ப.சிதம்பரம் வெற்றி - கோயபல்ஸ் சு.சாமி அரிதாரம் கலைந்தது
அரசியல் தரகரும் ஆரிய ஆணவத்தின் உச்சமுமான சுப்பிரமணியன் சுவாமிக்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இரண்டாம் அலைக்கற்றை (உத்தேச) இழப்பு சம்பந்தமான வழக்கில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைக் குற்றவாளிகளில் ஒருவராகச் சேர்க்க வேண்டுமென பூமிக்கும், ஆகாயத்துக்கும் குதித்ததோடு, இவருக்கு, தான் தண்டனை வாங்கித் தரப் போவதாகவும் வாய்ப்பறை கொட்டி வக்கணை பேசினார் இந்த வர்ணாசிரமத்தின் வக்கிரமனிதர்!
உச்சநீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினையில் (நிதி அமைச்சராக இருந்தபோது), சிதம்பரம் சொல்லித்தான் - அவர் அறிவுரைப்படிதான் அமைச்சர் ஆ.இராசா, முன்னால் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைப்படி ஏலம் விடாமல் - இழப்பை ஏற்படுத்தி விட்டார் என்று கூறி எதை எதையோ ஆதாரங்கள், சாட்சியங்கள் என்று கூறினார்.
ஊடகங்கள் பர்ப்பன ஊதுகுழல்களாக இருப்பதால், இவருக்கு - ஏடுகள் - தொலைக்காட்சிகளில் அபார விளம்பரம்!
அடடா, நேற்று இவை தலை துள்ளி ஆடி தலைப்பு களிடையே மகிழ்ந்தது மிகவும் வெட்கக் கேடானவை!
அதற்குள், பா.ஜ.க. முதல் இங்குள்ள சிலர் உடனே ப.சி. பதவி விலகவேண்டும் என்று எல்லாம் தணியாத தங்கள் பதவிப் பசியைப் பரக்கக் காட்டி இப்போது பங்கப்பட்டிருக்கிறார்கள்!
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, இவர் உயர்நீதிமன்றத்திற்கு அப்பீலுக்குப் போகிறேன் என்று கூறுகிறார்!
இவருடைய வாதங்களைக் கேட்ட உச்சநீதி மன்றத்தின் இரு நீதிபதிகளே இது பற்றி தாங்கள் முடிவு செய்ய இயலாது, சி.பி.அய். நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று கைகழுவி - நழுவிக் கொண்டதே இவரது வழக்கு ஓட்டையானது; உண்மை அடிப்படையைக் கொண்டது அல்ல என்பதைப் புரிய வைக்கவில்லையா?
டில்லி சி.பி.அய்.நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி சு.சாமி மனுவைத் தள்ளுபடி செய்து, ப.சிதம்பரம் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பதையோ அல்லது சட்ட விரோதமான நோக்கத்தில் செயல்பட்டார் என்பதையோ அல்லது ஊழல் செய்யும் நோக்கத்தில் செயல்பட்டார் என்பதையோ உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆதாரங் களோ, ஆவணங்களோ இல்லை என்று ஆணித்தரமாகத் தீர்ப்பு தந்துவிட்டாரே!
பா.ஜ.க.வினர் இந்த துரும்பைப் பிடித்துத் தொங்கினார்கள்; இப்போது அவர்கள் பக்கமே பூமராங்க் ஆக அந்தக் குற்றச்சாட்டு திரும்பியுள்ளதே!
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை (First cum first served) என்ற கொள்கைத் திட்டத்தை 2003 இல் வகுத்ததே பா.ஜ.க. கூட்டணி தான் என்று போட்டு உடைக்கப்பட்டு விட்டதே. இதன்படி அமைச்சர் ஆ.இராசா எப்படி (2008-இல் பின்பற்றியதால்) குற்றவாளி ஆவார்? இதைக் கேட்கும் கபில்சிபல், ராஜாவைக் குற்றம் சுமத்த முடியுமா?
அது மட்டுமல்ல. அவரே நட்டம் பூஜ்யம்(zero loss) என்று கூறவில்லையா? அதுதானே உண்மை? இந்த ஒரு கோடி, லட்சம் என்பதெல்லாம் அனுமானத் தொகைகள் தானே?
அதனால்தானே அருண்ஷோரி கணக்கிலிருந்து, ஒவ்வொருவரும் சொன்ன கணக்கு. சி.பி.அய். குற்றப் பத்திரிகை கணக்கு வரை ஒவ்வொன்றும் ஒரு தொகையைச் சொல்வதாக இருக்கிறது?
வழக்கு நிலுவையில் உள்ளதால் - அதனுள் போக விரும்பவில்லை நாம். சு.சாமி இனி மேலும் நாடகம் நடத்தி, பகலில் வாண வேடிக்கை அரசியல் நடத்தும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். அவர் அண்மையில் கோவையில் கூறி யதைக் கூட பெரிதாகப் போட்டு மகிழ்ந்த பார்ப்பன ஊடகங் களே, உங்கள் பலூன் வெடித்துவிட்டதே!
போகப்போக உண்மைகள் வெளிவரும்!
போகப்போக உண்மைகள் வெளிவரும்!
கோயபல்ஸ் அவதாரங்களின் அரிதாரம் கலையும் நாள் தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment