செஞ்சீனத்தினை உருவாக்கிய மாசேதுங் பற்றி பலரும் அறிவோம்; அந்த மாசேதுங்கிற்குமுன், புதிய சீனாவை உருவாக்குவதற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர் சன்-யாட்-சென் என்ற சீன அரசியல் அறிஞர்.
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம், கன்பூஷியஸ் பெயரை எப்படி பிரபலப்படுத்தியதோ, அதே போல சன்-யாட்-சென் பற்றியும் பல மேடைகளில் திராவிட இயக்கத்தவர்கள் - தளபதிகள் அறிஞர் அண்ணா, தளபதி அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி, சி.பி.சிற்றரசு போன்றவர்கள் பேசியுள்ளனர்; பல கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
சீனாவின் மன்னராட்சி, நிலப் பிரபுத்துவ ஆட்சிகளை குடி அரசாக்கிய பெருமைக்கு மிகவும் உரிமை கொண் டாடக்கூடிய ஒருவர் டாக்டர் சன்-யாட்-சென். கிறித்துவரான இவர் ஒரு மெடிக்கல் டாக்டர். ஹவாய்த் தீவில் ஹாங்காங்கிலும் (தற்போது அது அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்று) படித்து, மேலை நாட்டு தத்துவ ஞானி களின் பரந்த முற்போக்குக் கருத்துக் களை அறிந்து, சீனாவை - ஒரு ஜனநாயகம் மிளிரும் குடிஅரசு நாடாக ஆக்கிட மிகவும் உழைத்தவர்.
கல்வியை அனைவருக்கும் பரப்பவும், சீனர்கள் இரட்டை சடை, மகளிர் பாதங்களில் இரும்புத் தண்டு அணிந்து நடப்பது இளவயதில்(Foot-binding) போன்ற பல மூடப் பழக்க வழக்கங்களை உடையவர்களாக இருந்ததை மாற்றியவர்.
1905-லேயே ஜப்பானிய மாஞ்சு குழுவி னரின் ஆதிக்கத்தை எதிர்த்த டாங் மெய் ஹீய் என்ற புரட்சிகர முன்ன ணியை Revolutionary Alliance உருவாக்கி இளைஞர் கள், மாணவர்களைத் திரட்டி எழுச்சியை உருவாக்கியவர். மாசேதுங்கை இவர் பிரச்சாரத்திற்கான முக்கிய தலைமைப் பொறுப்பாளராக வைத்திருந்தார். (பிறகு சியாங்கேஷேக் காலத்தில் இவருடன் அவர் ஒத்துப் போகவில்லை - மாற்றினார்). யுவான் என்பவரை ஆட்சித் தலைவராக்கி ஒரு அரசியல் சட்டத்தை - தற்காலிகமாக உருவாக்கியவர் டாக்டர் சன்யாட்சென். (தைவானில் நினைவு காட்சியகமே தனியாக உள்ளது).
இவரது டாவ் மெங் ஹூய் என்பதே பிறகு ஒரு புது அரசியல் கட்சி யாக கொமிங்டாங் கட்சி (கொமிங்டாங்) என்ற மக்கள் தேசிய இயக்கம் என்ற அரசியல் கட்சி ஏற்பட்டு, உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த சீனர்களின் ஆதரவு திரட்டும் பணியில் பல வெளிநாடுகளுக்கு - குறிப்பாக ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று தங்கி, அங்கே வாழ்ந்த சீனமக்களிடையே நிதி உதவி, ஆதரவு எல்லாம் திரட்டி நவீன சீனா உருவாக பெரிதும் பாடுபட்டார். இவர் 1925 மார்ச் 12 ஆம் தேதி பேஜிங்கில் - புற்று நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி, மரணமடைந்தார்.
சமூக மாற்றத்திற்கு சீனநாட்டில் உள்ள மக்களைப் பக்குவப் படுத்திட பெரிதும் உழைத்த இவர் சிங்கப்பூருக்குச் சென்று அங்கே பிரபலமான சீனப் பெருவணிகரானார்.
சீனாவை மூன்று முக்கிய தத்துவங்களை முன்னிறுத்தி இணைக்க San Min Zhu Yi என்பவைகளே அவைகள். தேசியம் (Nationalism) ஜனநாயகம் (Democracy) மக்கள் வாழ்க்கைத் தரம் (People’s livelihood) என்பதே அவை.
அப்படி ஒரு புரட்சிகர முன்னணியை உருவாக்கிய இவர் நினைவாக சிங்கப்பூர் வந்து அவர் தங்கிய அந்த இல்லத்தையே, அதற்குரிய சீனப் பெருமாட்டியும், அதன் குடும்பத்தவரும் சன்-யாட்-சென் நினைவு காட்சியகமாக (மியூசியமாக) ஆக்கி, 2003 இல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக் யுவான் க்யூ அவர்களை விட்டே திறக்கச் செய்துள்ளனர்.
பிரபல பெருமக்கள் வசித்த பகுதியாகிய பாலிஸ்டர் சாலைக்கு (Baliester Road) அருகில் அது உள்ளது. (அமெரிக்காவின் தூதுவராக சிங்கப் பூரில் இருந்தவர் பாலிஸ்டர்). அவரது பெயரே அச்சாலைக்கு அக்காலத்தில் சூட்டப்பட்டுள்ளது. மலாய் தெரு ஜாலன் ராஜா மூடா அருகில் அந்த நினைவில்லம் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு சீனப் புரட்சி வரலாறு, சன்-யாட்-சென் பங்களிப்பு, ஜப்பான் சிங்கப் பூரை வென்றபோது ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கம் - இந்த இல்லம் எப்படி சீன அமைப்பு களின் கட்சி அலுவலகமாகப் பயன்பட்டது என்பதெல்லாம் மிகவும் அருமையான வரலாற் றுச் சின்னமாக அமைந்துள் ளது. ஒரு ஆவணக் காப்பகத் திற்குள் நுழைந்த உணர்வான அதை (2 டிசம்பர் 2011) அன்று சென்று பார்த்தபோது பெற் றோம். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் கலைச் செல்வம் என்னை அழைத் துச் சென்றார். சிங்கப்பூரில் அந்த இயக்கத்திற்கு தனது இல்லத்தை அளித் தவர் கொடை வள்ளல் தயோ ஈங் ஹாக் (Teo Eng Hock) என்ற பெருந்தகை. சுமார் ஒன்றரை மணிநேரம் இரண்டு மாடிகளைச் சுற்றிப் பார்த்து - கொட்டும் மழையிலும் - திரும்பினோம்!
வெளியே சன்-யாட்-சென் சிலை கம்பீரமாக நிற்கிறது. உள்ளே மார்பளவு சிலையும், மற்ற சீனக் கலாச்சார மரபு டமைச் செல்வங்களும் தக்க விளக்கங் களோடு அமைக்கப்பட்டுள்ளன. மாலை அய்ந்தரை மணி வரை திறந்துள்ள அந்த நினைவுச் சின்னத்திற்கு நுழைவுக் கட்ட ணம் 4 சிங்கப்பூர் வெள்ளிகள் ஒருவருக்கு.
மூத்த குடி மக்களுக்கு இலவசம். நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில்லை.
ஒரு கண்காணிப்பாளர், ஒரு சீன அம்மையார் இருந்து எங்களிடம் கனி வுடன் பேசினர்! சன்-யாட்-சென் பற்றி அருமையான நூல் ஒன்றும் (விலைக்கு) கிடைத்தது!
சிங்கப்பூருக்கு தந்தை பெரியார் 1929, 1953-1954 ஆண்டுகளில் சென்றுள்ளார்கள்.
அவர்கள் தங்கிய - வரவேற்பளித்த தமிழர் சீர்திருத்த சங்கம் என்ற மணச்சை ஓ.இராமசாமி (நாடார்) - (சி.பா. ஆதித்தனாரின் மாமனார்) கட்டடத்தைக் கூட நமது தமிழர்களால் பாதுகாக்க இயலவில்லை. 1967-1968 இல் நான் முதன் முறையாக சிங்கப்பூர் - மலேசியா சென்றபோது, சிங்கப்பூரில் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தவர்கள் நட ராசன், மூர்த்தி, நாகரத்தினம், வெற்றி வேல், முருகு, சீனிவாசன், கறுப்புச் சட்டை, தங்கவேல் பலரும் வரவேற்பு அளித்து (குடும்பத்தினருக்கும்) வரவேற்பு விருந்தளித்தனர்.
அன்று அய்யா தங்கிய அந்த நினைவுச் சின்னம் - தமிழர்களின் பாரம்பரிய எழுச்சி வரலாற்றுக் கட்டடம் எப்படியோ இன்று கைவிட்டுச் சென்றுவிட்டது மிகப் பெரிய சரித்திர அநீதி! என் மனதில் சன்-யாட்-சென் நினைவை ஏற்படுத்தி பராமரிக்கும் சீனர்களின் இனவுணர்வு, மொழி உணர்வு, வரலாற்று உணர்வுடன், தமிழர் நிலை பற்றியும் எண்ணினேன். கண்ணீர்த் துளிகள்தான் கசிந்தன! தமிழ் இனம் எங்கும் இப்படித்தான் போலும்!
No comments:
Post a Comment