Sunday, December 11, 2011

எல்லாம் வல்லவனல்ல அய்யப்பன்

மா. பால்ராசேந்திரம்
கார்த்திகைத் திங்கள் பிறந்தாகி விட்டது. இளைஞர் கூட்டம் மலைக் குச் செல்ல வேண்டுமென்ற மமதையில் திரிகின்றனர். சபரிமலைச் சாஸ்தாவை வணங்கி வந்தால் மேன்மையெல்லாம் கிட்டுமென்ற பொய்யுரையினை நம்பிப் புறப்படத் தயாராகியுள்ளத் தமிழின இளைஞர்களே! சற்றுப் பொறுங்கள். சபரிமலையானுக்குச் சொல்லப்படும் கூறுகள் சரியாவெனக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
தினமலர் வார மலரில் (நவம்பர் 13,2011) அய்யப்பனை தர்ம சாஸ்தா என்பார்களாம். ஏன்? மகிஷி என்ற அரக்கியால் உலகம் அவலங்களை அனுபவித்தபோது அவளை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டியதால் தர்ம என்ற அடைமொழி பெற்றாராம் சாஸ்தா.
பட்டம் வழங்கிய பல்கலைக் கழகம் எதுவோ? உலகம் என்றால் மலை யாளம் மட்டுமா? இல்லை, தென்னிந் தியா முழுமைக்குமா? இல்லை. இந்தியா உள்ளடங்கியதா? இல்லையெனில் ஆறு கண்டங்களையும் சேர்த்த மொத்த உலகப் பரப்பா? எந்த உலகிற்கு மகிஷி அவலம் செய்தாள்? முழு உலகப் பந்துக்குமென்றால் ரஷ்யாவில், பிரான்ஸில், ஜப்பானில், கென்யாவில், கனடாவில் இருமுடிகட்டி மலையேறும் தர்மசாஸ்தா வழிபாடு காண வில்லையே _ ஏன்? சாஸ்தா கோவில் அடர்ந்த காட்டுப் பகுதி மிருகங்கள் நிறைந் திருந்தன. தனியே செல்வது ஆபத்து என்பதால் பக்தர்கள் ஒலி எழுப்பிய படியே சாஸ்தாவை வழிபடச் செல்ல வேண்டும், என்கிறது.
இயல்பாகவே காட்டு வழியில் தனியே செல்லும் யாரும் பாடியோ, கை தட்டியோ செல்வது நடைமுறைதான். 48 நாள் கடும் விரதமிருந்து செல்லும் (ஆ)சாமிக்கும் அதே கதிதானா! அய்யப்பனாகவே சாமிப் பட்டம் ஏற்றுத் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள் என மிருகங்களுக்கு ஆணையிட முடியாதவனா புலிப்பால் கறந்த சூரப்புலி அய்யப்பன்?
அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல எவ்விதப் பயமுமில்லை, என்கிறது. பயமில்லாதவன் ஏன் ஒலி எழுப்ப வேண்டும்? இது என்னடா முரண் பாடு.
பக்தர்கள், குருவின் மூலம் மாலை அணிந்து கொள்கின்றனர் என்கிறது. குருவில்லாமல் மாலை அணிய இயலாதா? அணிந்தால் அறுந்து வீழ்ந்திடுமா? எல்லாம் பார்ப்பான் பிடுங்கித் தின்ன செய்த ஏற்பாடுகள் தானே. ஆமாம், குருவுக்கு முதலில் மாலை அணிவித்தவர் யாரோ?
குருமார்கள் எக்காரணங் கொண்டும் பணத்தின்மீது நாட்டம் கொண்டிருக்கக் கூடாதாம் பணம் பெறாமல்  கடவு ளையே காட்ட மாட்டானே பார்ப்பான். பணம் பிடுங்காமல் மாலைபோடும் குருசாமி இருக்கிறார்களா? இருந்தால், கன்னிசாமி காசில் பயணம் பண்ணும் குருவாகத்தான் இருப்பார். வழிப்பறிக் கொள்ளைக்காக ஏற்பட்டது. தானே கோயில்களும் அதன் கட்டுகளும். இதிலென்ன குருசாமி வாங்காதே, தந்திரி வாங்கலாமென ஊரை ஏமாற்றுவது. கோவில் ஊழல் உலநி நாறும் ஊழ லல்லவா. 18 ஆண்டுகள் 41 நாள்கள் விரதமிருந்து பெருவழிப்பாதை மூலம் சென்று திரும்புதல் குருவின் அனுபவமாம்!
அதென்ன குருசாமி செல்லும் பெருவழிப்பாதை. மற்ற சாமியெல்லாம் செல்லும் பாதை குறுக்கு வழிப் பாதையா? இதிலேயும் சதுர்வர்ணச் சட்டங்களின் ஆதிக்கமோ? பார்ப்பன, சூத்திர நடைமுறையா? குருசாமி கிடைக்கவில்லையானால் உள்ளூர் கோவிலில் உள்ள தெய்வத்தைக் குருவாகக் கருதி மாலையணிந்து கொள்ளலாம் என்கிறது தினமலர் கட்டுரை. அப்படிப்போடு இந்து மதத்தில் இல்லாத விதிவிலக்கா எப்படியும் தான் நடந்து கொள்ளலாமே. தனக்கு வருமானம் வருகிறதென்றால் எதிலும் நீக்குப் போக்குப் பண்ணிடப் பார்ப்பனர் வகுத்த ஆகமம் இடங்கொடுத்திடுமே. அதென்ன உள்ளூர்க் கோவில் முன் மாலையணிவது அப்படியென்றால் குருவே தேவையில்லையென அடித்துக் கூறிட வேண்டியதுதானே. இந்த விதிவிலக்குகள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிடலாம் என்ற வேளையில் மட்டும் அடம் பிடித்து மாற்ற முடியாதெனச் சாதிக்கிறதே ஏன்? சிந்தித்தீர்களா! அய்யப்ப பக்தர்களே!
