடு என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருப்பது கேலிக்குரிய தாகும். இதே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்றதும் - இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீனா இந்தக் காலகட்டத்தில் பெற்ற வளர்ச்சிக்கு எல்லாம் ஆதாரச் சுருதி மின் துறையில் முன்னேற்றமே!
நீர்வளம், கனிமவளம் நிறைந்த நாடுதான் இந்தியா - மறுக்க முடியாது; இவற்றைப் பயன்படுத்தி முதல் நிலைக்கு வந்திருக்க முடியும் - அந்நிலை ஏற்படாமைக்கு என்ன காரணம் என்பதை ஆக்கரீதியாகச் சிந்தித்து உரிய நடவடிக்கைகளை மேலும் காலந்தாழ்த்தாமல் செய்வதுதான் நல்லாட்சி என்பதற்கான அடையாள மாகும்.
நிலக்கரி, எண்ணெய் / வாயு இவற்றின்மூலம் 65 விழுக்காடு; நீர்மூலம் 21 விழுக்காடு; மரபு சாராதவை என்ற நிலையில் 11 விழுக்காடு; அணுசக்தி மூலம் 2.8 விழுக்காடு; ஆக மொத்தம் ஒரு லட்சத்து 82 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
சூரிய ஒளி, கடல் அலைகள், கழிவுப் பொருள் களிலிருந்து மின்சாரம் என்று பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ள நிலையில், அவற்றைப்பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்கப்படுவதும் அவசியமாகும்.
பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியாது என்ற நிலையில், அதனைப் பயன்படுத்தி சாலைகளை அமைக்கலாம் என்ற கண்டுபிடிப்பு ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தலாம் என்பதற்கு ஒப்பானதாகும்.
பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியாது என்ற நிலையில், அதனைப் பயன்படுத்தி சாலைகளை அமைக்கலாம் என்ற கண்டுபிடிப்பு ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தலாம் என்பதற்கு ஒப்பானதாகும்.
நமது அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அந்த நாடுகளில் எல்லாம் இந்த அடிப்படையான பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பதைக் கண்டு வர வேண்டாமா? கண்டு வந்ததை நாட்டில் கொண்டுவர வேண்டாமா?
இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. ஆட்சி பொறுப்பு ஏற்றால் ஆறு மாதங்களில் மின் பற்றாக்குறையைத் தீர்ப்பதாக மக்களிடத்தில் வாக்குறுதி அளித்தனர். இப்பொழுதோ அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் தீர்ப்பதாகச் சொல்லு கிறார்கள்.
அரசியல்வாதிகளின் இத்தகு வாக்குறுதிகள்தான் அரசியல் என்றாலே, அசல் ஏமாற்றுத்தனம் என்று விமர்சிக்கும் நிலைக்கு வெகுமக்கள் ஆளாகிறார்கள்.
மின்பற்றாக்குறையைத் தீர்க்காததோடு மட்டுமல் லாமல், முன்பைவிட மோசமான நிலைக்கு ஆளாகி யுள்ளது. ஒரு மணிநேரம், இரு மணிநேரம் மின்னிறுத்தம் என்பது போய், எட்டு மணிநேரத்தைக் கடந்து சென்றுவிட்டது.
முற்றிலுமாக சிறு தொழில்கள்முதல் பெருந்தொழில் கள் வரை உறை நிலைக்கு ஆளாகிவிட்டன. உற்பத்தி நட்டம் என்பது மட்டுமல்ல; வேலை வாய்ப்பின்றி ஏழை, எளிய மக்கள் கைப்பிசைந்து நிற்கும் அவல நிலை! இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ஓர் உறக்க நிலையில் இருப்பதாகவே கடைகோடி மக்கள்வரை கருதும் - நம்பும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையை மாற்றி அமைத்திட எத்தகு திட்டம் குறித்து கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது அரசு என்கிற தகவல் கூட இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது.
அதேபோல, அடைமழை பொழிந்து பல மாதங்கள் ஆகியும் சாலைகள் பராமரிக்கப்படவில்லை. வெளியூர் களில் சாலைப் பயணம் என்பது அவ்வளவு எளிதாக இல்லை. குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன.
சென்னையில்கூட சில பகுதிகளில் இந்த அவல நிலைதான். குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அரசியல் பேசுவது, எதிர்க்கட்சிகளைப் பற்றி சதா குறைகூறிப் பேசுவதும் (சட்டப்பேரவை உள்பட) இவைதான் ஆளும் கட்சியின் கடமை என்ற நிலைப்பாட்டில் இந்த அரசு இருக்கிறது போலும்!
எதிர்க்கட்சிகளை சாதனைகள்மூலம் அடக்க வேண்டுமே தவிர, சவடால் மூலம் அல்ல என்பதைத் தமிழ்நாடு அரசு உணரட்டும்! செயல்படட்டும்!!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- முகமூடிகள் கிழிகின்றன!
- விடுதலை வைப்பு நிதி
- கேரள மீனவர்களும் தமிழ்நாடு மீனவர்களும்
- தனியார் கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வா?
- பக்தி வளர்க்கும் ஒழுக்கத்தின் இலட்சணம் பாரீர்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment