கடவுளுக்குமேல் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் கருதுபவர்கள் இந்தப் பார்ப்பனர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே பிராமணர்களுக்குத் தான் என்கிறது மனுதர்மம்.
இதனை நடைமுறைப்படுத்தி உறுதிப்படுத்தும் பல வேலைகளைப் பக்தியின் பெயரால் ஏற்பாடு செய்தும் வைத்துள்ளனர்.
கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகராகப் பணியாற்ற முடியும்.
பார்ப்பனர்களின் மொழியான சமஸ்கிருதம் தான் தெய்வமொழி - அதனால் மட்டுமே வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
கோவிலில் விழாக்களில் உற்சவமூர்த்தியினை (மூலக் கடவுளின் பிரதி) ஊர்வலமாகப் பல்லக்கில் தூக்கிச் செல்லும்போது பார்ப்பனப் புரோகிதரையும் தூக்கிச் சுமக்கும் ஏற்பாடும் இந்த வகைகளைச் சார்ந்ததே!
கருவறைக்குள்ளிருக்கும் கடவுளும் சாமி என்றால் பார்ப்பனர்களும் சாமி என்று அழைக்கப்படும் ஒரு நிலை நாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டால், இந்த சூழ்ச்சியின் வேர் எப்படி எல்லாம் பதிந்துள்ளது என்பது எளிதில் விளங்கும்.
பார்ப்பன சங்கராச்சாரியார்கள் முதல் பண்டார சன்னதிகள் வரை பல்லக்கில் தூக்கிச் செல்லுவதைக் கண்டித்தது - எதிர்த்தது - போராடியது தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகமாகும்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மேனாவில் (பல்லக்கில்) தூக்கிச் சென்றனர்.
தந்தை பெரியார் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சங்கராச்சாரியார் மூடு பல்லாக்கு சென்று கொண்டிருந்தது.
இதுகுறித்து தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார். மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து கொண்டு போகிறாரே - இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லா சுகங்களையும் துறக்க வேண்டும்.
இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரை துறவி என்று எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்று பெரியார் முழங்க, அதனைக் காதில் வாங்கிய சங்கராச்சாரியார் அன்று முதல் பல்லக்கில் செல்வதை விட்டு விட்டார் என்று காஞ்சி சங்கராச்சாரியாரோடு 40 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்த லட்சுமி நாராயணன் எனும் பார்ப்பனர் கூறியுள்ளார் (சக்திவிகடன்).
திருவாவடுதுறை சந்நிதானம் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்ட போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்பட்டது. அதன் காரணமாக பட்டணபிரவேசம் என்பது ஒழிக்கப்பட்டு விட்டது.
சிறீரங்கம் ரங்கநாதன் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத முறை ஒன்றைக் கடைபிடித்து வருகின்றனர். ரெங்கநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகப் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசர், பராசரபட்டர் ஆகியோரை கோவில் உள் பிரகாரத்திலிருந்து அவர்களின் வீடு வரை பல்லக்கில் சுமந்துவரும் பழக்கம் இருந்து வந்தது.
இதுகுறித்து சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மண்டல மாநாட்டில் (8.11.2010) உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமைக்கு எதிரான செயல் நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தாவிடின் திராவிடர் கழகம் களத்தில் இறங்கி மறியலில் ஈடுபடும் என்று அறிவித்தார்.
திராவிடர் கழகத்தின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் இவ்வாண்டு, மறுபடியும் பார்ப்பனர்களை பல்லக்கில் சுமந்து செல்லும் பிரம்மரத முறையை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
அகில பாரத இந்து மகாசபை, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து வெறி அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. சிறீரங்கம் முழுவதும் பிரம்ம ரத முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளையொட்டியுள்ளனர்.
மனித உரிமைக்கு எதிராகவும் உயர்நீதிமன்ற ஆணைக்கு மாறாகவும், இந்து மத வெறி அமைப்புகளின் பின்னணியோடு பல்லக்கில் பார்ப்பனர்களை வைத்துத் தூக்கிச் செல்லும் கேவலம் அரங்கேறுமானால், திராவிடர் கழகம் அதனை முறியடிக்கும் - மறியல் செய்யும் என்று சீறிரங்க மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட எச்சரிக்கையை மீண்டும் நினைவூட்டுகிறோம், செயல்படுத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்திலும்கூட பார்ப்பனர்களின் உணர்வு எத்தகைய தாக இருக்கிறது என்பதைத் தமிழர்களே புரிந்து கொள்வீர். மீண்டும் நினைவூட்டுகிறோம்.
No comments:
Post a Comment