ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர் - இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம் பூண்டோடு அழிக்கப்படும் ஒரு பாசிச செயலை இலங்கை சிங்கள அரசு செய்து வந்தது - வருவது ஒரு புறம்.
இன்னொரு புறம் தமிழக மீனவர்கள் பிரச்சினை. 1974, 76-களில் இந்திய அரசு இலங்கை அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வு நாளும் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவுக்கு ராஜதந்திர நடவடிக்கை தேவை பட்டால் அவர்கள் பலிக் கிடாவாக பயன்படுத்துவது தமிழர்களைத் தான்!
ஈழத்தில் தமிழருக்கு இன்னல்; தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் என்பவற்றில் 10 இல் ஒரு பாகம் பஞ்சாப் மக்களுக்கு இன்னொரு நாட்டில் நடந்திருக்குமே யானால் இந்தியாவே பற்றி எரிந்திருக்கும்.
தமிழர்களின் மரத்துப் போன உணர்வை இந்திய அரசு வசதியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்ற குற்றச்சாற்றிலிருந்து இந்தியா தப்பவே முடியாது.
1989 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப் பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 572 பேர்கள் என்பது அரசாங்கக் கணக்கு. உண்மையில் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும்.
மீன் வலைகள், படகுகள் சேதப்படுத்தப்பட்டது உட்பட இந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட இழப்பு ரூ.25,522 கோடியாகும்.
தொடக்கத்தில் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கலாம் என்றிருந்த ஒப்பந்தத்தின் பிரிவு பிறகு நீக்கப்பட்டது - தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு செய்த மாபெரும் துரோகமாகும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம் படுகொலை செய்யப்படும் பொழுதெல்லாம் மாநில அரசு மத்திய அரசுக்குத் தெரிவிக்கும், மத்திய அரசு இயந்திரக் கதியாக, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளும்; இலங்கை சிங்கள அரசோ இந்திய அரசின் வேண்டுகோளைக் கிஞ்சிற்றும் மதித்தது கிடையாது.
உலகின் சக்தி வாய்ந்த இராணுவ பலத்தில் நான்காவது இடத்தில் இந்தியா இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் சுண்டைக்காய் இலங்கை அரசோ இந்தியாவின் வேண்டுகோளைத் துச்சமாக மதிக்கும் அவல நிலைதான்.
இந்தப் பிரச்சினையில் மேலும் மோசமான நடவடிக்கை அணுகுமுறைகளை மத்திய அரசு இப்பொழுது மேற்கொண்டிருப்பது கடும் கண்டனத் துக்கு உரியதாகிவிட்டது.
இந்திய - இலங்கைக் கடல் எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே உள்ள குறிப்பிட்ட கடல் பகுதியினை மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி என்று ஒப்புதல் அளித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்தியக் கடலோரக் காவல்படை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது மன்னிக் கப்படவே முடியாத கொடுஞ்செயலாகும்.
தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் இது குறித்து தி.மு.க. சார்பில் நாடாளு மன்றத்தில் எதிர்த்துக் குரல் எழுப்பப்படும் என்று கூறியிருப்பதும், தமிழ் நாடு முதல் அமைச்சர் அவர்கள் பிரமருக்குக் கடிதம் எழுதி இருப்பதும் வரவேற்கத் தக்கவையாகும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச் சினையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சுருதி பேதம் இல்லாமல் குரல் கொடுப்பது அவசியமாகும்.
இந்தியக் கடலோரக் காவல்படை உயர்நீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது என்றால், தன்னிச்சையாக அவ்வாறு செய்திருக்க முடியாது. கண்டிப்பாக மத்திய அரசின் சம்மத மில்லாமலும் இது நடந்திருக்கவே முடியாது.
இந்த மனிதாபிமானமற்ற, தமிழர்களை வஞ்சிக்கும் பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழக மீனவர் பிரச்சினையாக இருந்தாலும் சரி மத்திய அரசு தொடர்ந்து நடந்து கொண்டு வரும் போக்கு வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியவை யாகும்
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உறுதி செய்யப்படவேண்டும். இதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க முடியாவிட்டால், கச்சத் தீவினை மீட்கும் வேலையில் இறங்கியாக வேண்டும்.
மயிலே மயிலே என்றால் இலங்கை அரசு இறகு போடாது என்பதை இந்திய அரசு புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் ஒருமித்த வேண்டுகோளாகும்.
No comments:
Post a Comment