ஜாதியின் பெயரால் நீண்ட கால மாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களாய் வாழ்ந்தோமே அய்யப்பன் தட்டிக் கேட்டானா? மலபார், ஒத்தப்பாலம் தாழ்த்தப்பட்ட சகோதரர் சிவராமன் (வயது 17) என்பவர் ஜாதி இந்துவின்  கடையில் உப்பு எனக் கேட்டதால் அடித்தே கொல்லப்பட்டாரே அவ் விளைஞர். அரிகரபுத்திரன் அவதாரம் எடுத்து வந்து தடுத்தாரா? இல்லையே. கீழ்ஜாதிக்காரன் உப்பை புளிச்சட்டன் என்றுதான் சொல்ல வேண்டுமாம்.
கள்ளிக்கோட்டையில் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றக் கிணற்றுக்குள் குதித்தவனை நீர் தீட்டாகி விட்டதென அடித்தார்களே மனிதநேயமில்லா மாபாவிகள். ஏன் அடித்தீர்கள்? எனக் கேட்கவில்லையே சபரிமலையான்.
999 ஆண்டுகளுக்கென ஒப்பந்தம் போட்டுள்ள முல்லைப் பெரியாறு பிரச்சினையில் 143 ஆண்டுகள் கழிந்த நிலையிலேயே தமிழ்நாட்டுக்கெதிராக மொத்த மலையாளியும் வீண் ஒப்பாரி வைக்கிறானே! அந்தப் பக்கம் கொஞ்ச மாவது தன் கவனத்தைச் செலுத் துகிறானா கையப்பன். எதுவுமில்லையே. எதுவும் செய்ய மாட்டான். மக்கள் பிரச்சினையில் மாட்டிடாமல் கல்லாக இருந்திடுவான். ஆனாலும் நம் பக்தர்களுக்கு அய்யப்பன், கல்லையும், முள்ளையும் காலுக்கு மெத்தை யாக்கிடும் மாயாஜால வித்தைக்காரன். எப்போது நாம் திருந்துவது?
2003இல் மண்டல பூசை வழிபாட்டிற்குச் சென்ற 28 பேர் சாவு. சென்ற ஆண்டு புல்மேட்டில் 110 பேர் சாவு. திசம்பர் 6இல் குண்டு வெடிக்குமோவெனப் பயந்து தேங்காய் உடைக்கத் தடை. அரவணைப் பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் தீ மகரவிளக்கு அன்று சர்ச்சையால் இரு விளக்குகள். பழைய தந்திரியின் கெட்ட நடத்தையால் சன்னிதானம் வரத்தடை. ஜெயமாலா (நடிகை) கோவிலுக்குள் நுழைந்ததால் வழக்கு, இதயக் கோளாறான பக்தர்களுக்கு உயிர்வளிப் பார்கள் திறப்பு. நோயுண்ட பக்தர் களுக்காக மருத்துவர்களுடன் கூடிய மருத்துவமனைகள் அமைப்பு. இத்தனையும் நடந்ததற்குப் பின்னாலும் அரிகரபுத்திரன் அவனாக அருளு வானெனப் பயித்தியம் பிடித்து மலையேறுவது சிந்திக்கத் தெரிந்த மனிதர்க்கு அழகானதுதானா?
48 நாள் விரதமிருந்தால் நல்ல புத்தி வந்திடுமா? என்று நம் கழகப் பாடகர் பாடுவார். மொத்த அய்யப்பப் பக்தர்களுக்கும் நல்ல புத்தியைத் தருகிறானோ இல்லையோ. மலையாள மக்களுக்கு மட்டுமாவது நல்ல புத்தி யைத் தந்து, பெரியாற்றுத் தண்ணீர், பிரச்சினையில்லாமல் தமிழ்நாட்டிற்கு வரச் செய்திடலாமே அய்யப்பன்.
கேரளா ஒரு பைத்தியக்கார விடுதி என்றார் விவேகானந்தர். அதுதான் உண்மை. சக்தியில்லாத கல்லைக் காட்டி பல இலட்சம் மக்களை ஏமாற்றி எட்டே நாளில் ரூ.20 கோடியைக் கறக்கிற அரசு வாழும் ஒரு நாட்டை அப்படித்தானே சொல்ல முடியும்.
தமிழின இளைஞர்களே! மாலை யணியும் முன், இருமுடி தூக்கும் முன் சற்று சிந்தியுங்கள்.
விதியை எண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விவரம் மண்டையில் ஏறணும்
என்பார் பட்டுக்கோட்டையார். தீதும் நன்றும் பிறர் தர வருவதல்ல. அதுபோல உயர்வும், தாழ்வும் உழைப்பால் கிட்டுவதே.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்திட உழைப்போம் உயர்வோம். கட்டாக இருந்து நலமுடன் வாழ்வோம். இடையில் நமக்கேன் கடவுள், பக்தி? தள்ளிடுவோம் பார்ப்பனச் சிந்தனை களை, வளர்த்திடுவோம் தந்தை பெரியாரின் கருத்துகளை. எல்லாம் வல் லவனல்ல அய்யப்பன். எல்லா வல்ல மையும் பெற்றது அய்யா பெரியாரின் மண்டைச் சுரப்புத்தான் என்பதை மறவாது வாழ்ந்திடுவோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...