Tuesday, November 29, 2011

கால்களை மறைக்கும் ரப்பர் காலணிகளைக் (Boots) கண்டுபிடித்தவர்கள் யார்?



கால்களை மறைக்கும் ரப்பர் காலணிகளைக் (Boots) கண்டுபிடித்தவர்கள் யார்?
நினைவு தெரிந்த காலத்துக்கு முன்பே உடனடியான ரப்பர் காலணிகளைக் கண்டுபிடித்தவர்கள் அமேசான் பழங்குடி மக்களான இந்தியர்கள்தான்.  இரப்பர் மரப்பால் உலரும் வரை அதில் முழங்கால் வரை அமிழும்படி அவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். தோலினால் ஆன இத்தகைய காலணிகள் 1817 இல் வடிவமைக்கப்பட்டு, வெல்லிங்டன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டது.
ஆடைக்கு இரப்பரைப் பயன்படுத்த முதன் முதலாக  மேற்கொள்ளப்பட்ட முயற்சி பெரும் தோல்வியடைந்தது. வெப்பம் நிறைந்த சீதோஷ்ண நிலையில் அது உருகி மனிதரின் உடலில் ஒட்டிக் கொண்டது. குளிர் நிறைந்த நிலையில் அது கருங்கல்லைப் போன்று கடினமாக ஆகிவிட்டது. 1839 இல் வீட்டு ஸ்டவ் ஒன்று வெடித்ததால் சிந்திய கந்தகத்துடன் தற்செயலாக இரப்பர் சேர்ந்த போதுதான் இதற்கு மாற்று வழி கிடைத்தது. சார்லஸ் குட் இயர் என்பவர் இரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்து சூடாக்கி இப்போது உள்ள ரப்பரைக் கண்டுபிடித்தார். அவரது கதை மாறி மாறி ஆர்வம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், சோகமானதாகவும் அமைந்தது.
தனது வாழ்நாள் முழுவதிலும் கடுமையான வறுமையால் அவர் வாடினார்.  அவரது 12 குழந்தைகளில் 6 பேர் சத்துணவுக் குறைவால் இறந்துபோயினர். என்றாலும் அவருக்கு இரப்பரைப் பற்றிய எண்ணமே வெறியாக இருந்தது. தாவரத் தோல் என்று அவர் அழைத்த இரப்பரின் தன்மையைப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மேம்படுத்தும் முயற்சியை அவர் கைவிடவே இல்லை.
தன்னை அறியாமல் தற்செயலாக அவர் கண்டுபிடித்தது இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தது. இரப்பருக்கு ஒரு நிலையான பண்பை அது அளித்தது. இக் கண்டுபிடிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் தனது மாதிரிகளை தாமஸ் ஹேன்கான் மற்றும் சார்லஸ் மேகின்டோஷ் என்னும் ஆங்கிலேயர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் புகழ் பெற்ற இரப்பர் வியாபாரிகளாக ஆகி பெருவெற்றி பெற்றனர். குட்இயரின் கண்டுபிடிப்பைப் பகுத்தாய்வு செய்த அவர்கள், மறுபடியும் அந்த நடைமுறைப்படி ரப்பரைத் தயாரித்து அதற்கு 1843 இல் காப்புரிமையும் பதிவு செய்தனர். அதற்கு அவர்கள், ரோமர்களின் தீக்கடவுளின் பெயரான  வல்கனைசேஷன் என்று பெயரிட்டனர்.  அவர்கள் மீது குட்இயர் வழக்கு தொடர்ந்தார் ; ஆனால் வெற்றி பெற முடியவில்லை. கடனுக்காக அவர் சிறையில் வாட நேர்ந்தது.  சிறைச்சாலையை தனது ஓட்டல் என்று அழைக்கவே அவர் விரும்பினார். கடன்களில் மூழ்கிய நிலையில் அவர் இறந்து போனார். என்றாலும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காகவும், விடாமுயற்சிக்காகவும் அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார். அவர் ஒரு முறை எழுதினார்: வாழ்க்கை என்பது டாலர் சென்ட்டை வைத்து மட்டுமே மதிப்பிடப்படக் கூடியது அல்ல. நான் விதைத்ததை மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள் என்று நான் புகார் கூறத் தயாராக இல்லை. ஒருவன் விதைத்து விட்டுப் போனதை எவருமே அறுவடை செய்யாமல் போனால்தான் வருத்தப் படவேண்டும்.
அவர் இறந்ததற்கு நாற்பது ஆண்டுகள் கழித்த பிறகு,  அவர் நினைவை என்றும் போற்றும் வகையில் இன்று உலகின் மிகப் பெரிய இரப்பர் நிறுவனமாக உள்ள குட்இயர் டயர் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு அவரது பெயரைச் சூட்டி பெருமைபடுத்தியது. 2005 இல் அவர்களது வியாபாரம் மட்டும் 1970 கோடி டாலர்களாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...