Thursday, January 26, 2012

கடவுள் சர்ச்சை


கடவுள் ஒரு பொய் முகம் (The god Delusion) என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் நாத்திக அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இரத்தினச் சுருக்கமாக முற் போக்குச் சிந்தனை முத்துக்களை உதிர்த்துள்ளார். அவர் எழுதிய அந்த ஆங்கில நூல் கடவுள் ஒரு பொய் முகம் என்று மறைந்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வெளியிடப் பட்டு, சிறந்த மொழிபெயர்ப்புக்கான நூல் என்று தமிழ்நாடு அரசின் பரிசையும் பெற்றது என்பது நினைவூட்டத்தக்கதாகும்.
ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல் உலகளவில் மிக மிக அதிகமாக விற்கப்பட்டு மதவாத உலகை ஒரு கலக்குக் கலக்கி விட்டது.
அதேபோல ஜெய்ப்பூரில் அவர் பேசிய உரையும் இந்திய அளவில் பெரும் அலைகளையும் ஏற்படுத்தி விட்டது; என்னதான் இந்து போன்ற ஆங்கில ஏடுகள் அவர் உரையை இருட்டடித்துப் பார்த்தாலும் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் சென்று அடையத்தான் செய்துள்ளது.
"எனது வாழ்நாளிலேயே மதம் என்பது முற்றிலுமாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்"
மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப்படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப்படை யிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனு தாபம் காட்டப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டு வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனைக் கருத வேண்டும்.
மதம் மனிதனுக்குப் பிடித்தாலும் சரி, மிருகங் களுக்குப் பிடித்தாலும் ஆபத்தானதுதான். இதில் உள்ள கெட்ட வாய்ப்பு என்னவென்றால் மதத்தைப் பற்றி விமர்சிக்கவே கூடாது என்று செய்து வைத்திருக்கும் மோசமான ஏற்பாடாகும்.
மதம் எந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டது? மனிதன் வளர்ந்து கொண்டே வருகிறான். இந்த நிலையில் மூடத்தனத்தாலும், இயற்கைச் சூழலைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில்  அச்சத்தாலும் உருவாக்கப்பட்ட கடவுளும், மதமும், வேத நூல்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்?
இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், மனிதனின் அறிவு வளரவே கூடாது என்பதே இதன் பொருளாகக் கருத வேண்டும். எவ்வளவு சாமர்த்திய மாகக் கூறுகிறார்கள் என்றால், மதம் கடவுளால் உண் டாக்கப்பட்டது என்று கெட்டிப்படுத்தி வைத்துள்ளனர்.
இவர்கள் சொல்கிறபடி அந்தக் கடவுளுக்கு மகாசக்தி இருப்பது உண்மையானால் மதத்தைப்பற்றி விமர்சனம் செய்யும்போது, கடவுள் பார்த்துக் கொள் வார் என்று நினைக்க வேண்டுமே தவிர இவர்கள் யார் கடவுளுக்காக வக்காலத்து வாங்குவதற்கு?
மதம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறுவதாலும், அதற்குச் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தி வைப்பதாலும் எந்தக் காலத்திலோ எழுதி வைக்கப் பட்ட மதத்தின் சரத்துகள் குறிப்பிட்ட சிலருக்கு வசதியாகவும், பெரும்பாலோர்க்குப் பெரும் துன்பம் விளைவிப்பதாகவும் உரிமைகளைப் பறிக்கக் கூடியதாகவும் இருக்கிறதே - இதற்கு என்ன சொல்ல?
உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமை களுக்காகக் கிளர்ந்து எழக் கூடாது என்பது  ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா?
இதில் இன்னொரு மோசமான கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு மதக்காரர்களும் தங்கள் மதம்தான் உயர்ந்தது - சிறந்தது என்று கூறி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் இழிவான போக்காகும். மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல, வேறு காரணங்களுக்காகச் சிந்தப்படவில்லை என்பதுதான் வரலாறு கற்பிக்கும் பாடமாகும்.
இந்த நிலையில்தான் மானுடத்தின் மகத் துவத்தைப் போற்றும் வகையிலும், அறிவு வளர்ச்சிமீது கொண்ட அளப்பரிய மதிப்பீட்டின் முறையிலும் எனது வாழ் நாளிலேயே மதம் அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். நாடெங்கும் இந்தக் கருத்துப் பரவ வேண்டியது அவசியமாகும். பகுத்தறிவாளர்கள் பரப்புரை செய்வார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...