காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகிய காஞ்சி மட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, 61 நாள்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் கம்பி எண்ணி விட்டு பிணையில் வெளியில் வந்தார்.
இந்தக் கொலை வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி, குடும்பத்தினர்கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர் என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.
இந்தக் கொலையில் மிக முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆடிட்டர் இராதா கிருஷ்ணனைப் பொய்ச் சாட்சி சொல்லும்படி அடியாட்களை வைத்து ஜெயேந் திர சரஸ்வதி அச்சுறுத்துகிறார் என்று காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும்.
ஜெயேந்திரருக்கு இருக்கும் பண பலம், அப்பாவிப் பக்தர்களின் பலம், இன பலம், ஆன்மீகப் பலம், ஏடுகளின் பலம் இவற்றினைக் கொண்டு எதையும் சாதிக்கக் கூடிய நிலவரம் நாட்டில் உண்டு.
பெரும்பாலான சாட்சிகள் கலைக்கப்பட்டது குறித்து இந்தக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதன் பின்னணியைக் காவல்துறையின் உளவுத் துறை கண்டறிய வேண்டும்.
குற்ற வழக்கை விசாரித்த புதுவை நீதிபதியிடம் பேரம் பேசிய செய்திகள் ஆதாரப் பூர்வமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற பொருளாதார மிதப்பில் ஆசாமி இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கொலைக் குற்றவாளி என்ற வழக்குச் சுமத்தப்பட்ட ஒருவர் தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசி இருப்பது ஆச்சரியமான ஒன்றே!
இவர்தான் எப்படி ஆளுநரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்? ஆளுநர் தான் ஒரு குற்ற வாளியைச் சந்திக்க எப்படி ஒப்புதல் அளித்தார் என்பது சர்ச்சைக்குரியதாகி விட்டது.
படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியே இது குறித்து குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியே இது குறித்து குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயேந்திரருக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பு இன்னொரு குற்றவாளிக்கு கிடைக்கப் பெற்றி ருக்குமா?
தமக்கு நாட்டில் இன்னும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று காட்டிக் கொள்ளத் தானே இந்தச் சந்திப்பு பயன்படும்?
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராகவா ஜெயேந்திரர் நடந்து கொள்கிறார்? கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டது போல அல்லவா ஊர்தோறும் திரிகிறார்.
தொடக்கத்தில் இவர் சிறையில் இருந்து பிணையில் வெளியில் வந்த கால கட்டத்தில் இந்து அற நிலையத்துறையே சுற்றறிக்கை ஒன்றை அனைத்துக் கோவில்களுக்கும் அனுப்பியதுண்டு.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது கொலைக் குற்றம் இருப்பதால் அவரைக் கோவில் களுக்கு அழைப்பதோ, பூர்ணகும்ப வரவேற்பு கொடுப்பதோ, குட முழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தச் சொல்லி அழைப்பதோ கூடாது என்று அந்த அறிக்கை யில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தச் சுற்றறிக்கைக்கு வலிமை இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. பல கோவில்களில் குட முழுக்கில் அவர் கலந்து கொண்ட சேதிகள் ஏடுகளில் படங்களுடன் வெளி வருகின்றன. இது எந்த வகையில் சட்ட ரீதியாகவோ, சம்பிரதாய ரீதியாகவோ சரியானதாக இருக்க முடியும்?
சங்கராச்சாரியார் என்றால் சட்டத்துக்கு மேலானவரா? அந்தரத்தில் நடப்பவரா?
சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதியா - என்று சுப்பிரமணிய பாரதியாரே பாடியிருக்கிறாரே - அதுதான் இந்த 2012இலும் நடப்பா?
அரசும் நீதித் துறையும் உரியது செய்யட்டும்!
No comments:
Post a Comment