காந்தியார் குல்லாய் அணிந்து நாட்டையே ஊழல் புயலில் இருந்து காப்பாற்றிட ஒரு பரிசுத்த யோவான் புறப்பட்டுள்ளார். அவர் பெயர் அன்னா ஹசாரே.
நாட்டில் ஊழல்கள் புழுத்துவிட்டன; உண்மைதான், அவை ஒழிக்கப்பட வேண்டியதுதான், தேவைதான்.
அதை ஒழித்துக்கட்டுவதற்கு முன்வந்துள்ளாரே - இவர் யார்? வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள்! என்று சொல்வதுண்டு.
ஊழலை ஒழிக்கப் புறப்பட்டதாக அவதாரம் எடுத்துள்ளவர்களையும், அவர்களின் பக்க வாத்திய ஊடகங்களையும் நோக்கி சில வினாக்கள்:
1. அன்னா ஹசாரே மற்றும் அவர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஊழ லுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு இது வரை முறையான பதில்கள் கிடைக்கப் பெற் றனவா?
2. பிரதமர் உள்பட இந்த லோக்பாலுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார் களே - அப்படியென்றால் இவர்கள் பிரதமர் பதவிக்கும் மேலான அதிகாரம் படைத்தவர் களா?
3. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி ஒரு குழுவின் முன் கைகட்டி நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
4. அன்னா ஹசாரேவைச் சுற்றி இருப்ப வர்கள் - அந்தக் குழுவினர் எந்த அடிப்படை யில் தகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்?
5. ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் குழுவில் இடம்பெறுவர் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்கு? பூனைக்குப் பேன் பார்க்கவா?
6. சகல அதிகாரம் படைத்ததாகக் கருதப் படும் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் எதற்கு? உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குமேல் தீர்ப்புக் கூறும் அதிகாரம் படைத்தவர்களா இவர்கள்?
7. சரி, இந்த லோக்பால் குழுவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் - இவர்களை விசாரிக் கும் அமைப்பு எது?
8. அன்னா ஹசாரேயை சுற்றி பி.ஜே.பி.யும், சங் பரிவாரைச் சேர்ந்தவர்களும் சூழ்ந்து காணப்படுகின்றனரே - இந்த நிலையில், இவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் களாக இருக்கிறார்களா?
9. நாங்கள் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் அன்னா ஹசாரே இந்தச் செய லில் ஈடுபட்டுள்ளார் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் விஷ்ணு பகவத் போட்டு உடைத்தாரே - இதுவரை இதற்கு மறுப்புக் கூறப்பட்டதா?
10. லோக்பால் குழுவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அங்கம் வகிக்கவேண்டும் என்ற கருத்து உருவாக்கத் தில் சிறுபான்மையினரை இடம்பெறச் செய்யக் கூடாது என்று பி.ஜே.பி.யினர் கூறுவது இந்துத்துவா மனப்பான்மைதானே?
அப்படிப் பார்க்கப் போனால், தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார் களே - அவர்கள் இந்துக்கள் இல்லையா? இது மட்டும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகமாட் டார்களா? சமூகநீதியைப் புறந்தள்ளுவதுகூட மதவாதம் அல்லவா?
11. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் இருக் கிறார்களே - இவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா?
12. சினிமாக்காரர்கள்கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே - இவர்கள் கறுப்புப் பணம் வாங்குவதில்லையா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாணயமான முறையில் விடையைத் தெரிவித்துவிட்டு, ஊழலைப்பற்றிப் பேசினால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது!
விடுதலை தலையங்கம் 28-12-2011
No comments:
Post a Comment