Sunday, January 22, 2012

நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலாக எங்கே நடந்தன?


நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதன் முதலாக 1850இல் முச் வென்லாக் ஷ்ராப்ஷையர் என்னு மிடத்தில் நடைபெற்றன. ஆண்டுதோறும் விளை யாட்டுப் போட்டிகள் அங்கு நடத்தப் பட்டது, 1896இல் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்த பேரன் கவ்பர்டின் (Baron Coubertin) அவர்களுக்கு தூண்டுதலாக அமைந்தது.
முச் வென்லாக் என்பது  வேல்ஸ் நாட்டின் எல்லைகளை அடுத்து உள்ள ஷ்ராப்ஷையர் என்ற நாட்டில்  உள்ள ஒரு நகரமாகும். நவீன கிரேக்க நாட்டினால் மறுபடியும் துவக்க முடியாமல் போன ஒலிம்பிக் விளையாட்டுகள் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு கிரேக்கம் காரணமல்ல; டாக்டர் டபிள்யூ.பி. ப்ரூக்ஸ்தான் (Dr. W.P. Brooks) காரணமாக இருப்பவர்.
தீவிரமான உடற்பயிற்சி திட்டத்தினால் கிறித்துவ மக்களை மதுஅருந்தச் செல்லாமல் தடுத்து நல்லவர்களாக ஆக்க முடியும் என்று ப்ரூக்ஸ் நம்பினார். பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி அவர் அறிந்திருந்தது, 1841இல் உடற்பயிற்சி கலாச்சாரத்தைப் பிரகடனப்படுத்தும் முச்வென்லாக் சங்கத்தை தோற்றுவிக்க ஆர்வத்தையும், தூண்டுதலையும் அளித்தது.
ப்ரூக் ஏற்பாடு செய்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதன் முதலாக 1850 இல் நடைபெற்றது. ஓடுதல், நீளத் தாண்டுதல், கால்பந்து, வளையம் எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறிதளவு பணப்பரிசுகள் அளிக்கப்பட்டன. கண்களை கட்டிக் கொண்டு  சக்கரவண்டி ஓட்டுதல், பன்றிப் போட்டி மற்றும் இடைக்கால கவிழ்க்கும் போட்டி போன்ற மற்ற விளையாட்டுகள் படிப்படியாக சேர்க்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கிரீடம் சூட்டப்பட்டு, கிரேக்க வெற்றி தேவதையான நைக்கின் உருவம் பொறித்த பதக்கங்கள்  வழங்கப்பட்டன.
வென்லாக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புகழ் விரைவில் உலகெங்கும் பரவியது. இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்தும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள் முன்வந்தனர். ஏதேன்சினாலும் அவர்கள் கவனிக்கப்பட்டனர். ஹெல்லனிசின் முதலாம் ஜார்ஜ் மன்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்க ஒரு வெள்ளி பதக்கத்தையும் அனுப்பி வைத்தார்.
அனைத்துலக அளவில் இந்த பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை மறுபடியும் துவக்கி நடத்தவேண்டும்  என்ற நோக்கத்துடன் 1865 இல் தேசிய (ஆங்கிலேய) ஒலிம்பிக் சங்கத்தை ப்ரூக்ஸ் தோற்றுவித்து, அதன் முதல் விளையாட்டுப் போட்டிகளை லண்டன் கிறிஸ்டல் அரண்மனையில் நடத்தினார். அந்தப் போட்டிகளுக்கு நிதி உதவி அளிக்கும் புரவலர்கள் எவரும் முன்வராத காரணத்தால், அன்றைய முன்னணி விளையாட்டு வீரர்கள் இப்போட்டிகளை அலட்சியப்படுத்தினர்.
பேரன் கவ்பர்டின் அவர்களுடனான கடிதப் போக்குவரத்தை ப்ரூக்ஸ் 1888இல் துவங்கினார். 1890இல் நடைபெற்ற ப்ரூக்கின் விளையாட்டுகளை நேரில் பார்க்க பேரன் வென்லாக் வந்தார். அவர் அங்கு அன்று நட்ட ஓக் மரம் ஒன்று இன்றும் அந்த கிராமத்தில் நிற்கிறது. பண்டைய ஒலிம்பிக் போட்டிகளை மறுபடியும் புதுப்பிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுடன் அவர் தாயகம் திரும்பினார். அதன்படி அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி 1894இல் அமைக்கப் பட்டது.
அவரது செல்வம், கவுரவம், செல்வாக்கு, அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் மூலம் ப்ரூக்ஸ் தோல்வி அடைந்த முயற்சியில் பேரன் கவ்பர்டின் வெற்றி பெற்றார்.  1896ஆம் ஆண்டு கோடையில் ஏதென்ஸ் நகரில் முதல் அனைத்துலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அவர் நடத்தினார். அதற்கு முந்தைய ஆண்டான 1895இல் ப்ரூக்ஸ் தனது 86ஆம் வயதில் இறந்துபோனார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வென்லாக் விளையாட்டுப் போட்டிகள் இன்றும்  ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...