உலகில் அதிக அளவில் உள்ள சாதாரண பறவை எது?
கோழிதான் உலகில் அதிக அளவில் உள்ள சாதாரண பறவையாகும்.
உலகில் 5,200 கோடி கோழிகள் உள்ளன. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் 9 கோழிகள் என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றில் 75 விழுக்காடு கோழிகள் உண்ணப் பட்டுவிடும். ஆனாலும், கடந்த 3000 ஆண்டுகளாக முக்கியமாக அவற்றின் முட்டைகளுக்காகத்தான் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. ரோமானியர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வரும் வரையிலும், கோழி என்ற பறவையை உண்ணலாம் என்று எவருக்குமே எப்போதுமே தோன்றவில்லை.
சிவப்பு காட்டுக் கோழி (Red Jungle Fowl) என்றழைக்கப்பட்ட, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த, ஒரு வகையான கோழியில் இருந்து தோன்றியவைதான் இப்போதுள்ள அனைத்து கோழி வகைகளும். அதன் நெருங்கிய அண்மைக்கால உறவினர் சண்டைக் கோழியாகும். 1800 ஆம் ஆண்டில்தான் அதிக அளவில் கோழிகளும் முட்டைகளும் உற்பத்தி செய்யப்படுவது தொடங்கியது. முட்டை தயாரிப்பின் ஒரு உப தொழிலாக கோழி இறைச்சி உண்பது ஆனது. முட்டையிட இயலாத வயதான கோழிகள் மட்டும்தான் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு விற்கப்பட்டன. 1963 ஆம் ஆண்டிலும் கூட கோழி இறைச்சி வசதியானவர்களால் மட்டுமே உண்ணப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டு வரையிலும் கூட, பெரும்பாலான குடும்பங்களில் கோழி இறைச்சி உணவாக இடம் பெறவில்லை. இன்றோ இங்கிலாந்து நாட்டில் உண்ணப்படும் மொத்த இறைச்சியில் சாதி இறைச்சி கோழி இறைச்சிதான். ஹார்மோன் சிகிச்சை அளித்து, தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக, ஒரு கோழிக் குஞ்சை பருவமடையச் செய்வதற்கு நாற்பது நாட்கள் வளர்த்தாலே போதுமானது. இயற்கை அனுமதிக்கும் வளர்ச்சி வேகத்தைப் போன்ற இருமடங்கு வேகத்தில் அவை வளர்கின்றன.
உலகில் வளர்க்கப்படும் மொத்த கோழிகளில் 98 விழுக்காடு கோழிகள் மூன்று அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கிய கோழி இனங்களின் வழித் தோன்றல்களே ஆகும். உணவுக்கு மட்டுமே ஆன பிராய்லர் கோழிகளில் பாதிக்கும் மேற்பட்ட கோழிகள் 1970 இல் உருவாக்கப்பட்ட காப் பிரீடிங் கம்பெனியின் (Cobb Breeding Co) காப் 500 (Cobb 500) கோழி இனத்தைச் சேர்ந்தவையாகும். 1500 க்கு முன்பு அமெரிக்காவில் கோழிகளே இருக்க வில்லை. ஸ்பானிஷியர்களால் அமெரிக்காவில் கோழி அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் உற்பத்தியாகும் மொத்த கோழிகளில் மூன்றிற்கும் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட கோழிகள் கிராம்பியன் கன்ட்ரி புட்ஸ் க்ரூப் (Grampian Country Foods Group) என்ற ஸ்காட்லாந்து நிறுவனத்தால் உருவாக்கப் பட்டவையாகும். அனைத்து சூப்பர் மார்கெட் வலைப்பின்னல் அமைப்புகளுக்கும் அவர்கள்தான் கோழி சப்ளை செய்தனர். கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக நன்கொடை அளிப்பவர்கள் இந்த நிறுவனமே ஆகும். தங்களது எட்டு கோழிப் பண்ணைகளிலிருந்து வாரத்திற்கு 38 லட்சம் கோழிகளை அவர்கள் உற்பத்தி செய்து அனுப்புகின்றனர். இந்த பண்ணைகளில் ஒன்று தாய்லாந்தில் உள்ளது. உண்பதற்காக விற்கப்படும் இறைச்சி கோழிகளில் பெரும்பாலானவை பெண்கோழிகளே. உண்பதற்காக ஆண் கோழிகளுக்கு விதையடிக்கப்பட்டது. தற்போது ஹார்மோன்கள் மூலம் வேதியியல் முறையில் ஆண் கோழிகளின் விதைகள் மெலியச் செய்யப்படுகின்றன. கோழிக்கால் என்பதற்கு தொழிற் பெயர் பாதங்கள் (Paws) என்பதாகும். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கோழிக் கால் களில் பெரும்பாலானவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 3000 கோடி கோழிகள் சீனாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment